Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

கண்ணாலே..மெய்யா..மெய்யா..

காலம் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. நேற்றுவரை நாம் பயன்படுத்திக் கொண்டிருந்த தொழில்நுட்பம் இன்று புதுவடிவம் பெற்றுவிடுகிறது. அந்தத் தொழில்நுட்பத்தை முன்னைக்காட்டிலும் அதிகமானோரைப் பயன்படுத்தச் செய்யவதற்கு என்ன வழி? அல்லும் பகலும் ஆராயப்படுகிறது.

வாசிப்புநேரம் -

காலம் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. நேற்றுவரை நாம் பயன்படுத்திக் கொண்டிருந்த தொழில்நுட்பம் இன்று புதுவடிவம் பெற்றுவிடுகிறது. அந்தத் தொழில்நுட்பத்தை முன்னைக்காட்டிலும் அதிகமானோரைப் பயன்படுத்தச் செய்யவதற்கு என்ன வழி? அல்லும் பகலும் ஆராயப்படுகிறது.

மனிதர்களோடு அளவளாவிக் கழிய வேண்டிய நேரம், தொழில்நுட்பக் கருவிகளே துணை என்ற தளத்தில் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. யாரைப் பார்த்தாலும், எவரைப் பார்த்தாலும் கையில் ஒரு சாதனம். தலையைச் சுற்றித் தலைப்பாகை போல ஒரு ‘காதணிபாடி’ (Headphone). குனிந்த தலை நிமிராமல் நிலம் பார்த்து, நாணிக் கோணி ரசித்துச் சிரித்தபடியே அலைகிறார்கள்.

மனிதர்களோடு மனிதர்களாக உறவாடிக் 'களி'க்க வேண்டிய நாம், தொழில்நுட்பச் சாதனங்களின் சகவாசத்தில் பொழுதைக் 'கழி'த்துக் கொண்டிருக்கிறோம். அவற்றின் மாயக் கொடுங்கரங்கள் நம் பொன்னான நேரத்தைக் களவாடித் தின்கின்றன. சமூக ஊடகங்களும் இன்ன பிற நவீனத் தொடர்புச் சாதனங்களும் இரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாய் உருமாறி விட்டன. மெய்நிகர் உலகில் திளைக்கும் பலர் அந்த "மெய்"யை உணரவில்லை.

அருகிலிருக்கும் மழலையின் பூஞ்சிரிப்பை அனுபவிக்க மறக்கும் அல்லது மறுக்கும் நாம் ஒளிர் திரைகளில் முகம் புதைத்து "Lol" மொழி பேசித் திரிகிறோம். நமக்கொன்று நேரும்போது பிறர் பாராமுகமாய்ப் பறந்துபோனால் மனதுக்குள் சபி(லி)த்துக்கொண்டே சங்கடத்திலும் சஞ்சலத்திலும் நெளிகிறோம்.

தமிழில் "Lol - லொள்" என்பதை நாயின் நாபிக் கமலத்திலிருந்து வெளிப்படும் குரைப்பொலியாகச் சொல்லலாம். மெய்நிகர் உலகில் அதை "Laughing out Loud - வெடிச்சிரிப்பு" என்று விளிக்கலாம். அதாவது சிரிப்பொலியைக்கூட எழுதிக்காட்டி உணர்த்தும் அளவுக்குத் தொழில்நுட்பத்தில் தோய்ந்து கிடக்கிறோம். மனித உணர்வுகளை மதிக்கத் தவறித் தேய்ந்து கிடக்கிறோம்.

பக்கத்திலிருப்பவர் பாராமுகமாய் இருக்கிறார். அருகிலிருப்பவர் நம்மை விட்டும் "தூரமாக" இருக்கிறார். ஏன் இந்த இடைவெளி? எதை இட்டு நிரப்புவது? மின்னூட்டம் குறைந்த கைத்தொலைபேசிக்குக் குறித்த நேரத்தில் உரமேற்றத் துடித்தெழும் எண்ணம், சக மனிதரின் வலி தீர வழி காண இர(ற)ங்கி வராதது ஏன்?

எந்தவோர் அம்சம் குறித்தும் இணையத் திரையில் தட, தடவெனத் தட்டிக் கொட்டத் துடிக்கும் விரல்கள், துன்பத்தில் உழலும் மனிதரின் கண்ணீர் துடைக்கப் பரபரவென நீளாதது ஏன்? பத்து வார்த்தைகளைப் படிக்கும்போது வராத மலர்ச்சி, சக மனிதரின் ஆறுதல் குரலைக் கேட்டதும் சட்டென மலர்வது எப்படி?

சில நேரங்களில் எழுத்தை விட, மனிதக் குரலின் மணி நாதம் கூடுதல் நெருக்கம் தருகிறது. கனிவான அந்தத் தொனியைக் கேட்பதற்காகச் செவிகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. மூடிக் கிடக்கும் கதவுகளைத் திறப்பதற்காகத் தட்டிச் சத்தமிடும் பலர், "வா"வென்று அழைத்துத் திறந்து கிடக்கும் காதுகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். 

முல்லா நஸ்ருதீன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யோசிக்க வேண்டாம். "முல்லா" என்று சொன்னாலே "நல்லா" புரியும். முல்லா ஒரு ஞானி. அவருடைய செயல்கள் வெளித்தோற்றத்தில் வேடிக்கையாக இருக்கும். ஆழ்ந்து சிந்தித்தால் அவற்றில் நிறைந்துள்ள அம்சங்கள் துலங்கும்.

ஒருநாள் முல்லாவின் மனைவி செல்லப் பிராணியாக வளர்க்க ஒரு குரங்கு வாங்கி வந்தார். அதைப்பார்த்த முல்லா "கொஞ்சி விளையாடிச் செல்லங்காட்டக் குரங்கா?" என்று கடிந்து குதித்தார்.

"குரங்கு எதைச் சாப்பிடும்?" என்று கேட்டார்.

"சந்தேகமென்ன... நாம் சாப்பிடுவதைத்தான்" என்று மறுமொழி சொன்னார் மனைவி.

"சரி. போகட்டும்.... எங்கே தூங்கும்?" என்று வினவினார் கோபம் சற்றும் குறையாமல்...

"என்ன நீங்க சும்மா தொணதொணன்னு ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்கிறீங்க... நம்ம கூடத்தான் குரங்கும் தூங்கும்" என்றாள்.

"நம் படுக்கையிலா...? நாற்றம் குடலைப் புடுங்குமே" என்று பதறினார் முல்லா.

"என்னங்க நீங்க, நாம சகிச்சுக்கிறதில்லையா.... அதே போல அந்தக் குரங்கும் சகிச்சுக்கிடும். உங்களுக்கு ஏன் வேண்டாத வேலை? அந்தக் கவலையைக் குரங்குகிட்ட விட்டுடுங்க" என்று கண்சிமிட்டிப் பதில் சொன்னார் மனைவி.

முல்லா மனைவியின் கையில் அகப்பட்ட குரங்குபோலத்தான்... நம் கைகளில் தவழும் நவீனச் சாதனங்கள்... அவை நம் சுற்றத்தைச் சுருக்கி விட்டன. கவலைகளைப் பெருக்கி விட்டன. நம்மைச் சுற்றிச் சுற்றத்தார் சூழ்ந்திருந்தாலும், நாம் கருவிகளோடு சுற்றுகிறோம். அவற்றைக் கட்டிக்கொண்டே அழுகிறோம். 

"மெய்" என்றால் "உடல், உடம்பு, மேனி, உண்மை" என்று தமிழில் பல பொருளுண்டு.

"பொய்" எது என்பதைச் சரியாகத் தெரிந்துகொண்டால்.... "மெய்" ஒளிரும்... வெளிப்படும்..  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்