Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்!

மலேசியத் தேர்தல் குறித்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானதிலிருந்து மக்களிடையே சலசலப்பு. மாற்றத்தை விரும்பியவர்களும் இருந்தனர்; விரும்பாதவர்களும் இருந்தனர்.

வாசிப்புநேரம் -

மலேசியத் தேர்தல் குறித்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானதிலிருந்து மக்களிடையே சலசலப்பு. மாற்றத்தை விரும்பியவர்களும் இருந்தனர்; விரும்பாதவர்களும் இருந்தனர்.

1946ஆம் ஆண்டு இன்றைய தினம் தோற்றுவிக்கப்பட்டது அம்னோ கட்சி. மலேசியாவின் ஆகப் பெரிய கட்சி; ஜொகூர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திரு ஓன் ஜாஃபரால் தோற்றுவிக்கப்பட்டது. மலாய் மக்களின் மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி இவற்றை நோக்கமாகக் கொண்டது அம்னோ. 

படம்: Melissa Goh

பின்னர் 1973ஆம் ஆண்டு மற்ற சில கட்சிகளுடன் இணைந்து பாரிசான் நேசனல் எனும் பெயரில் கூட்டணிக் கட்சியானது. மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த கூட்டணியானது.

 60 ஆண்டு கால ஆட்சி. பல ஏற்றங்கள், இறக்கங்கள், பிரச்சினைகள், கொள்கை வேறுபாடுகள் அனைத்தையும் தாண்டி தாக்குப்பிடித்தது கூட்டணி. பாரிசான் நேசனல் கூட்டணியும் அரசாங்கமும் ஒன்றுதான் என்ற மனநிலைக்கு கிட்டத்தட்ட பெரும்பாலானோர் வந்துவிட்டனர். 

படம்: Reuters/Olivia Harris

கூட்டணியிலிருந்து நீக்கப்பட்ட திரு அன்வார் இப்ராஹிம் சிறையிலடைக்கப்பட்டதும், கட்சி தொடங்கியதும், 2003-இலிருந்து அடுத்தடுத்த தேர்தல்களில் இடங்களைக் கைப்பற்றியதும் வரலாறு.

22 ஆண்டுகளாகப் பதவியிலிருந்து, தமக்கு அடுத்துவந்த தலைவர்களை ஆட்சியில் அமர்த்தி ஒதுங்கிக்கொண்ட டாக்டர் மகாதீர் முகமது, மீண்டும் அரசியலுக்குள் வர முடிவுசெய்தார். அதன் பின் மக்கள் அரசியல் நிலவரங்களை உற்று கவனிக்கத் தொடங்கினர்.

2018 தேர்தல் அறிவிப்பு வந்தது; தேசிய முன்னணிக் கூட்டணி, நம்பிக்கைக் கூட்டணி எனும் பக்கட்டான் ஹரப்பான், பாஸ் கட்சியின் தலைமையில் மற்றொரு கூட்டணி.

மக்களின் கவனத்தைத் திருப்பும் பணியில் மும்முரமாக இறங்கின கட்சிகள். வெளிப்புற நடவடிக்கைகளை வைத்து மக்களை ஈர்க்கும் காலம் மலையேறிவிட்டது என்பதை உணர்ந்தன கட்சிகள். அறிக்கையோ, உறுதிமொழியோ, நல்லதோ, கெட்டதோ, கைத்தொலைபேசிக்கு வரும் தகவல்களே முதன்மை வகித்தன.

தேர்தல் நாளும் வந்தது. 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டினர். ஒருசில சம்பவங்களைத் தவிர வாக்களிப்பு சுமுகமாக முடிந்தது. 

முடிவுகள் இரவு சுமார் 8.30 மணிமுதல் வெளிவரத் தொடங்கின. நள்ளிரவில் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் எதிர்த்தரப்பு பக்கட்டான் ஹரப்பான் முன்னணியில் இருப்பதாகக் காட்டியது.

பொய்த் தகவல்கள் அதிக அளவில் பரவும் காலம் இது. நம்பலாமா? நம்பக்கூடாதா? பலருக்குப் பிடிபடவில்லை. தேர்தல் ஆணையரின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்வரை ஒன்றையும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. 

நள்ளிரவைத் தாண்டிய பிறகு, 6 மாநிலங்கள் பக்கட்டான் ஹரப்பான் வசம் என்பது உறுதிசெய்யப்பட்டது, முதல் அதிர்ச்சி! 10 மாநிலங்களைத் தன்வசம் கொண்டு அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் இருந்த தேசிய முன்னணிக்குப் பேரதிர்ச்சி.

நாடாளுமன்ற இடங்களில் நெருக்கமான போட்டி. அதிகாலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. 60 ஆண்டு காலம் அசைக்க முடியாமல் இருந்த ஆட்சி அசைக்கப்பட்டுவிட்டது. உலகின் எந்தக் கருத்துக்கணிப்பும் இதை முன்னுரைக்கவில்லை. இதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதுதான் கவனிப்பாளர்களும் கணிப்பாகவும் இருந்தது. அதேசமயம், பாரிசான் நேசனல் கூட்டணி 79 இடங்களைக் கைப்பற்றும் அளவுக்கு வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.

அசம்பாவிதங்கள் நடக்குமோ என்ற எண்ணம் பலரிடையே இருந்தது. பல்வேறு ஊகங்கள். சமூக ஊடகங்களில் பரபரப்பான பல தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அனைத்துக்கும் தயாராய் இருந்தனர் மக்கள்.

புதிய மாற்றத்துடன் பொழுது புலர்ந்தது. ஆனால், நாட்டின் எந்தப் பகுதியிலும் பிரச்சினை இல்லை. கடையடைப்பு இல்லை; கலவரம் இல்லை; எல்லாம் வழக்கநிலையில்.

ஆட்சியில்தான் மாற்றமே ஒழிய, எங்களிடம் இல்லை – இந்தக் கருத்தில் தெளிவாக இருந்தனர் மக்கள். “கொள்கைகள் வேறுபடலாம்; ஒரு தலைவரைப் பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம்; குறைகள் இருக்கலாம்; குற்றங்கள் இருக்கலாம்; ஜனநாயக முறையில் வாக்களித்து விருப்பத்தைத் தெரிவிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது; அதைத் தவிர்த்து கொண்டாட்டம் என்ற பெயரில் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதிலோ அதிருப்தியின்பேரில் நாட்டின் ஒழுங்கைச் சீர்குலைப்பதிலோ அர்த்தம் இல்லை” – இந்தத் தெளிவான மனநிலை மக்களிடையே தென்பட்டது.

புதிய ஆட்சியை விரும்பியவர்களிடம் அமைதியான புன்னகை; விரும்பாதவர்களிடமோ ‘மாற்றத்தைத்தான் பார்ப்போமே’ என்ற மனநிலை!

பக்குவம் என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. உலகமயமாதலுக்குப் பின், எங்கும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. உலகில் நிகழும் ஒவ்வொரு மாற்றமும், பொருளியல் ரீதியாக, வாழ்வாதார ரீதியாக நாடு கடந்து அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன.

எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மாற்றத்துக்குத் தயாராய் இருப்பதே சிறந்த வழி.

இந்தப் பக்குவத்தை வெளிப்படுத்திய மலேசிய மக்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.

-மீனா ஆறுமுகம்



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்