Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

பேசி, தீர்ப்போமே!

நாம் அனைவரும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் தெரியாத பல சவால்களை எதிர்நோக்குகிறோம். 

வாசிப்புநேரம் -

உனக்கும் எனக்கும் என்ன பிரச்சினை?


நான் இந்தக் கேள்வியை முன்வைத்தபோது, என் எதிரில் இருந்தவர் அதை எப்படி எடுத்துக்கொண்டார் என்று தெரியவில்லை.

ஆனால் எனக்கோ, இத்தனை நாட்களாக மனத்தில் சுமந்திருந்த பாரம் சற்றுக் குறைந்ததுபோல் இருந்தது. எனக்கும் என் நண்பருக்கும் உரையாடல் தொடர்ந்தது. நிம்மதியாக இருந்தது.


இதற்கு முன் நான் யாரிடமும் இப்படி வெளிப்படையாகப் பேசியதில்லை. இதை முன்னதாகவே செய்திருக்கலாமே என்ற எண்ணம் ஒரு புறம். இதற்காகவா இப்படி பயந்தோம் என்ற யோசனை மறு புறம்.

வெளிப்படையாகப் பேசுவது நல்லதா?

மௌனம் காப்பது சிறந்ததா?

சில நாட்களுக்கு முன்னர் இதை நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால் நான் மௌனத்தையே தேர்வு செய்திருப்பேன்.

ஒருவரைப் பார்த்து வெளிப்படையாகப் பேசுவதற்குத் துணிச்சல் தேவை என நினைத்துக்கொண்டிருந்தேன்.

நான் மட்டும் இல்லை. என்னைப்போன்று பலரும் உள்ளனர்.

வெவ்வேறு பிரச்சினைகளுக்காக, வெவ்வேறு காரணங்களுக்காக அமைதியாக இருப்பவர்கள். வெளிப்படையாகப் பேசும்போது பிரச்சினை இன்னும் பெரிதாகிவிடுமா?

நான் சொல்வதைக் கேட்டு யாராவது சிரிப்பார்களா?

நான் எதாவது சொல்லி அடுத்தவரின் மனத்தைப் புண்படுத்திவிட்டால்? இப்படிப் பல கேள்விகள் எழலாம்.

இத்தகைய சூழ்நிலைகள் அன்றாடம் நிகழலாம்.

இவற்றைக் கையாள வெளிப்படையான பேச்சே சிறந்தது என நினைக்கத் தோன்றுகிறது.

மனத்தில் இருப்பதை உள்ளபடியே சொல்லும்போது சம்பந்தப்பட்ட அனைவரிடத்திலும் தெளிவு பிறக்க வாய்ப்புள்ளது. பேச்சுவார்த்தைகள் தொடரும், பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

ஒன்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசினால் ஒருவர் மற்றொருவரை மேலும் புரிந்துகொள்ள முடியும்.

இல்லையெனில் இறுதிவரை யாராவது ஒருவர் இருட்டிலேயே இருப்பார்.

அந்த மனவருத்தம் பெரும்பாலான நேரங்களில் நமக்குத்தான் நேர்கிறது.

அதேவேளையில் நாம் புண்படாமல் இருக்கவேண்டும் என்றால் நாமும் மற்றவர்களைக் காயப்படுத்தக் கூடாது.

எதைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அதைச் சொல்வதற்கென்று ஒரு முறை உள்ளது.

அது தனிப்பட்ட ஒரு திறமையும் கூட.

அதை வளர்த்துக்கொள்ள நேரமானாலும் தேவையானது என நான் நினைக்கிறேன்.

நாம் அனைவரும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் தெரியாத பல சவால்களை எதிர்நோக்குகிறோம். வாழ்க்கை எனும் இந்தப் பயணத்தை இன்னும் சுலபமாக்கிக்கொள்ள வெளிப்படையாகப் பேசுவது, கனிவாக இருப்பது போன்ற சிறு சிறு மாற்றங்களைச் செய்து பார்க்கலாம்.

அத்தகைய மாற்றங்களால் நமது பயணம் இன்னும் இன்பமானதாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.

இவற்றைப் பின்பற்ற நானும் முயற்சி செய்யப்போகிறேன்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்