Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

மனமே தொட்டால் சிணுங்கிதானே..

மனம்..பூப்போன்றது.. எப்போது மகிழ்ச்சியில் பூரிக்கும்.. எப்போது கவலையில் துவண்டுபோகும் எனக் கணிக்க இயலாது..

வாசிப்புநேரம் -

"மனமே தொட்டால் சிணுங்கிதானே..
அதுவே தன்னால் மலரும் மானே.."

மனம்..பூப்போன்றது.. எப்போது மகிழ்ச்சியில் பூரிக்கும்.. எப்போது கவலையில் துவண்டுபோகும் எனக் கணிக்க இயலாது..

எவர் ஒருவரை நாம் மனவலிமை படைத்தவர் என நினைக்கிறோமோ, அவர் தினமும் தலையணையைக் கண்ணீரில் நனைப்பவராக இருக்கலாம்..

பல வேளைகளில் நம்மைச் சுற்றியிருப்போரின் முகத்தை வைத்து மட்டுமே அவர்கள் நலமாக இருக்கிறார்கள் என நாம் நினைப்பதுண்டு..

ஒருமுறை நீண்டகால நண்பர்கள் சிலர் ஒன்றாகப் பொழுதைக் கழிக்கலாம் எனத் திட்டமிட்டுக் கடற்கரைக்குச் சென்றோம்.

சிறிது நேரம் கலகலவெனப் பேசி மகிழ்ச்சியாக இருந்தோம். அந்த விளையாட்டு விளையாடும்வரை..
ஒரு வட்டத்துக்குள் நாங்கள் அமர்ந்தபடி ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டோம். உண்மையான பதிலை மட்டுமே எதிர்பார்த்தோம்.

குழந்தைப்பருவத்தில் மறக்க முடியாத நினைவு பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார்.

சற்று நேரம் மெளனமாக இருந்த நண்பரின் கண்களில் கண்ணீர் ததும்பியது.
தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். அனைவருக்கும் அதிர்ச்சி என்றாலும் அவரைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தோம்..

அப்போது அங்கிருந்தோரில் சிலர், அழுதுகொண்டிருந்த நண்பரிடம், " நீங்கள் மனவலிமை கொண்டவர் என்றல்லவா நாங்கள் நினைத்தோம்.. என்ன இது சிறு பிள்ளை போல.." என்றார்கள்..

அதைக் கேட்ட எனக்குச் சற்று கோபம் வந்தது..மனவலிமை இருப்பதற்கும் அழுவதற்கும் என்ன தொடர்பு..
எதையும் தாங்குவதற்கு நாம் என்ன இரும்பிலா உருவாக்கப்பட்டோம்?

அந்த நண்பர் ஏன் அழுகிறார் எனக் கேட்டதற்கான பதில் வந்தது..
சிறுவயதில் நடந்த சில துயரமான சம்பவங்களின் பாதிப்பு, பெரியவரான பிறகே வெளிப்படத் தொடங்கியிருக்கிறது..
மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கிறார்.
வெளியே சொன்னால் ஏளனமாகப் பார்ப்பார்கள் என எண்ணித் தமக்குள் அதனைப் புதைத்துக்கொண்டார்.

"breaking point”.. அதாவது, எதிர்பாரா ஒரு தருணத்தில் நம்மையும் மீறி, உணர்வுகள் முந்திக்கொள்ளும்..
அந்த நிலைதான் அன்று..

சந்தர்ப்பச் சூழலால் சோகமாக இருப்பது தவறில்லையே?
மனித இயல்புதானே?
பல சமயங்களில் சமூகம் தம்மை எப்படிக் கண்ணோட்டமிடும் என்ற பயத்திலேயே மனச்சோர்வுக்கு ஆளாவோர் உதவி நாடுவதில்லை.
பல வேளைகளில் நடந்ததை நினைவிலிருந்து அகற்றும் முயற்சியில் மிகுந்த மகிழ்ச்சியாய் இருப்பதாகச் சிலர் கூறுவதுண்டு..
ஆண்டுகள் கடந்தபின் அதன் தாக்கம் எரிமலையைப் போல் வெடித்து வெளியே வரலாம்.

எனக்குப் பழக்கமான இன்னொருவர்.. பந்தம் என்று நினைத்த உறவொன்றை இழக்க நேரிட்டது.
அவர்மீது தப்பில்லை என்றாலும் குற்ற உணர்வில் சிறிது காலம் மூழ்கியிருந்தார்.
ஆனால் வெகுவிரைவில் அதிலிருந்து மீண்டுவந்துவிட்டதாகத் தமக்கு நெருங்கியோரிடம் கூறினார்.

5 ஆண்டுகள் உருண்டோடின..
அந்தச் சம்பவத்தைப் பலர் மறந்தனர்.

பிறந்தநாள் விழா ஒன்று வந்தது..
அதில் அவரைச் சந்தித்தேன்.
வேறு சில நண்பர்களுடனும் நாங்கள் உரையாடினோம்.
அப்போது அந்தச் சம்பவம் பற்றி ஒருவர் கேள்வி எழுப்பினார்..
பாதிக்கப்பட்டவர் அடுத்த நொடி மெளனமானார்..
அன்றையப் பொழுது முழுதும் அவர் யாரிடமும் அவ்வளவாகப் பேசவில்லை.
சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டார்.

அதற்குப் பிறகு அவரை நான் சில மாதங்களுக்குப் பின்னர்தான் சந்தித்தேன்.
அந்த விழாவுக்குப் பிறகு புரிந்துகொள்ளமுடியாத சோகத்துக்கு ஆளானதாய் அவர் சொன்னார்.
கூட்டத்தில் இருந்தால்கூட தனித்து இருப்பதுபோல அவருக்குத் தோன்றியதாம்..
எதையோ பறிகொடுத்ததுபோன்ற உணர்வு..
சில வாரங்கள் ஏன் அழுகிறோம் என்று தெரியாமலேயே அழுதிருக்கிறார்.
சில நாட்கள் நித்திரையிலேயே கழித்திருக்கிறார்.
முன்போல எந்த நடவடிக்கைகளிலும் உற்சாகமாக ஈடுபட முடியவில்லை.
யாருமே தம்மைப் புரிந்துகொள்ளவில்லை என்ற கோபம்..
யாராலும் தமக்கு உதவ முடியாது என்ற தவிப்பு..
உடல்எடை குறைந்தது.. முகத்தில் வாட்டம்..
அவரிடம் இருந்த மாற்றங்களைக் கவனித்த அவரின் அம்மா வலுக்கட்டாயமாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம் இது எனத் தெரியவந்தது.
மருத்துவ ஆலோசனையும் சுற்றியிருந்தோரின் அன்பும் இப்போது தம்மைச் சீராக்கியிருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.
தக்க நேரத்தில் தோள் கொடுக்கும் தோழியாக இருக்க முடியவில்லை என்று எனக்குச் சற்று வருத்தம் இருந்தாலும் அவரின் உண்மையான மனமாற்றத்தைப் பார்க்கும்போது மகிழ்ந்தேன்.

மனச்சோர்வு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்..
பல வேளைகளில் காரணமின்றி வரலாம்.
நமக்குத் தெரிந்தோரிடம் மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனித்தால், அவர்களுக்கு நெருக்கமானோரிடம் அதைப் பற்றிக் கூறலாம்..
நம்மிடமே மாற்றம் ஏற்பட்டால், உதவி நாடுவதற்குத் தயங்கக்கூடாது.
யாரிடமாவது பேசலாம் அல்லது மருத்துவரை நாடலாம்.
மனச்சோர்வு.. சரிசெய்யக்கூடிய ஒன்றுதான்..
மனது வைத்தால்..
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்