Images
  • 5Jan 2017 Pesuvoma 1 (1)

புதிய ஆண்டு புதிய நாம்

2017... புதிய ஆண்டு பிறந்துள்ளது. நாமும் புதிதாகப் பிறக்கவேண்டும் என்று எண்ணுவோரை எண்ணிலடக்க முடியாது. காலத்தைக் கூறுபோட்டதால் கிடைப்பதுதானே இந்த ஆண்டுக் கணக்கெல்லாம். வாழ்க்கையின் முடிவு தெரிந்தால் கூறுபோட்டு வாழலாம். ஆனால் ஆதி தெரிந்த எவருக்கும் அந்தம் தெரிவதில்லை. அதுவே எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம். மகிழ்ச்சிக்கும் அதுவே காரணம். ஆனால் அடங்கும் நேரம் தெரிந்தால் ஆனந்தத்திற்கு ஏது இடம்?. எல்லாம் ஒடுங்கி அமைதியே அங்கு நிலவும்.

வீடு. வேலையிடம். வெளியிடம். சுற்றியிருக்கும் சூழல். இவை எதுவுமே மாறவில்லை. ஏன் நாம் கூட நேற்றிருந்த அதே நாம்தான். இப்படி இருக்கையில் எப்படி புதிய ஆண்டில் புதிதாகப் பிறப்பது? கேள்வி சரிதான். ஆனால் அப்படியே இருந்தால் நட்டம் யாருக்கு? பழைய மூட்டையைத் தூக்கிச் சுமப்பதால் வேதனைதான் மிஞ்சும். 

ஊரோடு ஒத்துவாழ் என்று சொல்லக் கேட்டிருப்போம். அதிகமானோர் ஏதாவது புதுமையாகச் செய்யவேண்டும் என்று தீர்மானம் எடுப்பார்கள். புதிய ஆண்டில் நாமும் ஏதாவது புதியனவற்றைக் கற்றுக்கொள்ளலாம்தானே. அது பாட்டாக இருக்கலாம். நடனக்கலையாக இருக்கலாம். ஏன் ஓவியம் வரைவதாகக்கூட இருக்கலாம். அல்லது ஏதேனும் புதிய விளையாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். இன்னும் எத்தனையோ செய்யலாம். பழைய நாமுக்குப் புதிய பூச்சு கொடுக்கலாம். அதுகூட புத்துணர்வைக் கொடுத்து புது வழியைக் காட்டலாம். அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரலாம். எதுவும் முடியவில்லையா? பாராட்டலாம். அன்றாடம் உதவிசெய்வோருக்கு நன்றி சொல்லலாம். இந்த ஆண்டில் 10 விழுக்காடு மாறினால், 10 ஆண்டில் நம் வாழ்க்கை முற்றாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறதுதானே. குறைந்தது எழுத்தளவில். சரி. மகிழ்ச்சி தொலைவதற்கு என்ன காரணம்?

கவலை. கவலை. கவலை. அதை மறப்பதும் மறைப்பதும் மிகப் பெரிய கலை. பழையனவற்றை மறந்துவிட வேண்டும் என்கிறார்கள். எப்படி மறப்பது என்று கேட்போரும் இருக்கவே செய்கின்றனர். அவரவர்க்கு அவரவர் செய்தது நியாயம். சிலருக்கு நியாயமே நியாயம். சிலருக்கு அநியாயமே நியாயம். எனவே எது நியாயம் எது அநியாயம்? இதைத் தீர்மானிப்பது யார்? அப்படித் தீர்மானித்தாலும் எல்லாரும் ஏற்றுக்கொள்வார்களா? விடைகளைத் தேடும் கேள்விகள் எத்தனை எத்தனையோ. ஆனால் எல்லாவற்றுக்கும் என்றாவது ஒரு நாள் பதில் கிடைக்கும். தேவை, பொறுமையன்றி வேறொன்றில்லை.

தத்துவங்கள், பேசுவதற்கு நன்றாகத்தான் இருக்கும். நடைமுறைக்கு?
யாருக்குத்தான் கவலை இல்லை. செல்லப் பிராணிகூட கவலையில் அழுவதாகச் சொன்னார் நண்பர் ஒருவர். நடந்தது இதுதான். மணி என்பவர் தமது 2 செல்லப் பூனைகளை நண்பர் சாமியின் வீட்டில் விட்டுவிட்டு விடுமுறைக்கு வெளிநாடு சென்றிருக்கிறார். சாமியின் வீட்டில் ஏற்கனவே ஒரு குட்டி நாய் இருக்கிறது. நாய்க்கும் பூனைக்கும் உள்ள உறவு அனைவருக்கும் தெரிந்ததே. முதல் இரண்டு நாட்களில் கூண்டை விட்டு வெளியே வந்தால் பூனைகள் நாயாரைப் பார்த்ததும் பயத்தில் சற்றுப் பம்முமாம். ஆனால் அதற்குப் பின்னரோ கதையே வேறு. மூன்றும் நண்பர்களாகிவிட்டன. பூனைகளுக்கு நல்ல காவலனாகிவிட்டார் நாயார். யாராவது பூனைகளுக்கு அருகில் சென்றால் ஒரு ‘லொள்’. ஒரு வாரத்திற்குப் பிறகு, மணி, நண்பரின் வீட்டுக்குச் சென்று பூனைகளை எடுத்துக்கொண்டு வெளியேறியபோது பெரும் களேபரம் செய்திருக்கிறார் நாயார். மணி வெளியேறியதும், கதவைப் பிறாண்டியதாம் குட்டி நாய். தோழர்களைப் பிரிந்த சோகத்தில் குட்டி நாயின் கண்ணிலிருந்து ஆறாய் வடிந்ததாம் கண்ணீர். வீட்டில் இருந்தவர்களுக்கும் பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு நண்பருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நெகிழ்ந்துபோய், நாயாரைச் சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லையாம். தாயன்பு தெரியும். இது நாயன்பு. 

நாயைப் பற்றி அண்மையில் படித்த இன்னொரு சுவைச் செய்தி. நீரிழிவு நோய் இருப்போரின் உடலில் சர்க்கரை அளவு குறைந்தால், அதனைக் கண்டுபிடிக்கும் திறமையும் நாய்களுக்கு உண்டு என்பதே அது. உரிமையாளர் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவ்வாறு நேர்ந்தால், மோப்ப சக்தியின் மூலம் கண்டுபிடித்து அவரை உடனே எழுப்பிவிடுகிறதாம் நாய். அமெரிக்காவில் பிரபலமாகத் திகழ்கின்றன அத்தகைய நாய்கள். சிங்கப்பூரிலும் அது போன்ற திறன்பெற்ற Butter எனும் நாய் உள்ளது. அதன் உரிமையாளர் மேலும் சில நாய்களிடம் அத்தகைய திறமையை வளர்க்க முயற்சி எடுத்து வருகிறாராம். 

இப்படி, நாய் என்றால் நினைவுக்கு வருவது நன்றிதான். அந்த நன்றிகூட இல்லாத எத்தனையோ பேர் அனைவரின் வாழ்க்கையிலும் வந்துபோவது இயல்பே. என்ன செய்வது? 

கடந்துபோனவற்றை மறந்துவிடுவது நல்லது. அதாவது கசப்பான சம்பவங்களை. நடந்துவந்த பாதையையும் நன்றியையும் அல்ல. பழையனவற்றை மறந்து நல்ல எண்ணங்களுடன் வாழ்வை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் இனி எல்லாம் சுகமே. அது வாய்த்தால் புதிய ஆண்டில் புதிய நாம் உருவாகலாம். எல்லாம் நம் கையில். இல்லையில்லை மனத்தில். எந்தச் சதித்திட்டமும் உள்நோக்கமும் இல்லாத குழந்தையைப் போல அன்றாடம் புதிதாய்ப் பிறப்பதே நலம். பாரதி சொல்வானே, ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று, அதைப் போல.


சபா. முத்து நடராஜன்
 

உங்கள் கருத்து

Top