Images
  • Rainbow
    படம்: REUTERS/Luke MacGregor

வண்ணங்கள் எண்ணங்கள்

ஏழு நிறங்களைக் கொண்ட வானவில்லுக்கு இடையே எத்தனையோ வண்ணங்கள் ஒளிந்துகிடக்கின்றன..

வண்ணங்களைப் போன்றவை எண்ணங்கள்.. நாம் பார்ப்பதும் கேட்பதும் நாளடைவில் மாறக்கூடும்.. பிறரைப் பற்றிய கருத்துகளும் அப்படித்தான்.

சிலரைப் பார்த்தவுடனேயே பிடிக்கும், பிடிக்காது என முடிவு எடுத்துவிடுவோரும் உண்டு..

சிலரைப் பார்க்கப்பார்க்கப் பிடிக்கிறது எனக் கூறுவோரும் உண்டு..

எதனால் இந்த மாற்றம்..? ஒருவரின் உருவத்தால் எண்ணம் உருவாகிறதா? அல்லது செயலால் நல்லெண்ணம் தோன்றுகிறதா..? நாம் சந்திக்கும் மனிதர்களை மனம் எவ்வாறு மதிப்பிடுகிறது?

குழந்தைகள் பழகிய முகங்களைக் கண்டு புன்னகைக்கத் தயங்குவதில்லை.. அதுவே அந்நியரிடம் செல்லும்போது  அழுவதும் அரிதல்ல.

வெள்ளைக் காகிதமாக இருக்கும் மனம் எப்போது மாசடையத் தொடங்குகிறது?

காலஞ்செல்லசெல்ல நமது கண்ணோட்டத்தை விசாலமாக்கிக் கொள்வது நம் பொறுப்பு..

பதவி, வயது, தோற்றம் போன்றவற்றைக் கடந்து சக மனிதர்களிடம் கலந்துரையாடும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

பிற நாடுகளுக்குப் பயணம் செய்வது அதற்குப் பெரிதும் கைகொடுக்கும். முற்றிலும் புதிய சூழல். வேறுபட்ட கலாசாரம். அழகிய இடங்கள். ரசிக்கத்தக்க மனிதர்கள். அனைவருக்குள்ளும் ஆயிரம் கதைகள்.

திகட்டுமா? தித்திக்குமா?

பழக்கமான சூழலைவிட்டு வெளியேறுவது, வகுப்பறைக்குள் கால் எடுத்துவைப்பதற்குச் சமம்.  என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே கணிக்காமல் புதிய பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே நம்மை முன்னெடுத்துச் செல்லும்.

அது சில நேரங்களில் பழக்கப்பட்ட சூழலில் கிடைக்காது.

"comfort zone" என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதை விட்டு வெளியேறும் தைரியத்தை வளர்த்துக்கொள்வது மிக அவசியம். இதுவரை செய்துபார்த்திடாத பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். புதிய பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லலாம். ஏதாவது புதிய மொழியைக் கற்றுக்கொள்ளலாம்.

இதுபோன்ற வழிகளில் நண்பர்களின் வட்டத்தையும் அதிகரிக்கலாம்.

"நாலு பேரிடம் பழகினால்தானே நல்லதைக் கற்றுக்கொள்ளமுடியும்" எனப் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம்.

வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பலதரப்பட்டோரிடம் பேச வேண்டும். இதுவரை கேட்டிடாத கதைகள் அவர்களிடம் புதைந்துகிடக்கலாம்.

அது நமது வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய படிப்பினையாகவும்  இருக்கலாம். பல வேளைகளில் நாம் கவலைப்படும் சிறு சிறு பிரச்சினைகளுக்குத் தீர்வு நம்மிடமோ நம்மைச் சுற்றியிருப்போரிடமோ இருக்கலாம்.

நம் வட்டத்தை விட்டு வெளியேறி சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு வரும்போது அந்தப் பிரச்சினை... பிரச்சினையே இல்லை என்றாகிவிடும்... நம் மனமும் மகிழ்ச்சியடையும்.

வானவில்லை ரசிக்க வேண்டுமானால், அதற்கு முன்னர் பெய்யும் மழையையும் அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களின் நிறைகுறைகளை ஏற்றுக்கொண்டால், அதில் ஏற்படும் நட்புறவில் இன்பம் பெறலாம்.

நல்லது, கெட்டதை ஏற்றுக்கொள்ள நம்மை மாற்றிக்கொள்வதே வாழ்க்கை.


உங்கள் கருத்து

Top