Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

குறையொன்றுமில்லை...

‘என்னமோ ஓடுது’ ஓகே...’  ‘பரவாயில்லை...’ ‘போய்க்கிட்டிருக்கு…’

வாசிப்புநேரம் -

‘எப்படி இருக்கீங்க?’

‘வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு?’

‘சௌக்கியமா?’

ஒவ்வொரு நாளும் இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளாமல் எவராலும் இருந்துவிட முடியாது.

ஆனால் இவற்றுக்கு பதில்கள்...

‘என்னமோ ஓடுது’

ஓகே...’ 

‘பரவாயில்லை...’

‘போய்க்கிட்டிருக்கு…’

இப்படித்தானே பெரும்பாலும் கூறியிருப்போம் அல்லது கேட்டிருப்போம்.

அத்தகைய கேள்விகள் வரும்போது இப்படிச் சொல்லிப் பாருங்களேன்...

(படம்: Pixabay)

‘இதுக்கு மேல நல்லா இருக்கமுடியாது...’

 நன்றாக இருக்கிறோமோ இல்லையோ அடுத்தவருக்கு ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்கலாம்தானே. 

‘அட இவரே நல்லாயிருக்கும்போது, நமக்கென்ன குறைச்சல் நாமும் நன்றாகத்தானே இருக்கிறோம்’ என்ற எண்ணத்தை எதிரில் உள்ளவரிடம் விதைக்கலாமே.

பொதுவாக வாழ்க்கையில் எப்போதும் வசந்தம் வீசிவிடுவதில்லை.

சில நேரம் வசந்தம். சில நேரம் வெயில்.

சில வேளைகளில் மழை. சில நேரம் குளிர். 

தட்பவெப்பச் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு உடல் தானாக மாறிக்கொள்கிறது.

ஆனால் மனம் அப்படியில்லை. 

(படம்: Pixabay)

உள்ளுக்குள் நிகழும் போராட்டங்களால் பொங்கும்.

பொசுங்கும். அலைபாயும்.

சரியைச் சரியென நினைக்கும்.

சரியைத் தவறெனச் சந்தேகிக்கும்.

பல நேரங்களில் தவற்றைச் சரியென நம்பும்.

பின்னர் தவற்றைத் தவறுதான் என உணரும்போது வருந்தும்.

உள்ளுக்குள் புழுங்கும். வெளியில் புலம்பும். 

மனம் அறிவல்ல. பகுத்தறியும் வேலை அறிவினுடையது.

மனமோ விளைவுகளை அசைபோடும்.

அவை வந்தவையாகவோ வரப்போகின்றவையாகவோ இருக்கும்.

விளைவு என்றால் கவலை, வருத்தம், கோபம், விரக்தி, ஆனந்தம், குழப்பம் இப்படிப்பட்ட உணர்வுகள்தாம்.

சும்மாவா சொன்னார்கள் மனம் ஒரு மந்தி என்று.

நம்மை அப்போதே சிந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

(படம்: Pixabay)

அன்றாடம் உடலைச் சுத்தம் செய்வதுபோல உள்ளத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

குப்பை சேரச் சேர துர்நாற்றமே மிச்சம்.

குப்பைகளை அகற்றினால் மனம் இலேசாகும்.

வாழ்க்கையும் இனிக்கும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்போருக்கும் வருத்தமாகக் காட்சி தருவோருக்கும் வித்தியாசங்கள் உண்டு. 

‘எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கப்போகிறேன்’ என்று முன்னவர்கள் முடிவெடுக்கிறார்கள்.

அதைச் செயலிலும் காட்டுவார்கள்.

இங்கு சூழ்நிலை என்று சொல்வதைச் சிக்கலான, பதற்றமான தருணங்கள் எனக் கொள்ளலாம்.

இவர்கள் தெளிவாக இருப்பார்கள்.

இது வேண்டும். இது வேண்டாம். இதுதான் முடியும்.

இது முடியாது

என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

சுட்டெரிக்கும் கோடையையும் இதந்தரும் சுகந்தமாக மாற்றக்கூடிய வித்தை இவர்களுக்கு அத்துப்படி.. அதைக் கைக்கொண்டால் நாமும் ஆனந்தமாக இருக்கலாம். 

இன்னொரு வகையினரும் உண்டு. பிரச்சினை வருவதற்கு முன்பே மாயையில் உழல்வார்கள்.

அப்படியிருக்கும் நிலையில் என்ன செய்கிறோம் பேசுகிறோம் என்பது தெரியாது. 

மற்றவர்களைக் காயப்படுத்திவிடக்கூடிய சந்தர்ப்பமும் ஏற்படலாம்.

காயப்பட்டது நெருங்கிய உறவினர்களாகவோ அன்புக்குரியவர்களாகவோ இருக்கும்பட்சத்தில் சங்கடந்தான். இரு தரப்பினருக்குமே.

(படம்: Pixabay)

 ஏன் உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ கொட்டிவிட்டோம் என்று கடுமையாகப் பேசியவருக்குத் தோன்றலாம்.

எதிரிலிருப்பவர், புரிந்துகொண்டவராக இருந்தால், வலியின் வேதனை காரணமாகவே இவர் இப்படிப் பேசுகிறார் என்பதை உணர்ந்துகொள்வார். இல்லையென்றால் சிரமம்தான். 

பல வேளைகளில் மன்னிப்பு கேட்டாலே போதும். வருத்தம் நீங்கி மகிழ்ச்சி திரும்பும்.

தவறு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்பது அவசியம், உறவு நிலைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்.

‘விருமாண்டி’யின் இறுதிக் காட்சி வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

‘மன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்’.

எவ்வளவு உண்மை.

வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பவர்களால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியாது.

எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டாலே போதும். பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டுவிட முடியும்.

அனுபவிக்காததை இழக்கமுடியாது.

வாழ்க்கையில் பல அம்சங்களை அனுபவித்துக்கொண்டிருப்போம். ஆனால் அவற்றைப் பற்றி அதிகம் யோசித்திருக்கமாட்டோம்.

பறிபோகும் போதுதான் பலருக்கும் அவற்றின் அருமை தெரியவரும். இந்த மாதிரி நேரங்களில், ‘நடப்பவை எல்லாம் நன்மைக்கே’ எனும் எண்ணம் ஏற்றம் தரும்.

எல்லாருக்கும் நல்லவராய் இருப்பது இயலாத காரியம். முயற்சி செய்யலாம். சிலருக்கு நம்மைப் பிடிக்காமல் போகலாம்.

வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

(படம்: Pixabay)

என்ன செய்யலாம்?

நம் வகையில் சரியாக இருக்கிறோமா என்று எண்ணிப்பார்க்கலாம்.

100 விழுக்காடு உத்தமராக இருப்பது சிரமம். அப்படி இருக்கவும் முடியாது.

70 விழுக்காடு நல்லவர் என்றாலே அபாரம்.

ஏற்றுக்கொள்ளவேண்டும். அனைவரையும் அவரவர் நிலையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதுவே மனக்கசப்புகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழி என்கின்றனர் தத்துவ ஞானிகள்.

இன்பமாக இருக்க இன்னொன்றையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

(படம்: Pixabay)

எல்லாவற்றிலும் வெற்றிபெற முடியுமா?

எப்போதும் தாயம் விழுமா?

என்றுமே நினைத்தது நடக்குமா?

நிச்சயம் இல்லை.

இதனைப் புரிந்துகொண்டால் மனச் சஞ்சலத்துக்கு இடமிருக்காது. மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

அடுத்தவரின் வெற்றியை நம் வெற்றி என நினைக்கும் பக்குவம் வந்தாலே போதும்.

நிம்மதியும் மகழ்ச்சியும் எப்போதும் மனவாசலில் கொலுவீற்றிருக்கும்.

எனவே...

குறையொன்றுமில்லை...


அன்புடன்,

சபா. முத்து நடராஜன்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்