Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

அவள், சாதாரணப் பெண் அல்ல. வேலை செய்யும் தாய்.

நாங்கள் எல்லாருமே சாதாரணப் பெண்கள் அல்லர். வேலை செய்யும் தாய்மார்கள்.

வாசிப்புநேரம் -

பொதுவாகவே எங்களைப் போன்ற செய்தியாளர்களை வெளியே பார்க்கும் பலரும் புன்னகையுடன் பேசுவர். பேசும் பாணி, பாவனை, உடை உட்பட பல அம்சங்கள் பற்றியும் பல்வேறு கருத்துகளை முன்வைப்பர். சில யோசனைகளையும் சொல்வர்.

மனம் நெகிழும், அவர்களது அன்பு வார்த்தைகளால். பணியில் இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும். சமூகத்தைச் சார்ந்த செய்திகளை எழுதவேண்டும் என்ற முனைப்பைக் கொடுக்கும்.

என்னை எடுத்துக்கொண்டால் சாதிக்கவேண்டும் என்ற ஆசை உண்டு, அதே நேரம் நான் தாயும்கூட. பல நேரங்களில் குடும்பத்துடன் அதிக நேரம் இருக்க முடியவில்லையே என்று தோன்றும். இன்னும் எத்தனையோ பேருக்கும் இதே எண்ணம் இருக்கலாம்.

அதன் விளைவுதான் இந்தப் பேசுவோமா.

அன்றொரு நாள்.. பல மணி நேர வேலைக்குப் பிறகு வீட்டினுள் நுழைந்தேன். மெத்தையைச் சுற்றிலும் தலையணைகள். மூத்த மகன் தவறி கீழே விழாமலிருக்க என் கணவர் போட்ட வேலி. குப்புறக் கவிழ்ந்து ஆழ்ந்த நித்திரை. என் கைகளின் இளஞ்சூட்டுக்கு இலேசாக நகர்ந்தன பிஞ்சுக் கைகள். இளையவன், தொட்டிலில்.

பிள்ளைகளின் கள்ளம் கபடமற்ற முகங்கள். கண்டவுடன் என்னுள் ஏதோ ஒரு குற்ற உணர்வு.

காலையில் பிள்ளைகளைக் கொஞ்சிக்கொள்ளலாமென்று நானும் உறங்கச்சென்றேன். அடுத்த நாள் என்ன வேலை இருக்கிறது?
எப்படி அதற்குத் தயார் செய்வது? எத்தனை மணிக்கு எழவேண்டும்?
பிள்ளைகளை அம்மா வீட்டிற்கு யார் அழைத்துச்செல்வது? இதை யோசித்துக்கொண்டிருந்தபோதே தூங்கிவிட்டேன்.

திடீரெனச் சினுங்கும் சத்தம். பின்னர் அது பெரிதானது. கடிகாரத்தில் மணி 8.30. இளையவனுக்குப் பசி. 5 மணிநேரத் தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் தொடங்கியது எனது நாள். அரைத் தூக்கத்துடன் அவனுக்குப் பசியாற்றினேன்.

மற்றுமொரு சினுங்கல். பெரியவன் எழுந்தான். அம்மா என மடியில் சாய்ந்தான்.

இரண்டு பிள்ளைகளும் என்னைப் பார்த்துச் சிரித்தனர். நான் விழித்தேன். கணவரும் விழித்துக்கொண்டார். அடுத்த ஒன்றரை மணி நேரத்துக்குப் பிள்ளைகளுடன் விளையாட்டு மட்டும்தான்.

மணி 10. மனத்தில் ஓர் எழுச்சி. 11 மணிக்கு வேலைக்குச் செல்லவேண்டுமே என்ற அவசரம். பதற்றம்.

கடகடவென இரு பிள்ளைகளையும் அடுத்தடுத்துக் குளிப்பாட்டினேன். அவசர அவசரமாய் உணவூட்டினேன். வீட்டைவிட்டு வெளியேறினேன். அவர்கள் வயிறு நிறைந்தது. என் மனம் பதைபதைத்தது. காலை உணவு உண்ணாமல், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விரைந்தேன்.

அம்மா வீட்டில் பிள்ளைகளை விட்டேன். சரி, அலுவலகத்துக்குச் சீக்கிரமாகச் செல்லலாம் எனக் கிளம்பினேன். பெரியவன், அம்மா, அம்மா எனக் கதறினான். மனம் இளக ‘அழாதே, அம்மா இங்கேதான் இருக்கிறேன்’ எனச் சொல்லிக்கொண்டே அவனைவிட்டுப் பிரிகிறேன்.


மனம் வலித்தது. மின்தூக்கிவரை வருத்தம். உள்ளே நுழைந்ததும் வேலை பற்றிய எண்ணம். மின்னல் வேகத்தில் வேலையிடத்திற்கு வந்தடைந்தேன்.

அடுத்தடுத்த வேலையைச் செய்தேன். அம்மா அழைத்துப் பிள்ளைகள் நலம் என்ற கூற, ‘அப்பாடா’ என்று பெருமூச்சுவிட்டேன். நிம்மதியாகப் பணியைத் தொடர்ந்தேன். அவ்வப்போது பிள்ளைகளை நினைத்துச் சிரித்தேன். சில நேரம் கண்ணீர் வடித்தேன். முனைப்புடன் பணியைத் தொடர்ந்தேன். ‘அம்மா வேலைசெய்வது உங்களுக்குத் தானே கண்ணுங்களா! நமது எதிர்காலத்துக்குத்தானே’ என எண்ணிக்கொண்டேன்.

மீண்டும் அதே சுழற்சி.

ஆனால் நான் இதில் தனியாக இல்லை. என்னைப் போன்று இன்னும் எத்தனையோ பேர் பல இடங்களிலும் இருக்கிறார்கள்.
நாங்கள் எல்லாருமே சாதாரணப் பெண்கள் அல்லர்.
வேலை செய்யும் தாய்மார்கள்.

அன்புடன்
இலக்கியா செல்வராஜி

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்