Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

தனிமையிலே... இனிமை காண...

அழகிய மலையடிவாரம்.

வாசிப்புநேரம் -
தனிமையிலே... இனிமை காண...

(படம்: Pixabay)

அழகிய மலையடிவாரம்.

அங்கே ஒரு மேட்டுப்பகுதியில் அடுக்கடுக்காய்ப் புத்தம்புதிய தரைவீடுகள்.

இடத்தைக் காவல் காப்பவரிடம் அனுமதி பெற்று, உள்ளே சுற்றிப் பார்க்கச் சென்றேன்.

அதிகாரி ஒருவர் இன்முகத்தோடு வரவேற்று, கூடவே இருந்து இடத்தைச் சுற்றிக் காண்பித்தார்.

குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடி மகிழ ஒரு மண்டபம்.

திரைப்படங்களைப் பார்த்து ரசிக்க, ஒரு சிறிய திரையரங்கம்.

உடலுரத்திற்குப் பயிற்சிக்கூடம்.

சதுரங்கம், கேரம் போன்ற விளையாட்டுகளுக்கென்று தனியறை.

முடி திருத்தி, முக ஒப்பனை செய்துகொள்ள ஓர் அறை.

உணவுக்குச் சிற்றுண்டிச் சாலை.

இவற்றையெல்லாம் சுற்றிக் காண்பித்துவிட்டு அதிகாரி, பசுமை சூழ்ந்த வளாகத்தைச் சுற்றிக் காட்டினார்.

சில்லென்று வீசிய காற்றில் உள்ளம் குளிர்ந்தது.

வசிப்பதற்கு உகந்த சுற்றுச்சூழல் என்று எண்ணிக்கொண்டேன்.

இறுதியாக அங்குள்ள தரைவீடுகளைச் சுற்றிப் பார்த்தேன்.

வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை என்று கச்சிதமான வடிவமைப்பு.

பார்க்கும் அனைவருக்குமே இங்கு வீடு வாங்கலாம் என்று ஆசைவரும்.

ஆனால் வாங்க முடியாது.

55 வயதைக் கடந்தவர்கள் மட்டுமே இங்கு வீடு வாங்கலாம்.

ஆம். இந்த இடம் ஓய்வுபெற்று ஆரோக்கியமாக இருப்பவர்கள் தங்கள் இறுதிக்காலம் வரை தங்குவதற்காகக் கட்டப்பட்டிருக்கிறது.

மலேசியாவின் ஈப்போ நகரில் உள்ளது.

ஆஸ்திரேலிய மாதிரியைப் பின்பற்றி, முதன்முறையாக மலேசியாவில் இப்படியோர் ஓய்வுக் கிராமத்தைக் கட்டியிருக்கிறார்கள்.

அதுவும் முதியவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்பதைப் பார்த்துப் பார்த்துக் கட்டியிருக்கிறார்கள்.

வாரத்தில் இரண்டு முறை அவர்களைக் கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்ல வண்டிகள்.

உடல் நலமில்லை என்றால் உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வசதிகள்.

ஒரே வயதை ஒத்தவர்கள் உடன் வசிப்பதால், பேச்சுத்துணைக்கு யாரும் இல்லையே என்று வருத்தமில்லாமல் வாழலாம்.

எல்லாம் சரி. எந்தக் குறையும் இல்லை.
ஆனால், பிள்ளைகளுடன் அல்லது பிள்ளைகளுக்கு அருகில் வசிக்க விரும்பும் மூத்தோரிடையே இந்த ஓய்வுக் கிராமம் பிரபலமாக இருக்கிறதா ?

யாரெல்லாம் இங்குத் தங்கியிருக்கிறார்கள் என்று அதிகாரியிடம் வினவினேன்.

ஈப்போவில் உள்ளவர்கள் இந்த ஓய்வுக் கிராமத்தில் தங்குவதில்லையாம்.
மலேசியாவின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் இங்கு வீடு வாங்கித் தங்கியிருக்கிறார்கள்.

பிள்ளைகள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் அல்லது வேறு மாநிலங்களுக்குக் குடி பெயர்ந்திருக்கலாம்.

அந்நிலையில் தனிமையில் வாடவேண்டாமே என்று முதியவர்கள் ஓய்வுக் கிராமத்தைத் தேர்ந்தெடுப்பதாக அறிந்துகொண்டேன்.

எனக்குள் எத்தனையோ எண்ணங்கள்.

ஒரு கணம், இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று தோன்றியது.
யாருக்கும் தொல்லை கொடுக்காமல், கையிலிருக்கும் காசைக் கொண்டு கண்ணியமாக வாழ்க்கைப் பயணத்தை முடிப்பதற்கு இது சிறந்த வழி என்று நினைத்தேன்.

மறுகணம், காலம் முழுவதும் சொந்தபந்தங்களோடு வாழ்ந்துவிட்டு, கடைசிக் காலத்தில் அவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் புதிய சுற்றத்துடன் புதிய நட்புடன் வாழ்வது மகிழ்ச்சியைத் தருமா என்று கேட்டுக்கொண்டேன்.

விடை கிடைக்கவில்லை.

இன்னமும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

என் கேள்விக்கான விடை காலத்திடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்