Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

பெண்களும் சக பயணிகளே...

பெண்களால் செய்ய முடியாத ஒன்றைக் கூற இயலுமா?

வாசிப்புநேரம் -

பெண்களால் செய்ய முடியாத ஒன்றைக் கூற இயலுமா?


விண்வெளிக்குப் பறப்பதிலிருந்து விவசாயம் வரை எல்லாவற்றையும் செய்யமுடியும் என்பதை எத்தனையோ பெண்கள் நிரூபித்துள்ளனர். அது மட்டுமல்ல உலகிற்கு ஒரு புதிய உயிரைக் கொடுப்பது என்பது பெண்களால் மட்டுமே முடிந்த ஒன்று. நாட்டை ஆளும் பெண்களும் உண்டு, வீட்டை ஆளும் பெண்களும் உண்டு.

அப்படியிருக்கும்போது, பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளும் அநீதிகளும் ஏன் இன்னும் தொடர்கின்றன? வன்முறை என்றால் உடல்ரீதியாக மட்டுமல்ல, மனரீதியாகவும் பாதிப்படைவதையும்தான் நான் குறிப்பிடுகிறேன். அதை வேரோடு அழிக்கும் நடவடிக்கைகளில் நம்மால் ஏன் திறமையாக ஈடுபட முடியவில்லை?



உலகில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால், ஏன் பெண்களை மதிப்பதிலும் அவர்களை ஆண்களுக்கு நிகராக நடத்துவதிலும் மட்டும் மாற்றம் ஏற்படவில்லை?


அப்படியே ஏற்பட்டாலும், அது மெதுவாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் எத்தனையோ ஆண்கள் இருக்கின்றனர். உதாரணத்திற்கு, பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸும் அவருடைய அக்கா வீனஸ் வில்லியம்ஸும் அவர்களது தந்தையின் உதவியின்றி அந்த விளையாட்டில் பெரிய அளவிலான வெற்றியைக் கண்டிருக்க இயலாது.

அதேபோல, என் தந்தையின்றி என்னாலும் எனது அக்கா அண்ணனாலும் இப்போது இருக்கும் நிலைமைக்கு வந்திருக்க முடியாது. அனைவரையும் சரிசமமாக மதிக்கக் கற்றுக் கொடுத்தவர் என் தந்தை. என் அண்ணனுக்கு ஒன்றை வாங்கிக் கொடுத்தால், அதையே ஆண் பெண் வித்தியாசம் பாராது எனக்கும் என் அக்காவுக்கும் வாங்கிக் கொடுப்பார். மூவரையும் வேறுபாடின்றி நடத்தியதால், எனக்கும் அதே எண்ணம் தொடர்கிறது.

பெண்கள், ஆண்கள் என்று பிரித்துப் பார்க்கும் மனப்போக்கில் மாற்றம் உண்டானால்தான் பெண்களுக்கு எதிரான அநீதிகளை முழுமையாகத் தவிர்க்க முடியும், தடுக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. அது முதலில் பெண்களிடமே தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு பெண், மற்றொரு பெண்ணைக் கண்டு பூரிப்படைவது தவறல்ல. அந்தப் பெண்ணைப் போல முன்னேற நினைப்பதும் தவறல்ல. அவள் செய்யும் தவறுகளை முகத்துக்கு நேராகச் சொல்வதும் தவறல்ல. ஆனால் முயற்சியைக் குறைகூறுவதும் புறம் பேசுவதும்தான் தவறு.



பெண்களிடையே முதலில் இந்த மாற்றம் நிகழவேண்டும். அது நேர்ந்தால், சமுதாயத்தில் இன்னும் அதிகமான பெண்கள் சாதிக்க முடியும்தானே?



“நீ பெண்தானே...?” என்று அடுத்தமுறை யாராவது ஆரம்பித்தால், உடனடியாக அவர் பேசுவதை நிறுத்த முற்படுங்கள்.

பெண்களோ ஆண்களோ, ஒருவரை ஒருவர் எவ்வித வேறுபாடுமின்றி மதிக்க முதலில் கற்றுக்கொள்வோம்.

அதன் பின்னர் கருத்துகளை வெளிப்படுத்துவோம்.

அன்புடன்
துர்காநந்தினி தனபாலன்
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்