Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

ஸ்பரிசம்

எங்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் இப்போது கூடுதல் அக்கறை செலுத்துகிறோம். ஏன் இப்படி? என்ன நடந்தது?

வாசிப்புநேரம் -

எங்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் இப்போது கூடுதல் அக்கறை செலுத்துகிறோம். இஸ்திரிப் பெட்டியைப் பயன்படுத்திய பிறகு அதை உரிய இடத்தில் வைக்க வேண்டும். மேசை மீது ஏதேனும் பொருட்கள் இருந்தால் அவை மேசை விளிம்பில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சமையலறையில் மும்முரமாக சமையல் வேலை நடந்துகொண்டிருந்தால் அறையின் கதவை மூடிவைக்க வேண்டும்.

ஏன் இப்படி? என்ன நடந்தது? எங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளை நடக்கும் தறுவாயில் இருக்கிறாள். அதனால் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே ஊகித்து முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்கிறோம்.

நடைவண்டியில் உட்கார வைத்தால் வீடு பந்தயத் தடமாகி விடுகிறது. வரவேற்பறையின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு ஒரு நொடியில் பறந்து விடுகிறாள். வண்டி எந்தப் பொருள் மீதாவது மோதிவிடுமோ என்ற பதைபதைப்பு நமக்குள் ஒட்டிக்கொண்டு விடுகிறது. முக்கியமாக, பிள்ளை மீது ஏதும் விழுந்து விடக் கூடாதே என்ற கவலை நம்மைத் தொற்றிக்கொண்டு விடுகிறது.

சில வாரங்களுக்கு முன் தவழ்ந்து கொண்டிருந்த பிள்ளை இப்போது வரவேற்பறை மேசை அல்லது சோஃபா மீது கைவைத்து ஊன்றி எழுந்து நிற்பதைப் பார்க்கும்போது ஏற்படும் பரவசமே தனி. அத்துடன் எந்தப் பிடிமானமும் இல்லாமல் நிற்கும்போது அவளின் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை!

இப்போதே வீடு கலகலக்கிறது, நடக்க ஆரம்பித்து விட்டால் நாம் அவள் பின்னால் இன்னும் வேகமாக ஓட வேண்டியிருக்கும்!
எனினும் இந்தத் தருணங்கள் அற்புதமானவை. எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காதவை. செல்லச் சிணுங்கல் சிணுங்கும்போதும் தன்னையறியாமல் பிடிவாதம் பிடிக்கும்போதும் நமக்குக் கோபம் வந்தாலும் அது சற்று நேரத்தில் பஞ்சாய்ப் பறந்து விடுகிறது. வாழ்க்கையில் எத்தனையோ கவலைகள் இருந்தாலும் அவற்றை மறந்து சிரிக்க அந்த ஒரு நொடி போதும்.

அதுவும் நம்மை அடையாளம் கண்டுகொண்டு நம்மைத் தூக்கச் சொல்லி பிள்ளை கைகளை நீட்டும்போது அதைவிட வேறு மகிழ்ச்சி வேண்டுமா? தொட்டுத் தூக்கும்போது அந்தப் பிஞ்சுக் கைகளின் ஸ்பரிசம் நம்மை மெய்மறக்கச் செய்கிறது. வீட்டை விட்டு வேலைக்குக் கிளம்பும்போது நமக்கு அன்போடு கைகாட்டி விடைகொடுப்பதும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது புன்சிரிப்போடு வரவேற்பதும் நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வரம்.

இத்தகைய கள்ளங்கபடமற்ற அன்புக்காக ஏங்குவோர் பலர் உண்டு. அதனால்தான் குடும்பத்தில் ஒரு பிள்ளையோ பேரப் பிள்ளையோ பிறக்கும்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் அகமகிழ்கின்றனர். பிள்ளையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுகின்றனர்.

பிள்ளைகள் வளர்ந்த பிறகு படிப்பிலும் அதற்கடுத்து வேலையிலும் மூழ்கி விடுகின்றனர். நம்முடன் செலவழிக்க அவர்களுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. அதனால் ஒருவித வெறுமையும் விரக்தியும் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொண்டு பேரனையோ பேத்தியையோ நம்மிடம் தந்தால் அந்த வெறுமை பறந்தோடி விடுகிறது.

இப்போது அண்ணனின் பேத்தி மூலமாக எங்கள் வீட்டில் புத்துணர்ச்சியும் புதுத்தெம்பும் பூத்துக் குலுங்குகின்றன. அண்ணன் மகனும் மருமகளும் அந்த மகிழ்ச்சியை எங்களுக்குத் தந்திருக்கின்றனர்.
இது தொடர வேண்டும் என்பது எங்களின் ஆசை. மகள்கள் விரைவில் திருமணம் செய்துகொண்டு பேரன், பேத்திகளைக் கொண்டுவர வேண்டும். அவர்களின் ஸ்பரிசம் எங்களை மகிழ்விக்க வேண்டும். பேரக் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு மீண்டும் குழந்தைப் பருவத்துக்கே நாங்கள் செல்ல வேண்டும். அந்த நாள் விரைவில் வரும் என்பது எங்கள் நம்பிக்கை. நம்பிக்கை தானே வாழ்க்கை!

பருவத்தே பயிர்செய் என்பது முதுமொழி. வாழையடி வாழையாய் குடும்ப பந்தம் தொடர வேண்டும். குடும்ப பந்தம் வலுவாக இருந்தால் நாடு வளமடையும். அதைத் தலைவர்கள் சொல்லி நாம் அறியத் தேவையில்லை. ஆனால் அது சாத்தியமாவது நம் கைகளில்தான் உள்ளது.

தொடர்ந்து பேசுவோம்.


 (இரா. நடராசன்)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்