Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

நன்றிக்கடன்

பெற்றோரின் மனம் குளிரும்படியாக நடந்துகொள்ளும் எந்தப் பிள்ளையும் வாழ்க்கையில் நன்றாக இருப்பார் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை நாம் சொல்லலாம்.

வாசிப்புநேரம் -
நன்றிக்கடன்

படம்- channelnewsasia

பெற்றோரின் மனம் குளிரும்படியாக நடந்துகொள்ளும் எந்தப் பிள்ளையும் வாழ்க்கையில் நன்றாக இருப்பார் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை நாம் சொல்லலாம்.
ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்குக் காரணமாய் இருக்கும் பெற்றோரை, வயதான காலத்தில் புறக்கணிப்பது பெருங்கொடுமை.

இன்றைய பிள்ளைகள் நாளைய பெற்றோர். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற பழமொழியை மனத்தில் இருத்தி வாழவேண்டும். இன்று நாம், நமது பெற்றோரைப் பராமரிக்காமல் உதாசினப்படுத்தினால், நாளை நமது பிள்ளைகள் நம்மை அவ்வாறே செய்யக்கூடும்.

ஒரு முறை தோ பாயோ பேருந்து நிலையத்தில் யாசித்துக்கொண்டிருந்த வயதான இந்திய மூதாட்டி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம் பணம் கேட்டார். அவர் எதிர்பார்த்ததை நான் கொடுத்துவிட்டு, உங்களுக்குக் குடும்பம், பிள்ளைகள் இல்லையா எனக் கேட்டேன். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தமக்கு 4 ஆண் குழந்தைகள் இருப்பதாகக் கூறி தனது சோகக் கதையைச் சொன்னார்.

இளவயதில் குடிகாரக் கணவனால் கைவிடப்பட்ட அவர் வைராக்கியமாய் வீடு வீடாகப் போய் வேலைசெய்து அதன் மூலம் வரும் சொற்ப வருவாயில் தன் பிள்ளைகளை வளர்த்ததாகக் கூறினார். படிப்பில் தம் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள் என்பதால் அவர்களுக்கு அரசாங்க உபகாரச் சம்பளம் மூலம் மேற்படிப்பு மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிறகு அனைவரும் படித்து முடித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். அவரவர்க்குரிய துணையைத் தேடி திருமணமும் முடித்துக் கொண்டு, தனிக் குடித்தனமும் போய்விட்டனர். தம்மைப் பற்றி எந்த மகனும் மருமகளும் கவலைப்படவில்லை. வாரம் ஒரு பிள்ளை என ஒவ்வொரு பிள்ளையின் வீட்டுக்கும் செல்லத் தொடங்கினார். இருந்தாலும் அவர்கள் அவரை உரிய மரியாதையுடன் நடத்தவில்லை.

தம்மைச் சோற்றுக்கு வழி இல்லாதவரைப் போன்று பிள்ளைகளும் அவர்களின் மனைவியரும் நடத்தியதாக வருந்தினார் மூதாட்டி. அதனைச் சகித்துக்கொள்ள முடியாமல்தான் இன்று இந்த நிலைமைக்கு ஆளானதாக அழுதார் அந்தத் தாய். உழைத்துத் தேய்ந்து போயிருந்த அவரது கைகளைப் பார்த்ததும் என்னாலும் அழுகையை அடக்க முடியவில்லை. அந்த அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. நன்றி மறந்த அந்தப் பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபம் மட்டும் இருந்தது. வருத்தத்துடன் அந்த மூதாட்டியைவிட்டு விலகினேன்.

இப்போது பிள்ளைகளாக இருப்போர், நாளை நமக்கும் முதுமை வரக்கூடும் என்று எண்ணுவது நல்லது. அதனை மனத்திற்கொண்டு அவர்கள், பெற்றோரைப் பேணுவதே சரி. அதுவே பெற்றோருக்குப் பிள்ளைகள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்