Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

உங்கள் ஆடை உங்கள் அடையாளம்

பேசுவோமா

வாசிப்புநேரம் -

ஆடை என்பது வெறும் துணிமட்டும்தானா?

அதற்குள்தான் எவ்வளவு அர்த்தங்கள் ஒளிந்திருக்கின்றன.

ஒருவரின் வயது, அவருடைய அந்தஸ்து, இனம், கலாசாரம், சில நேரங்களில் செய்யும் வேலை இவை அனைத்தையும் பிரதிபலிப்பவை உடைகள். 

ஆடை பற்றி இப்போது எதற்குப் பேசவேண்டும்?

உண்ணும் உணவு பற்றி அதிகம் பேசுகிறோம் இந்நாளில்.

ஆனால் உடுத்தும் உடை குறித்து அவ்வளவு பேசவில்லை.

அதுவும் பேசுவோமாவில்... எனவேதான் உடையைக் கையிலெடுத்தேன்...

நகர்ப் புறங்களில், பல இன சமுதாயத்தில் வாழும் நமக்கு அடையாளம் முக்கியம். களிமண் வடிக்கும் பாத்திரத்திற்கேற்ற அது ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பரிமாணத்தை எடுக்கிறது.

அதிலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நமக்குப் பாரம்பரியத்தையும் கட்டிக்காக்க வேண்டும்.


பாரம்பரிய உடை என்றாலே அது திருமணங்களுக்கும் கோயில்களுக்கும் மட்டுமே என ஒதுக்கப்படுகின்றன.

அதுவும் நம்மில் எத்தனை ஆண்கள், அதுவும் இளம் ஆண்கள் வேட்டி, ஜிப்பா அணிந்து வெளியே செல்கிறார்கள்?

தேவைப்பட்ட நேரங்களில் மட்டும் அத்தகைய ஆடைகளை அணிந்துகொள்கிறோம். அதாவது அந்தச் சமயங்களில் கலாசாரத்தையே நாம் அணிந்துகொள்கிறோம்.


வேலைக்குச் செல்வது என்றால் பெரும்பாலும் நாம் நாகரிக உடையைத்தான் அணிந்து செல்கிறோம். இளையர்கள் பலர், பாரம்பரிய ஆடையை வேலைக்கு அணிந்துசெல்வதைக் கனவில்கூட நினைத்துப் பார்க்கமாட்டார்கள். 

வேலையிடத்தில் நாகரிகத்துக்குத்தான் முதலிடம் என்ற நிலையே பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது. படிப்பு, உலக ஞானம் உள்ளிட்ட அம்சங்களில் மற்றவர்களைப் போன்று அல்லது அவர்களைவிட ஒரு படி மேல் என்று காட்டிக்கொள்ள வேண்டிய சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் அவசியம் ஏற்பட்டிருக்கலாம். சில நேரங்களில் ஒருவரின் இயல்பே அப்படி இருக்கலாம். 

சில வேளைகளில் பாரம்பரிய உடையை அணிய சிலருக்கு ஆசை ஏற்படலாம். அத்தகைய நேரங்களில் எதிர்பாரா கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் சூழல்கூட உண்டாகலாம்.

நானும் அதற்கு விதிவிலக்கல்ல. முன்பு நான் பணிபுரிந்த இடங்களில் சுடிதார் அணிந்து சென்றதுண்டு. ஆனால் சக ஊழியர்கள், “என்ன திருமணத்திற்கு செல்கிறாயா?...நாளைக்குக் உனக்குக் கல்யாணமா?..” என்று கேள்வி கேட்பார்கள்.



பாரம்பரியத்துக்கும் நவநாகரிகத்துக்கும் நடுநிலையை எப்படிக் காண்பது? கலாசாரம் என்பது நாம் எங்கிருந்து வந்தோம் என்பதைக் காட்டுகிறது, நாகரிகம் என்பது நாம் எங்கு இருக்கிறோம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதைப் பிரதிபலிக்கிறது.

இதை நாம் எப்படிக் கையாளப்போகிறோம் என்பதுதான் நம் அடையாளத்தை நிர்ணயிக்கும்.

இந்நேரம் என்ன உடை உடுத்தியிருக்கிறோம் என்று நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

இல்லை என்று சொன்னால் நான் நம்பத் தயாராக இல்லை. அடுத்த முறை ஆடையை எடுக்கும்போது உங்கள் அடையாளம் அது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


அன்புடன்

காயத்திரி அய்யாதுரை



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்