Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

தமிழ் படிப்பதால் என்ன பயன்?

நாம் தமிழர்கள். அதனால் தமிழ் நமது அடையாளம் என்று உதட்டளவில் கூறிக்கொள்ளலாம். அப்படியென்றால் என்ன?

வாசிப்புநேரம் -

தமிழ் படிப்பதால் என்ன பயன்?


தொடக்கக்கல்லூரிப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் தருணத்தில் தமிழ் இலக்கியப் பாடத்தைப் பற்றிப் பேச ஆசிரியர் ஒருவர் எனது உயர்நிலை நான்கு தமிழ் வகுப்பிற்கு வந்திருந்தார்.


அவர் பேசிச் சென்ற பிறகு, என் சக மாணவர்கள் அனைவரும் எழுப்பிய கேள்வி என்ன தெரியுமா?


“தமிழ் படிப்பதால் ஏதேனும் லாபம் உண்டா?”


மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் அடிக்கடி கேட்கும் கேள்வியும் இதுதான்.


பொருளுக்கு மதிப்பு, விலை; வேலைக்கு மதிப்பு, சம்பளம் என்று மாறிவரும் காலத்தில்... தமிழ் படித்தால் என்ன கிடைக்கும் என்ற கேள்வி நியாயமாகவே தோன்றலாம்.


நாம் தமிழர்கள். அதனால் தமிழ் நமது அடையாளம் என்று உதட்டளவில் கூறிக்கொள்ளலாம். அப்படியென்றால் என்ன?


‘படையப்பா’ திரைப்படத்தை நம்மில் பெரும்பாலோர் பார்த்திருப்போம். அதைப் பார்த்துவிட்டு “Rajinikanth is a wonderful actor with such talent!” என்று கூறலாம். ஆனால், “ரஜினி திரைப்படத்தில் அசத்திவிட்டார்!” என்று சொல்வதில் இருக்கும் உற்சாகம் தமிழால் நாம் பெறக்கூடிய இன்பம்.


மொழி என்பது ஒரு symbolic system.


அதாவது மொழி என்பது ஒரு சமூகம் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தும் சின்னங்களின் மொத்தம். அதனால் தமிழ், தமிழர்களை ஒன்றிணைக்கும் சின்னமாக இயங்குகிறது.
ஒரு சமூகத்தினரிடம் அவர்களது மரபுடைமையைக் கொண்டுசேர்க்கிறது அவர்களது தாய்மொழி. தமிழ் இலக்கியங்கள், நாடகங்கள் என்று அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, அவற்றையும் தவிர்த்து பல கலாசார அறிகுறிகள் தமிழ்ச் சொற்களில் மறைந்திருக்கின்றன.


தமிழில் எனக்குப் பிடித்த வார்த்தைகளில் ஒன்று “ஊடல்”.


அன்புக்குரியவர்கள் – முக்கியமாகக் காதலர்கள், தம்பதியரிடையே உள்ள ஒரு வகை செல்லக் கோபத்தை அந்த வார்த்தை குறிக்கும். அன்பு கலந்த ஒரு கோபம் அது. இந்த வார்த்தையை முற்றிலுமாக மொழிபெயர்க்க முடியாதது அதன் சிறப்பு.


அன்புக்குரியவர்களுக்கு இடையே கோபம் இருப்பினும் அதில் அன்பும் இருக்கும். எதிலும் அன்பைக் காணும் தமிழர்களின் மனப்போக்கையே இது உணர்த்துகிறது. இதைப் போன்று இன்னும் எத்தனையோ சொற்கள் நம் அழகிய மொழில் இருக்கின்றன. இப்படிப் பார்க்கையில் சமூகத்திற்கு நெருக்கமான அம்சங்களின் பிரதிபலிப்பாக அமைகிறது மொழி.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்