Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

உலகக் கிண்ணம் - வண்ணத்தில்

இம்முறை ரஷ்யாவில் நடைபெறும் போட்டிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்கப் போவதில்லை. 

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம் - வண்ணத்தில்

(படம்:REUTERS/Leonhard Foeger)

அடுத்த மாதம் ரஷ்யாவில் தொடங்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப மூன்று உள்ளூர் ஒலிபரப்பு நிறுவனங்கள் முதன்முதலாக அணி சேரவிருக்கின்றன.

மீடியாகார்ப், சிங்டெல், ஸ்டார்ஹப் ஆகிய நிறுவனங்கள் அண்மையில் அந்த ஏற்பாடு குறித்து அறிவித்தன.

இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் 2014 உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்ப்பதற்கு என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ, அதே கட்டணம் செலுத்தினால் போதும். 

படம்: Don Wong/TODAY

2014இல் சிங்டெல், போட்டிகள் தொடங்க மூன்று மாதங்கள் இருந்த வேளையில் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றது. 

ஆனால் 2010ஆம் ஆண்டை விடக் கிட்டத்தட்ட 59 விழுக்காடு கூடுதல் கட்டணத்தை ரசிகர்கள் செலுத்தவேண்டிய நிலை. 

64 ஆட்டங்களையும் நேரடியாகக் காண, பொருள் சேவை வரியைத் தவிர்த்து அவர்கள் 105 வெள்ளி செலுத்தினர்.

(படம் : Pixabay)

2010இல் வேறோர் இக்கட்டான நிலை.

உலகக் கிண்ணப் போட்டிகளை நேரடியாகக் காண முடியாமல் போய்விடுமோ என்று ரசிகர்கள் பதைபதைத்தனர்.

போட்டிகள் தொடங்க சில வாரங்களுக்கு முன்பு தான் ஒலிபரப்பு நிறுவனங்கள் அவற்றை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றன.

ரசிகர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு.

(படம் : Pixabay)

இப்படி ஒவ்வொரு முறையும் உலகக் கிண்ணம் நெருங்கும்போது போட்டிகளைப் பற்றிய உற்சாகத்துடன் எத்தனை ஆட்டங்களை நேரடியாகப் பார்க்க முடியும், எவ்வளவு பணம் செலுத்த வேண்டியிருக்கும் போன்ற கேள்விகளும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். 

காற்பந்து ரசிகர்களின் ஆசைகளையும் ஆதங்கங்களையும் தீர்த்துவைக்க சமூக மன்றங்கள், உணவகங்கள், காப்பிக் கடைகள், மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் களத்தில் இறங்குவது வாடிக்கையாகி விட்டது. 

குறிப்பாக சமூக மன்றங்களில், பெரிய திரைகளில், அக்கம்பக்கத்துக் குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து ஆட்டங்களைக் காணும்போது அதன் ஆனந்தமே அலாதி தான். 

அதுவும் நட்சத்திரக் குழுக்கள் ஆடும்போது, அவை கோல் போடும்போது ரசிகர்களுடன் சேர்ந்து அரங்கமும் அதிரும். 

(படம் : Pixabay)

இல்லங்களில் பார்த்தாலும் நுண்தெளிவுத் தொலைக்காட்சி, மின்னிலக்கத் தொலைக்காட்சி, அகண்ட தொலைக்காட்சி போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக ஆட்டங்களை விளையாட்டரங்கிலேயே அமர்ந்து பார்ப்பது போன்ற உணர்வு நமக்கு. 

சற்றுப் பின்னோக்கிச் சென்றால் தொலைக்காட்சி பலருக்கு எட்டாக்கனியாக இருந்த வேளையிலும் உலகக் கிண்ணம் மீதான ஆர்வம் மேலோங்கியே இருந்தது. 

தொலைக்காட்சி வைத்திருந்த உறவினர் அல்லது நண்பர் வீட்டிலோ அல்லது சமூக நிலையத்திலோ ஆட்டங்களைச் சற்றுக் காலம்தாழ்த்திப் பார்த்த போதும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. 

(படம் : AFP)

பிரேசிலின் பெலே, இங்கிலாந்தின்  போபி சார்ல்ட்டன் போன்ற ஆட்டக்காரர்கள், கறுப்பு வெள்ளைக் காலத்திலும் ஜொலிக்கவே செய்தனர்.

எனினும் முதன்முதலில் வண்ணத் தொலைக்காட்சியில் உலகக் கிண்ணத்தைப் பார்க்கும் வாய்ப்பு வந்தபோது, முன்பு கண்டும் காணாமல் இருந்தவர்களையும் காற்பந்து மோகம் ஆட்கொண்டது.

அதுவும் நேரடி ஒளிபரப்பு என்றதும் நம்ப முடியாமல் திகைத்தவர்கள் பலருண்டு. 

அப்படி சிங்கப்பூரில் முதன்முதலில் நேரடியாக ஒளிபரப்பான ஆட்டம் எது தெரியுமா?

1974ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதியாட்டம். 

காற்பந்து ஜாம்பவான்கள் மேற்கு ஜெர்மனியும் நெதர்லந்தும் களமிறங்கின.

அவற்றை வழிநடத்திய ஃபிரான்ஸ் பெக்கன்பாவர், ஜொஹான் கிரைஃப் இருவரும் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தனர். 

பெரிய மனம் படைத்த Rediffusion நிறுவனம் அதன் அலுவலகத்துக்கு வெளியே வைத்திருந்த வண்ணத் தொலைக்காட்சியின் பயனாக என்னைப் போன்றார் அந்த ஆட்டத்தைக் காண முடிந்தது. 

அப்போதைய ரேடியோ, டெலிவிஷன் சிங்கப்பூர் (RTS) வண்ணத்தில் ஒளிபரப்பிய முதல் நிகழ்ச்சி அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போது உலகக் கிண்ண அமைப்பு முறையிலும் அதன் ஒளிபரப்பிலும் எத்தனையோ மாற்றங்கள்.

ஆட்டங்களை இலவசமாகப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. 

பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையும் ஆட்டங்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு பெருகிவிட்டன. 

கிரிக்கெட், கூடைப்பந்து, கோல்ஃப் என்று எத்தனையோ விளையாட்டுகள் போட்டிக்கு வந்து விட்டன. 

இருந்தபோதும் உலகின் ஆகப் பிரபலமான விளையாட்டு என்ற பெயரைக் காற்பந்து இன்னும் விட்டுத்தரவில்லை. 

அதுவும் நான்காண்டுக்கு ஒருமுறை உலகக் கிண்ணம் வரும்போது தூக்கத்தையும் மறந்து பலர் கண்ணிமைக்காமல் ஆட்டங்களைக் கண்டு ரசிக்கின்றனர். 


இம்முறை ரஷ்யாவில் நடைபெறும் போட்டிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்கப் போவதில்லை. 

ஆட்டங்களைப் பார்ப்போம்...கொண்டாடுவோம்!! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்