Images
  • 29Jan Pesuvoma sathia

ஆண் பாவம்

“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது,

கருடா சௌக்கியமா?

சூரியகாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை பலர் கேட்டிருக்கலாம்; சிலர் கேள்விப்பட்டிருக்கலாம்.

நானும் அடிக்கடி கேட்டு, முணுமுணுத்த பாடல்தான் இது.

ஆனால் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இந்தப் பாடலை மீண்டும் கேட்க நேர்ந்தபோது என் மனத்தில் உதித்தது ஒன்று. அதுவே என்னை எழுத...இல்லை, இல்லை...'தட்டச்சு' செய்யத் தூண்டியது இன்று.

அப்படி என்ன எனக்குத் தோன்றியது என்று நினைக்கிறீர்களா? அதுதான் 'சமத்துவம்'.

உடனே, 'போச்சுடா! இதோ கிளம்பிவிட்டார் இன்னொரு பாரதி, பெண் சமத்துவத்தைப் பரைசாற்ற!' என்று புறப்பட்டுவிடாதீர்கள் ஆண்களே. நான் பேச நினைப்பது பெண் சமத்துவத்தைப் பற்றி அல்ல, ஆண் சமத்துவத்தைப் பற்றி.

ஒருமுறை நான், இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது.

அதில், ‘பெண்ணுக்கு சுதந்திரம் உண்டா, இல்லையா’ என்ற தலைப்பில் இரு குழுவினர் வாதிட்டுக்கொண்டிருந்தனர்.

‘சுதந்திரம் இல்லை’ என்ற அணி

பெண் : அந்தக் காலமாக இருந்தாலும் சரி, இந்தக் காலமாக இருந்தாலும் சரி! பெண்களுக்கு சுதந்திரம் என்றுமே இருந்ததில்லை. எப்போதும் அவள் ஆணுக்கு அடங்கியே நடக்கவேண்டியுள்ளது.

நடுவர் : சரி, இப்போது சுதந்திரம் உண்டு என்று வாதிடும் அணியிலிருந்து பேச ஒருவர் வருகிறார்.

‘சுதந்திரம் உண்டு’ என்ற அணி

ஆண் : நடுவர் அவர்களே, இவ்வளவு நேரம் பேசிய அந்தப் பெண்ணிடம் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்.

நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன் உங்கள் கணவரிடம் அனுமதி பெற்றீர்களா?

பெண், சிரித்துக்கொண்டே ‘இல்லை’ என்று தலையாட்டுகிறார்.

ஆண் : இவ்வளவு நேரம் பெண் ஆணுக்கு அடங்கி நடக்கவேண்டியுள்ளது என்று வாதாடிய இவர் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்குக் கணவரிடம் அனுமதி கேட்கவில்லை. சுயமாக முடிவெடுத்து, சொந்த விருப்பத்தின் பேரில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள இவர், பெண்ணுக்கு சுதந்திரம் இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

நடுவர் : அது சரி! அந்தப் பெண் தன் கணவரிடம் அனுமதி பெறாதது உங்களுக்கு எப்படித் தெரியும்?

ஆண் : ஏனென்றால் அந்தப் பெண்ணின் கணவனே நான்தானே!

நகைச்சுவைக்காக ஒருவேளை அந்த ஆடவர் அப்படிக் கூறியிருக்கலாம். இருந்தாலும் அதைப் பற்றி நாம் கொஞ்சம் பேசுவோமா?

கணவரிடம் அனுமதி கேட்பது பெண்ணுக்கு அவமானமா?

உண்மையில் பெண் சுதந்திரம் என்றால் என்ன? ஆணுக்குச் சமமாக நடத்தப்படுவதா? ஆணை வெல்வதா?

ஆணுக்குச் சமமாக நடத்தப்படவேண்டும் என்று அன்று தொடங்கிய போராட்டம், இன்று ஆணை முந்துவதில் குறியாக இருக்கிறது.

ஒரு காலத்தில் ஆண் வேலைக்குச் சென்றான். பெண் வீட்டில் இருந்து குடும்பத்தைக் கவனித்தாள். ஆண் மட்டும்தான் வேலைக்குச் செல்லவேண்டுமா? பெண் வேலைக்குச் செல்லக்கூடாதா? நான் என்ன அடிமையா? போன்ற கேள்விகள் பெண்ணுக்குள் எழுந்தன. வேலைக்குச் சென்றாள்.

இதுவரை எல்லாம் சரிதான். ஆனால், 'நானும்தான் வேலைக்குச் செல்கிறேன். ஆகவே நீயும் வீட்டுவேலை செய்யவேண்டும்' என எப்போது ஆணுடன் வாதிடத் தொடங்கினாளோ, அப்போதே பிரச்சினைக்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது.

‘நீ நண்பர்களுடன் இரவு முழுவதும் நேரம் செலவிடுகிறாயா? நானும் செலவிடுவேன்.’

‘நீ உன் விருப்பம் போல் உடையணிகிறாயா? நானும் அணிவேன்.’

இப்படி, பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இவை போன்று எல்லாவற்றிலும் ஆணுக்கு ஈடாக இல்லை, ஆணுக்கு மேலாகச் செயல்பட விரும்பும் பெண்கள், கணவருக்குக் காலங்காலமாகக் கொடுக்கப்பட்டுவந்த மரியாதையைக் கொடுக்க மறுக்கின்றனர்; கணவரின் மரியாதையைப் பெறத் தவறுகின்றனர்.

ஒருவருக்குத் தகுந்த மரியாதையைக் கொடுக்காமல், அவர்களிடமிருந்து அதை எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம்?

ஒரு பேட்டியில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கூறியிருந்தார், ‘குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மட்டும் எனக்கு ஆண் போதும்,’ என்று.

எங்கிருந்து வந்தது அப்படிப் பேசும் துணிச்சல்? யார் கொடுத்த தைரியம் அது?

பணமும் புகழும் இருந்தால் ஆணை மட்டம் தட்டிப் பேசலாமா? ஆணை அவமதித்துத்தான் பெண் தன்னைப் பெருமைப்படுத்திக்கொள்ள வேண்டுமா?

ஒருவேளை ஒரு பேச்சுக்கு... குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்குப் பெண் தேவை என்று ஓர் ஆண்மகன் கூறுவதைப் போல் நினைத்துப் பாருங்கள். அவ்வளவுதான்! பெண்கள் எல்லோரும் போர்க் கொடி தூக்கியிருப்பார்கள்.

யார் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி... பெண்களுக்கான சமத்துவத்தை ஆண்கள் எப்போதோ மதிக்கத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில்.

ஆனால் இன்றும் சிலர் சமத்துவத்தின் அர்த்தம் புரியாமல், பெண்ணுக்குச் சமத்துவம் வேண்டும் என்று சொல்வது fashion statement போன்று ஆகிவிட்டது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்ற காலம் போய் ஆணைவிட அதிக உரிமை கோரும் காலம் வந்துவிட்டது பெண்களுக்கு.

ஒருவேளை அந்தப் பாடலில் வருவது போல், யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமாக இருக்குமோ?

இதுவரை பேசியது,

சத்தியா ஜெயபாண்டியன்


உங்கள் கருத்து

Top