Images
  • 2Feb Pesuvoma prasu (1)

கதை கேட்க காது கிடைக்குமா?

நாம், சுக துக்கங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது இயல்பு, அவசியமும்கூட. நெருக்கமான ஒருவருடன்தான் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வோம். அதாவது, தாய் தந்தை, சகோதரர்கள், உறவினர், மனைவி, கணவன், நெருங்கிய நண்பர்கள் ஆகியோர்.

பொதுவாக மகிழ்ச்சியான தருணங்களைக் காட்டிலும் வேதனையும் இன்னலும் தரும் விஷயங்களைத்தான் யாருடனாவது பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று மனம் ஏங்கும். காரணம், துயரத்தைத் தாங்கும் சக்தி ஓரளவுக்கு மேல் பெரும்பாலோருக்கு இருக்காது.

துயரத்தை ஒருவருடன் பகிர்ந்துகொள்ளும்போது மனத்தில் சுமை குறைகிறது. காரணம், நமது பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்பதற்கு ஒருவர் இருக்கிறார் என்ற நிம்மதி கிடைக்கிறது. வாய்விட்டுப் பேசும்போது நமக்குள் தேங்கிக் கிடந்த துக்கம், வார்த்தைகளாகவும் சில நேரங்களில் கண்ணீராகவும் பயணம் செய்வதுபோன்று தோன்றும்.

சிறிது நேரம் அமைதியாகக் கண்களை மூடிக்கொண்டு இதைக் கற்பனை செய்து பாருங்கள். சுகமாக இருக்கிறதா?

இப்போது ஒரு கேள்வி. எத்தனை பேருக்கு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள்? சுலபமான கேள்வி என்று நாம் நினைக்கலாம். ஆனால் ஆழ்ந்து சிந்தியுங்கள். இதற்கான பதில்?
பணத்தைத் தேடுகிறோம், வேலையில் பதவி உயர்வை நாடுகிறோம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுகிறோம். இதற்கிடையில் அடுத்தவர் பிரச்சினைகளை அடிக்கடி கேட்டு ஆறுதல் கூற ஏது நேரம்? இவ்வாறு பலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். பலருக்கு இந்த அனுபவம் இருக்கலாம்.

"ஐயோ போதும், ஆரம்பித்துவிட்டாயா உன் புலம்பலை?... எப்போதும் உனக்கு ஏதாவது பிரச்சினை இருந்துகொண்டே இருக்குமா?..." துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றாலே சிலர் சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை. இன்னும் சிலர், புண்பட்ட ஒருவர் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது அவர் எப்போதும் கவலையில் மிதப்பவர் என்று கிண்டலாகக் கூறுவதும் உண்டு.

தினமும் ஏதாவது பிரச்சினையைப் பற்றிப் பேசினால் அது சாதாரணமல்ல. ஒப்புக்கொள்ள முடிகிறது. அதற்காக ஒருவர் கவலையைப் பகிர்ந்துகொள்வதை ஏன் ஏளனமாகப் பார்க்கவேண்டும்? அவரை ஏன் தவிர்க்கவேண்டும்? காரணம் என்ன?
நெருக்கமான ஒருவர் நம்மிடம் மனம் விட்டுப் பேசும்போது அவரின் சோகம் ஓரளவு நம்மையும் பாதிக்கும். அப்போது போட்டித்தன்மை மிகுந்த இந்த உலகில் நமது பணிகள், திட்டங்கள், வாழ்க்கை லட்சியத்தையொட்டிய நடவடிக்கைகள் போன்றவை பாதிக்கப்படுமோ என்ற பயம். இன்னொருவரின் பிரச்சினையை ஏன் இழுத்துப் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அச்சமாக இருக்கலாம்.
வேறொன்றும் இல்லாவிட்டாலும் பிரச்சினைகளுக்குச் செவி சாய்க்கும்போது நேரம் விரயமாகும். அந்த நேரத்தை ஆக்ககரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று மனிதாபிமானமே இல்லாமல் பேசுவோரையும் பார்க்கவே செய்கிறோம்.

இந்தப் போக்கை நண்பர்களிடையே அதிகம் பார்த்திருக்கிறேன் பொதுவாக ஆண்களிடையே. சில பிரச்சினைகளை, பெற்றோர், சகோதரர்கள், உற்றார், உறவினர் ஆகியோரைத் தாண்டி நெருங்கிய நண்பர்களுடன்தான் பகிர்ந்துகொள்ளமுடியும். எல்லோருக்கும் இந்தச் சிக்கல் இருக்கும். நெருங்கிய நண்பர்கள் இருப்பது இதுபோன்ற சூழ்நிலைகளில் உதவுவதற்குத்தான் என்பது என் எண்ணம்.

துயரத்தைக் கொட்டிவிட்டால் மட்டும் என்ன தீர்வு கிடைக்கப்போகிறது? இருக்கலாம். பல வேளைகளில் கேட்பவரிடம் தீர்வு இருக்காது. ஆனால் காது கொடுத்துக் கேட்பதே பாதிக்கப்பட்டவரின் மனத்திற்கு சிறிது நேரத்திற்காவது ஆறுதலாக இருக்கும்.

அண்மையில் மனநல மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவரைக் கேட்டேன், சிகிச்சை உதவும் என நிச்சயமாகத் தெரியுமா என்று. அதற்கு அவர், "பலனளிக்கிறதா இல்லையா என்பது அப்புறம். நான் பேசுவதையும் எனது பிரச்சினைகளையும் குமுறல்களையும் வருத்தங்களையும் கேட்டு ஆறுதல் கூறுவதற்கு ஒருவர் இருக்கிறார் என்ற திருப்தியாவது கிடைக்கிறதே," எனறார்.

இதைக் கேட்கும்போது, நல்ல சம்பளம், பதவி உயர்வு, குடும்பம், சொந்த வீடு, கார் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும்போது சக மனிதர்களைப் பற்றிக் கவலையில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. உங்கள் கருத்து

Top