Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

அம்மாவுக்காக...

அன்பின் வடிவமாகத் திகழ்பவள் அன்னை. பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்வில், நம் மீது அன்பும் பாசமும் செலுத்தும் அம்மாவின் உன்னதத்தை நாம் உணராமல் போகக்கூடும்.

வாசிப்புநேரம் -

அன்பின் வடிவமாகத் திகழ்பவள் அன்னை. பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்வில், நம் மீது அன்பும் பாசமும் செலுத்தும் அம்மாவின் உன்னதத்தை நாம் உணராமல் போகக்கூடும்.

நேரமின்மை, வேலைப் பளு ஆகியவை அதற்குக் காரணங்களாக இருக்கலாம். பிள்ளைகள் மீது அதிக அக்கறை காட்டி, அன்பு செலுத்துபவள் தாய்.

பத்து மாதம் கருவறையில் சுமக்கும் பாரம், இனம் புரியாத பந்தமாக மாறுகிறது. குழந்தை பிறந்தவுடன் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து பிள்ளையைக் கரை சேர்க்கும் வரை அன்னையின் தியாகம் தொடர்கிறது.

சில நேரங்களில், நான் வேலை முடிந்து இல்லம் திரும்பும் போது இரவு 11.30 மணியைக் கடந்திருக்கும். ஆனால் அம்மா உறங்காமல் எனக்காகக் காத்திருந்து இரவு உணவைத் தயார் செய்வார். நான் உண்டு முடிக்கும்வரை கண் விழித்துக் காத்திருப்பார். இது, எனது இல்லத்தில் வாடிக்கையாகிவிட்டது. 

நான் தேசிய சேவை புரிந்து கொண்டிருக்கும்போது, அம்மா எழுதிய கடிதம் இன்னும் என்ஆழ்மனத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

படம்: TODAY

அடிப்படை இராணுவப் பயிற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், காட்டுப் பகுதிக்குமுதல்முறையாக 6 நாட்கள் செல்ல வேண்டியசூழ்நிலை ஏற்பட்டது.

 முதல் தடவை என்பதால் அச்சம் சற்று மேலோங்கி இருந்தது. காட்டுப் பகுதியில் பயிற்சிதொடங்கியது. வெளியுலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை.

நாட்கள் செல்லச் செல்ல பயிற்சிகடுமையானது; வீட்டு ஞாபகம் மனத்தை ஆக்கிரமித்தது. பயிற்சியின்போது, ஒரு நாள் அம்மாவிடமிருந்து முன்கூட்டியே பெறப்பட்ட ஒரு கடிதம்எங்களுக்குக் கொடுக்கப்பட்டது.

முதல் இரண்டு வரிகளை வாசித்ததும், அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தை நனைத்தது.

தைரியமாக இரு. இந்தப் பயிற்சி உன் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். எந்த நேரத்திலும் மனம் தளராதே. அம்மா எப்போதும் உன் நினைவாகவே இருக்கிறேன். உன் வருகைக்காக இங்கு நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.

என்று அம்மா எழுதியிருந்தார். அம்மாவின் அன்பு தோய்ந்த வரிகள், அவர் நினைவை அதிகரித்தாலும் அப்போதைய சூழலுக்கு அவை அளித்த ஆறுதல், வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது.

இன்றைய அதிவேக வாழ்க்கைச் சூழலில் அன்னையுடன் இருக்கும் நேரம் குறைகிறது. இன்று அன்னையர் தினம். தாய்மையைக் கொண்டாட ஒரு நாள் போதாது. இந்நாளில் அம்மாவின் ஞாபகம் நம் உள்ளத்தில் நிழலாடும்.

அம்மாவின் சமையல், அவள் அடிக்கடி கூறும் வார்த்தைகள், அவளின் சிரிப்பு...

நம்மை அகிலத்துக்கு அறிமுகம் செய்த அன்னையின் உன்னதத்தைக் கொண்டாடுவோம்.

அனைத்து அன்னையருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

அன்புடன்

நித்திஷ் செந்தூர்


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்