Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

நிலா பார்த்தல்

கடைசியாக நீங்கள் எப்போது முழுநிலவைக் கண்டு ரசித்தீர்கள் ?

வாசிப்புநேரம் -

கடைசியாக நீங்கள் எப்போது முழுநிலவைக் கண்டு ரசித்தீர்கள் ?

சில மாதங்களுக்குமுன் வந்துபோன சூப்பர் மூன், சிவப்பு நிலா கணக்கில் வராது. அதன் அருமை கருதி எல்லாருமே அதைக் காத்திருந்து பார்த்து ரசித்திருப்போம்.

நான் கேட்பது மாதாமாதம் விண்ணில் தோன்றி மறையும் பௌர்ணமியை..

இதுவரை அதைப் பொருட்படுத்திப் பார்க்கவில்லையென்றால் பரவாயில்லை. போகட்டும்.

இனி, எந்த முழுநிலவு நாளையும் விடாதீர்கள்.

பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாக நாம் இலவசமாகக் கிடைக்கும் பல இன்பங்களை முழுமையாகத் துய்ப்பதில்லை.

ஒவ்வொரு மாதமும் தோன்றும் முழுநிலவு என்னைப் பொறுத்தவரை ஓர் அதிசயம்தான்.

சில நாட்களுக்குமுன் வந்து சென்ற சித்திரை முழுநிலவைக் கூட ஆசை தீர அள்ளிப் பருகினேன்.

இந்தியப் பண்பாட்டில் சித்திரை முழு நிலவுக்குப் பல வகையிலும் முக்கியத்துவம் உண்டு.

இந்தியாவில், சித்திரை என்பது கோடை மாதம். மழை முகில்கள் விண்ணில் இருக்கமாட்டா. அதனால், பூரணமாய்ப் பொலியும் நிலவின் அழகை முழுமையாய் ரசிக்க முடியும் என்பது அதற்கொரு முக்கியக் காரணம்.

வானிலை திடீர் திடீரென மாறும் சிங்கப்பூரில் அப்படிச் சொல்லமுடியாது. இருந்தாலும் இந்த ஆண்டுச் சித்திரா பௌர்ணமி மேகமின்றித் தெளிவாகத்தான் காணக்கிடைத்தது.

முழு நிலவைக் கொண்டாடும் சிறந்த வழிகளில் ஒன்று, அதைக் குடும்பத்தோடும் நண்பர்களோடும் சேர்ந்து ரசிப்பது.

கூடவே நமக்குப் பிடித்தமான இசையும் உணவும் சேர்ந்தால் அமர்க்களம் !

நிலாக் காணத் தோதான இடங்கள் சிங்கப்பூரில் ஏராளம் உள்ளன.

ஏதேனும் ஒரு நீர்நிலைக்கு அருகில் சென்று நிலவை அதன் பிரதிபலிப்போடு காண முடிந்தால் பேரானந்தம் !

ஒருமுறை நான் நண்பர்களோடு மெக்ரிட்சி நீர்த்தேக்கம் சென்றிருந்தேன் நிலாக்காண.

அங்குள்ள இரண்டு படகுத்துறைகள், நிலாப் பார்க்க ஏற்ற இடங்கள்.

சுற்றிலும் தண்ணீர். அமைதியான சூழல். மரங்களுக்கு உள்ளிருந்து எட்டிப் பார்க்கும் இளைய நிலா..

கைத் தொலைபேசியில் எழுபதுகளில் வெளிவந்த எம்.எஸ்.வி, இளையராஜா பாடல்கள்.

கொறிக்கக் கொஞ்சம் நொறுக்குத் தீனி.. பருகுவதற்கு ஏதேனும் சூடான பானம்.. ஆகா.. மண்ணில் வந்த சொர்க்கம்.

தரை வீட்டில் வசிப்போர், குடும்பத்தோடு நிலவொளியில் இரவு உணவை உட்கொள்ளலாம்.

அடுக்குமாடி வீட்டில் வசிப்போர் அருகிலுள்ள பூங்காக்களுக்கோ, கடற்கரைக்கோ, நீர்த்தேக்கத்துக்கோ உணவை எடுத்துச் சென்று ரசித்து உண்ணலாம்.

அப்போது உணவின் ருசி இன்னும் கொஞ்சம் அதிகரிப்பதை உங்களால் உணரமுடியும்.

குடும்பப் பிணைப்பை அதிகரிக்க இதுபோன்ற சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

முடிந்தால் கரையோரப் பூந்தோட்டம் சென்று பௌர்ணமிப் பின்னணியில் மின் மினியாய்ச் சுடர்விடும் சூப்பர் மரங்களை ரசிக்கலாம்.

அய்யா என்னால் அன்று வெளியே போகமுடியவில்லை. என்ன செய்யச் சொல்லுகிறீர்கள் என்கிறீர்களா ?

உங்கள் புளோக்கின் கீழே சென்று நிலவைப் பார்த்தவாறு ஒரு மெதுநடையாவது சென்று வாருங்களேன் !

இதை ஏன் யாரும் செய்வதில்லை ? எது நம்மைத் தடுக்கிறது ?

அன்றாடச் செயல்களின் அலுப்பிலிருந்து ஏன் நம்மைத் தளர்த்திக்கொள்வதில் (Relax) நாம் அக்கறை காட்டுவதில்லை ?

நேரமில்லை என்றுமட்டும் சொல்லாதீர்கள்... நான் நம்பமாட்டேன்.

உண்மையிலேயே ஒரு செயலைச் செய்ய நாம் தீர்மானித்துவிட்டால் எப்படியேனும் அதற்கு நம்மால் நேரத்தை ஒதுக்கமுடியும்.

வரலாற்றுத் தலங்களையும், கோட்டை கொத்தளங்களையும் பௌர்ணமி ஒளியில் ரசிப்பது முற்றிலும் ஒரு மாறுபட்ட அனுபவம்.

வெளிநாட்டுப் பயணத்துக்குத் திட்டமிடும்போது, முடிந்தால் அதைப் பௌர்ணமியோடு இணைத்துத் திட்டமிடுங்கள்.

சில பயணத் தலங்களில், ஆதவன் உதயத்தையும் பௌர்ணமியையும் காணத் தனிக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, இந்தோனேசியாவின் போராபுதூர் பௌத்தப் பேராலயத்தை, உதய வேளையில் காண வெளிநாட்டவர் 45 வெள்ளி கட்டணம் செலுத்தவேண்டும்.

மற்ற நேரத்தில் கட்டணம் 25 வெள்ளிதான்.

தாஜ்மகாலை, பௌர்ணமியன்று பார்த்து ரசிக்கக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.

மின்னொளி அறவே இல்லாத இடங்களில்தான் நம்மால் முழுநிலவின் பூரண அழகை உணரமுடியும்.

மின் விளக்குகள், மேகம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதுமற்ற பாலைவனங்கள் சிலவற்றில், பௌர்ணமி நிலவை அனுபவிப்பதற்காகவே சில பயண நிறுவனங்கள் தனிப்பட்ட பயணங்களுக்கு ஏற்பாடு செய்கின்றன.

இணையத்தில் தேடினால் தகவல்கள் கொட்டுகின்றன.

நாம் நம் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லவேண்டியது, நினைத்தாலே இனிக்கும் இத்தகைய அனுபவங்களைத்தான்.

பிற்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை நினைவுகூர்வது இப்படிப்பட்ட அனுபவங்களை வைத்துத்தான்.

பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா ? என்பதைப் போல, பௌர்ணமியன்று மட்டும்தான் நிலாவைப் பார்க்கப் போக வேண்டுமா?என்று கேட்டால், ஒரு நாள் முன்னே பின்னே போனாலும் பாதகமில்லை என்பேன்.

கொஞ்சம் குறைந்தாலும் நிலா நிலாதான் !


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்