Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

மொழி தொடருமா... தொலையுமா?

உலகில் ஒரு மொழி அழிந்து போகுமா? என்று யாராவது கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

வாசிப்புநேரம் -

உலகில் ஒரு மொழி அழிந்து போகுமா? என்று யாராவது கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

அட அப்படியும் நடக்குமா...? என்று ஆச்சரியப்படுபவரா நீங்கள்... உங்களுக்காக ஒரு கதை.

அய்யய்யோ.....இது கதையல்ல... உள்ளத்தைச் சுடும் உண்மை.

‘ஸ்பானிஷ் கற்றுக்கொடுப்பதற்காக சாண்டா மரியா இக்ஸகட்லன் நகருக்கு வந்த ஆசிரியர்களுக்கு Ixcatec மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் Ixcatec மொழியைப் பேசினால், அந்த மொழியைப் பேசக்கூடாது என்று சொல்லிக் கடுமையாகத் தண்டித்தனர். Ixcatec உருப்படாத மொழி என்றும் அதற்குப் பதிலாக ஆங்கிலமோ, ஸ்பானிஷோ கற்றுக் கொள்ளலாம் என்றும் பிள்ளைகளின் மனத்தில் நஞ்சூட்டினர் ஆசிரியர்கள். விளைவு, இன்று சாண்டா மரியா இக்ஸகட்லன் நகரில் சுமார் 600 பேர் மட்டுமே Ixcatec மொழியைப் பேசுகின்றனர்’ என்று துயரத்தின் பின்னணியை வலியுடன் விவரிக்கிறார் ஒரு மூத்தவர்.

உலக மயம், தொழில்நுட்ப வளர்ச்சி, இனப் பாகுபாடு போன்ற பல காரணங்களால் உலகம் முழுவதும் 170 பழங்குடியின மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன.

உலகில் அதிக அளவில் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்று பிரேசில். அங்குள்ள பழங்குடியின மக்கள் பேசும் சுமார் 180 மொழிகள் 2030 ஆம் ஆண்டுக்குள் மறைந்து போகும் அபாயத்தில் உள்ளன

மெக்சிக்கோவில் உள்ள மக்கள் 68 மொழிகளைப் பேசுகின்றனர். அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு மொழிகள் இன்னும் சில காலத்தில் காணாமல் போகலாம்.

அர்ஜென்ட்டினா, பொலிவியா, கொலம்பியா, சிலி, எக்குவடோர், பராகுவே, பெரு போன்ற நாடுகளிலும் இதே போன்ற அபாயம் தொடர்கிறது.

இந்த ஆண்டை (2019) அனைத்துலகப் பழங்குடியின மொழிகளுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ. அரசாங்கங்களுடனும், பழங்குடி மொழிகளைப் பேசுவோருடனும் இணைந்து அழியும் நிலையிலுள்ள மொழிகளைப் பாதுகாக்க முனைகிறது யுனெஸ்கோ.

ஒரு மொழி அழிந்துபோகாமல் காப்பதற்கு அரசாங்கமும் அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது ஒருபுறமிருக்கட்டும். நாம் என்ன செய்யலாம்?

மொழி தெரிந்தவர்களைச் சந்திக்கும்போது, தாய்மொழி தவிர்த்துப் பிற மொழியில் பேசுவதில்லை என்று உளமார உறுதியெடுத்து, அதைத் தவறாமல் பின்பற்றத் தொடங்கினால், நாளைய தலைமுறைக்கும் அவரவர் மொழி தொடரும். மறந்தால், மறந்தவர்களின் மொழி தொலையும்.

அன்புடன்
K H M ஸதக்கத்துல்லாஹ்

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்