Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

நினைவுகளை உருவாக்கும் கனவுகளின் பிறப்பிடம்

சரியாக ஈராண்டுக்கு முன்னர், செய்தியாளராக நான் கால்டிகாட் வளாகத்திற்குள் நுழைந்தேன், மனத்தில் பதற்றம் கலந்த உற்சாகத்துடன்.

வாசிப்புநேரம் -

சரியாக ஈராண்டுக்கு முன்னர், செய்தியாளராக நான் கால்டிகாட் வளாகத்திற்குள் நுழைந்தேன், மனத்தில் பதற்றம் கலந்த உற்சாகத்துடன்.

மாணவியாக இருந்த காலக்கட்டத்தில் நான் அந்த வளாகத்துக்குள் சென்றிருக்கிறேன். சொற்களம், சொற்சிலம்பம் விவாதப் போட்டிகளின்போது என்னுடைய பள்ளிக்கு ஆதரவாளராக.

அதே வளாகத்தில் செய்தியாளராகப் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

கடந்த ஈராண்டில் பலரைச் சந்தித்தேன், பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன், செய்திகளைத் தயாரித்தேன், தொடர்ந்து பலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

குறுகிய காலத்திற்குள் நான் கற்றுக்கொண்ட பாடங்கள், எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் விலைமதிப்பில்லாதவை.

சக ஊழியர்களில் பலர், அற்புதமான நண்பர்களாகவும் மாறியது என் பாக்கியம்.

பழக்கப்பட்ட சூழல், பழகிய வேலையிடம், புரிந்த நடைமுறை என்று எல்லாம் என் மனத்தில் பதிந்துவிட்டன. இந்த நேரத்தில்தான், தமிழ்ச் செய்தி, புதிய மீடியாகார்ப் வளாகத்துக்கு இடம் மாறியது.

அது அமைந்திருப்பது ஸ்டார்ஸ் அவென்யூவில்.

புத்தம் புதிய வசதிகளுடன், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் எங்களை வரவேற்கத் தயாராக இருந்தது. 

நாங்களும் மாற்றத்துக்கு ஏற்றவாறு எங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டோம். பயிற்சி வகுப்புகள், ஒத்திகைகள் எனப் பல மாதங்களுக்கு முன்னதாகவே ஆயத்தப் பணிகள் தொடங்கின. 

ஒரு குழந்தை தவழ்ந்து, பின்னர் நடக்கக் கற்றுக்கொள்வது போல நாங்களும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் பழகிக்கொண்டோம். கற்றல் பயணம் தொடர்கிறது.

கடந்த சுமார் 80 ஆண்டுகளாகச் செய்தியாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படிப் பலருக்கும் இரண்டாம் இல்லமாக விளங்கிய கால்டிகாட் வளாகம் இப்போது அவர்களின் நினைவுகளைச் சுமந்து நிற்கிறது.

புதிய நினைவுகளை உருவாக்கும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது மீடியாகார்ப்பின் புது வளாகம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்