பேசுவோமா

Images
  • Look
    (படம்: Pixabay)

முதல் பார்வை


ஒருவரை முதன்முதலில் பார்க்கும்போது அவரைப் பற்றிய முதல் அபிப்பிராயம் மனத்தில் ஆழமாகப் பதிவதுண்டு.

அண்டைவீட்டார், சக ஊழியர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம்.

அவர்கள் மீது முதன்முதலில் நமக்கு ஏற்பட்ட அபிப்பிராயம் காலப்போக்கில் மாறியிருக்கலாம்.

அவர்களுடன் பழகிய பிறகு, அவர்களைப் பற்றி மேலும் படித்துத் தகவல் பெற்ற பிறகு அவர்களைப் பற்றிய எண்ணம் மாறலாம்.

சிலரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துவிடும்.

சிலருடன் பழகிய பிறகும் அவர்களைப் பற்றி நல்ல எண்ணம் நமக்கு ஏற்படுவதில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தைவிட குறைவான காலத்தில் ஒருவரைப் பற்றிய அபிப்பிராயம் நம் மனத்தில் பதிந்துவிடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

அது பெரும்பாலும் தவறானதாய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மற்றவர்கள் நம் மீது கொண்டுள்ள எண்ணமும் அதேபோல்தான் பதிவாகிறது.

மற்றவர்கள் நம்மை முதன்முதலில் பார்க்கும்போது அவர்களிடையே நம்மைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்த பல அம்சங்கள் உதவுகின்றன.

தோற்றமே அந்தப் பட்டியலில் முதலாவது.

தோற்றம் என்று சொல்லும்போது, சுத்தமான ஆடைகள், தெளிவான முகம் போன்றவை அடங்கும்.

இந்த நேரத்தில், இணையத்தில் நான் கண்ட காணொளி ஒன்றைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது.

தோற்றம் எந்த அளவுக்கு மற்றவர்களின் எண்ணத்தைப் பாதிக்கிறது என்பதைப் பற்றிய ஆய்வின் தொடர்பிலான காணொளி அது.

அதில் முதலில் ஒரு சிறுமி இடம்பெறுவாள்.

அவளுக்குக் கிட்டத்தட்ட 5 வயது.

முகம், கை, கால் அனைத்தும் அழுக்கான நிலையில் அசுத்தமான ஆடைகளுடன் சிறு பிள்ளை தெருவில் திரிவதைக் காணொளி காட்டுகிறது.

ஏழ்மையில் இருக்கும் பிள்ளை என்பது அவளின் தோற்றத்தில் தெரிகிறது.

அந்தப் பிள்ளைக்கு அருகில் செல்லவே பலரும் தயங்கினர்.

முகம் சுளித்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, அதே காணொளியில், அதே பிள்ளை தோன்றியது.

இம்முறை, முகம், கை, கால் அனைத்தும் சுத்தமான நிலையில், சுத்தமான ஆடைகளை அணிந்துகொண்டு.

அவளைக் கண்ட உடனேயே பலருக்கும் மனம் இரங்கியது.

அவள் பெற்றோரைத் தொலைத்துவிட்டு அச்சத்தில் இருப்பதாகப் பலருக்கும் தோன்றியது.

இந்தக் காணொளியைக் கண்ட எனக்கோ மனம் உறுத்தியது.

நானும்கூட அதைப் போலவே அந்தப் பிள்ளையைப் பார்த்திருக்கலாம்.

அந்தச் சிறுமியை, ஒரு பிள்ளையாக, ஒரு மனிதராகப் பார்ப்பதற்குப் பதிலாக அவளின் தோற்றத்தைப் பார்த்து எனக்குத் தவறான எண்ணம் தோன்றியது.

இதுதான் நம் அன்றாட வாழ்க்கையிலும் பல வேளைகளில் ஏற்படுகிறது.

யாரைப் பார்த்தாலும் நமக்குள் அவர்களைப் பற்றி உடனடியாக ஓர் எண்ணம் தோன்றும்.

அவ்வாறு தோன்றும் எண்ணம் நாம் அவர்களை அணுகும் முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அத்தகைய முதல் அபிப்பிராயத்தைக் கொண்டே ஒருவரை முற்றிலும் மதிப்பிடுவது தவறானது என்பதைப் பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன்.

முதல் சந்திப்பில் மற்றவர்களைப் பற்றித் தவறான அபிப்பிராயம் தோன்றுவதை நம்மால் முற்றிலும் தவிர்க்க முடியாது.

ஆனால் இயன்ற அளவு அதைத் தவிர்த்துக்கொண்டால், எதிலும் அழகு தெரியும் அல்லவா?

இது என் அபிப்பிராயம், அனுபவம்.

அன்புடன்
மோகனா

Top