Images
  • vali

வலி...

வழி தெரியாமல் திக்குமுக்காடும் தருணங்கள் பல வாழ்க்கையில் வந்துபோகும். மழையும் வெயிலும் சங்கமிக்கும் வேளையில்தான் வானவில் பிறக்கும் என்பார்கள். ஆனால், வலியைப் பொறுத்துக்கொள்ளும் பக்குவத்தைப் பெறுவதில்தான் எத்தனை ரணம்.

மனவலி, உடல்வலி என அது இருவகைப்படும். உடல்வலிக்கு மருந்துண்டு. ஓய்வு எடுத்தால் தானாகக் குணமாகும். மனவலி… சற்று கொடூரமானது. அதற்கும் மருந்து உண்டு. ஆனால் வலியைக் கையாள்வதற்குச் சுற்றியிருப்போரின் புரிந்துணர்வு மிக முக்கியம். 

அதை விட, நாம் நம்மீது காட்டும் கருணை அத்தியாவசியமான ஒன்று.

பிறருக்குப் புரியாது நான் படும்பாடு. இப்படி மனத்திடம், எத்தனை முறை நீங்கள் இதுவும் கடந்து போகும் எனச் சமாதானம் கூறியிருப்பீர்கள்? உங்களை நீங்களே பக்குவமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியின் மூலம் அறியலாம்.

போதிய தூக்கம். பிடித்தவர்களுடனான கலந்துரையாடல். வலியைத் தரும் விவகாரத்திலிருந்து சற்று விலகி இருப்பது நல்லது.

சிறிது காலம் சென்று, நடந்ததை நிதானமாக ஆராய்ந்து பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

நடந்தவற்றுக்கு என்ன காரணம் எனப் புலப்படும். தவறு உங்களுடையது என்றால் திருத்திக் கொள்ளுங்கள். அதற்கான வழியை நாடுங்கள். பிறரின் குற்றம் அது என மனம் சொன்னால், அதற்கும் என்ன தீர்வு என ஆலோசியுங்கள்.

வலி ஏற்பட்ட சம்பவத்தை மீண்டும் மீண்டும் மனத்தில் திரைப்படம் போலப் பார்ப்பது மனரீதியான குழப்பங்களுக்கு வழிவிடும். பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல. அவரின் அன்புக்குரியவருக்கும்தான்.

வாழ்க்கை எனும் பாதை பூக்கள் நிறைந்தது. அந்த அழகிய மலர்களில் முட்களும் உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொண்டால், வாழ்க்கை இனிமையானதாகும்.

வலியைக் கண்டு அஞ்சாதே! அது கற்றுக்கொடுப்பதைத் துணிச்சலுடன் எடுத்துக்கொள் எனப் பெரியவர்கள் கூறுவதுண்டு.

அடுத்த முறை, விதி மீது பழிபோடாமல், வல்லமையாகச் செயல்பட முடியும் என இதயத்திடம் சொல்லுங்கள். அது பண்படுத்தும்.

மாற்றம் ஒன்றே மாறாதது எனப் புரிந்துகொண்டால், வலியினால் ஏற்படும் மனவேதனை சற்றுக் குறையலாம். ஆனால் எதிர்பார்ப்பதுதானே மனித குணம்.

பெரும்பாலும் தோல்வியில் வலி பிறக்கும். அதற்குப் பின்னர் வரும் வெற்றி இரட்டிப்புச் சுகத்தைத் தரும் என்பதும் உண்மையே. வாழ்க்கையில் மகிழ்ச்சியாகப் பல வெற்றிகளைப் பெற்றிருக்கும் ஒரு நபர், ஆரம்பக் காலத்தில் பல இன்னல்களையும் சவால்களையும் கடந்துதான் வந்திருப்பார். 

மனத் திடத்தையும் தன்னம்பிக்கையும் வளர, வலி முக்கியப் பங்கு வகிக்கிறது.
வலியைச் சாதகமாகப் பார்க்கப் பழகிக்கொண்டால், எந்தப் பிரச்சினையையும் புன்னகையுடன் கையாளும் திறன் வரன் போல அமையும்.

வெற்றி கிடைக்கும்வரை வலியுடன் போராடும் மனோதைரியம் ஒருவருக்கு வந்துவிடும். தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும் தம்மை மேம்படுத்துவதற்கும் தூண்டுகோலாக அது அமையும்.

எதிர்காலத்தில் பிறருக்கு ஆலோசனைகளை வழங்கும் தகுதியையும் அது நமக்குத் தரும். பிறரை ஏளனமாகப் பார்க்கக்கூடாது என்பதை அந்த வலி நமக்கு நினைவூட்டும்.

வலி. இரண்டே எழுத்து.

ஆனால் அதன் சக்தி பெரிது. அதனை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் நம் உலகம் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருப்போரின் வாழ்க்கையும் மாறக்கூடும்.

 

உங்கள் கருத்து

Top