Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

நெல்லைக் கொட்டினால் அள்ளலாம்...

இப்படிப்பட்ட வாசகங்களைக் கேட்டிருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இவை நிச்சயம் மன வலியைக் கொடுத்திருக்கும். சிலர் பேசாமல் போய்விடுவார்கள். சிலர் சண்டைக்கு வருவார்கள்.

வாசிப்புநேரம் -

இவ்வளவுதான் உங்கள் சம்பளமா?

என்ன இவ்வளவு குண்டாக இருக்கிறீர்கள்?

கொஞ்சம் சிவப்பாக இருந்திருக்கலாமோ?

இவ்வளவு சாப்பாடும் உங்களுக்கு மட்டுமா?

இப்படிப்பட்ட வாசகங்களைக் கேட்டிருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இவை நிச்சயம் மன வலியைக் கொடுத்திருக்கும். சிலர் பேசாமல் போய்விடுவார்கள். சிலர் சண்டைக்கு வருவார்கள்.

ஒவ்வொரு நாளும் நாம் பலரைச் சந்திக்கிறோம். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவருடனும் வெவ்வேறு உரையாடல்கள். பல வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. அவற்றில் சில மட்டும் தனித்து நம் நினைவில் நிற்கும்.

உரையாடல் முடிந்த பல மணி நேரம் கழித்தும் ஒருவர் ஏன் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார் என்பது மனத்துக்குள் ஓடி ஓடி ஓயாத மன உளைச்சலைக் கொடுக்கும். அதன் பின்னால் வெறேதும் அர்த்தம் உள்ளதா என்ற யோசனைகள் அலை மோதும்.

அந்த நபர் ஏதோ ஓர் எண்ண ஓட்டத்தில் அதனைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் நமக்குள் சில தேவையற்ற கேள்விகள் எழலாம். அவர் நம்முடன் கோபமாக இருக்கிறாரோ? நம்மை ஏளனமாகப் பார்க்கிறாரோ? நம்மை முட்டாள் என்று நினைக்கிறாரோ? இப்படிப் பல விதமான சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்.

நாம் ஒன்றுமே இல்லை என நினைக்கும் சொல் மற்றவருக்குப் பெரும் சங்கடத்தை உண்டாக்கலாம். நாம் பெரிது என்று நினைப்பது, ‘உப்புக்கல்லுக்கு உபயோகமில்லை’ என்று சொல்வார்களே! அப்படிப்பட்டதாக இருக்கலாம். சொன்னவரும் கேட்டவரும் எந்தெந்த மனநிலையில் இருந்தனர் என்பதைப் பார்க்கவேண்டும். அந்த நாள் ஒருவருக்கு எப்படிப்பட்ட ஒன்றாக இருந்தது என்பது மற்றவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

எப்போதும் நல்ல வார்த்தைகளையேதான் எல்லாரும் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. அது சாத்தியமும் இல்லை. ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்தவேண்டிவரும்.

(நன்றி: Wikimedia commons)

இதுவும் முடியாது. அதுவும் முடியாது. அப்போது என்னதான் பேசுவது?
பேசுவதற்கு முன்னர், இன்னும் சற்று நேரத்தில் வெளிவரப்போகும் வார்த்தைகள் குறித்து 3 வினாக்களைக் கேட்டுக்கொள்ளலாம். அதாவது நாம் சொல்லப்போவது...

1.உண்மையா?
2.கனிவாக இருக்குமா?
3.தேவையா?

இவற்றைப் பின்பற்றினாலே பாதி மனச் சங்கடங்களைத் தவிர்த்துவிடலாம் என்பது என் கருத்து. மூன்றில் இரண்டைச் செய்தாலே பெரும்பாலான சச்சரவுகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. சொல்வதற்கு எதுவும் நல்ல வார்த்தை இல்லை என்றால் பேசாமல் இருக்கலாம்.

நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பல சவால்களை எதிர்நோக்குகிறோம். அனைவருக்கும் பின்னால் ஆயிரம் கதைகள் உண்டு. அதை அடுத்தவர் முற்றிலும் புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்று சொல்லவில்லை. அது சிரமம். பேசிவிட்டு யோசிப்பதில் பயனில்லை. பேசுவதற்கு முன்னால் யோசியுங்கள் என்றுதான் சொல்கிறேன். நான் அந்த முயற்சியில் ஏற்கனவே இறங்கிவிட்டேன்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்