Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

மறதி - வரமா சாபமா?

“கணவன்: மறதி மறதி என்று எப்போதும் திட்டுவாயே! இன்று பார், குடையை மறக்காமல் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். மனைவி: ஐயோ இன்று நீங்கள் குடையே எடுத்துச் செல்லவில்லையே!”  

வாசிப்புநேரம் -

“கணவன்: மறதி மறதி என்று எப்போதும் திட்டுவாயே! இன்று பார், குடையை மறக்காமல் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
மனைவி: ஐயோ இன்று நீங்கள் குடையே எடுத்துச் செல்லவில்லையே!”

பணத்தை எங்கே வைத்தேன்? மறந்துவிட்டது.
பொருளை எங்கே வைத்தேன்? மறந்துவிட்டது. 

அவரிடம் அதைக் கொடுத்து விட்டேனா? நினைவில்லை.
ஐயோ! இந்தத் தகவலைத் தெரிவிக்க மறந்துவிட்டேனே! 

காலச் சக்கரத்தின் அதிவேகச் சுழற்சியில் எத்தனை எத்தனை மறதிகள்! ஒன்றை மறந்துவிட்டு அதற்காக வெட்கப்படுவது, வேதனைப்படுவது என்று பல தர்மசங்கடமான சூழ்நிலைகளைச் சந்திக்கிறோம். பல நேரங்களில் நம் மீது நமக்கே வெறுப்பு ஏற்படும் அளவுக்கு மறதி. எதனால் மறதி, எப்படி இவ்வளவு மோசமானது? நம்மில் பலர் சில வேளைகளில் இதை ஆய்வுசெய்வது கூட உண்டு. முதியோர், இளையோர் என்று வயது வேறுபாடின்றிப் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகிவிட்டது... மறதி!

பலவற்றைச் சரியாக நினைவில் வைத்துக்கொள்ளும் சிலரைப் பார்க்கும்போது சற்று பொறாமையாகக் கூட இருக்கும். பொதுவாக அவர்கள் எந்தப் பொருளையும் மறக்க மாட்டார்கள். அடுத்த வீட்டில் நடந்த சம்பவங்களைக் கூட வரிசை மாறாமல் கூறுவார்கள். வாங்குவது, கொடுப்பது, எடுப்பது, நடப்பது என்று பலவற்றை இவர்களால் சரியாகக் கூறமுடியும். எப்படி இவர்களால் மட்டும் முடிகிறது? 

மறப்பது என்பது இயல்பாய் வருவதே அன்றி நாம் வேண்டுமென்றே எதையும் மறக்கமுடியாது. மனத்தின் கவனம் வேறு பக்கம் செல்லும்போது முக்கியத்துவம் குறைந்தவை நம் கவனத்திலிருந்து ஒளிந்துகொள்கின்றன. அவ்வளவுதான். இதனால்தான் ஒருவர் காலம் அறிந்து செய்யும் உதவி, நம் வாழ்வில் இக்கட்டான சூழ்நிலைகள் போன்றவை பெரும்பாலும் நமக்கு மறப்பதில்லை. நம் பிரச்சினை எல்லாம் அன்றாட மறதி வகையைச் சேர்ந்த்துதான்!

அன்றாட மறதிச் சிக்கலை எதிர்கொள்ள ஆயிரம் வழிகள் உள்ளன. செய்யவேண்டியவற்றை ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்ளலாம்; நினைவுபடுத்துவதற்குக் கைபேசியில் மணியை வைத்துக்கொள்ளலாம்; தேவையான தகவல்களை உடனுக்குடன் கைபேசியிலோ, கையடக்கக் கருவிகளிலோ பாதுகாத்து வைத்துகொள்ளலாம். மூளையைச் சக்திக்கு மீறிப் பயன்படுத்தும்போது மறப்பது இயல்பான ஒன்றுதான். அதைச் சமாளிக்க தியானம் போன்ற வழிகளையும் நாடலாம். 

ஆனால் மறதியை நினைத்து ஒருபோதும் வருந்த வேண்டாம்! அதில் அளப்பெரிய நன்மை ஒளிந்திருக்கிறது என்பதை அண்மையில் உணர்ந்தேன். ஆனந்தம் அடைந்தேன்.

மறதியால் எத்தனை நன்மைகள்! மறதியால் எத்தனை சுகங்கள்!

ஒருவரின் இழப்பை நினைத்து நினைத்து மனம் வெம்பிப் போகாமால், வாழ்க்கையைத் தொடர்கிறோமே! அங்கு மறதி நமக்கு எத்தகைய உதவியைச் செய்கிறது!
சிறுவயதில் பார்த்த ஒருவரைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அடையாளம் கண்டு அகமகிழும்போது, நம் மறதி எங்கு சென்றது?

மறதி எனும் வரத்தைப் பெற்றவர்களால் மட்டுமே, பிறர் சொல்லும் கடுஞ்சொற்களையும், அர்த்தமற்ற வாதங்களையும் அப்போதைக்கு அப்போது மறந்துவிட்டு, அடுத்த காரியத்திற்குச் செல்ல முடிகிறது. 

மறதி என்பது ஒரு வடிகட்டி போல. இரண்டு மணி நேரம் கேட்கும் உரையை, 20 நிமிடத்திலும், பல மணி நேரம் படிக்கும் புத்தகத்தைப் பத்து நிமிடத்திலும் பிறருக்குக் கூறும் திறமையை நமக்கு அளிப்பதும் நமது மறதியே!

மறதியே மனிதனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம் என்பேன். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்