பேசுவோமா

Images
  • smile
    (படம்:Pixabay)

தேவையற்ற ஏக்கம்

நண்பர்களுடன் உணவகத்திற்குச் சென்றிருப்போம்.

கேட்ட உணவு கொண்டுவரப்பட்டிருக்கும். 

ஆனால் அதில் ஒரு வாய் எடுத்து உண்பதற்கு முன்னரே, நண்பர்களில் யாராவது ஒருவர் கையைத் தட்டிவிடுவார். உணவைப் படம் பிடிக்க வேண்டும்.


Facebook, Insta Feed, Insta Story, Snapchat என்று பல்வேறு சமூகத் தளங்களில் அன்றைய உணவு, சந்திப்பு, உடை அனைத்தும் பதிவாகும். 

என்னைப் போன்ற millennials எனும் இன்றையத் தலைமுறையினர் தப்பமுடியாத ஒன்று சமூக ஊடகங்கள். 

அதில் பல நன்மைகள் உண்டு.

பல நாள் காணாத நண்பர்களுடன் தொடர்புகொள்வது, படங்களையும் தகவல்களையும் பகிர்ந்துகொள்வது, ஒரே பொழுதுபோக்கு அம்சத்தில் ஆர்வம் கொண்டவர்களைச் சந்திப்பது எனச் சமூக ஊடகங்களின் மூலம் இளம் தலைமுறையினர் பல நன்மைகளைப் பெறுகின்றனர். 

ஆனால் அதே நேரம் அவர்களுக்கு மனவுளைச்சல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகவும் அமைகிறது அது.


நம்முடைய வாழ்க்கையை மற்றவர்களோடு ஒப்பிடுவதற்கும் வழிவகுக்கின்றன சமூக ஊடகங்கள். 

பதவி உயர்வு, திருமணம், வெளிநாட்டுப் பயணம் என நண்பர்கள் பல நிகழ்வுகளைச் சமூக ஊடகங்களில் பதிவு செய்வார்கள்.

அவர்களுக்காக மகிழ்ச்சி அடைந்தாலும் அவர்களுடைய வெற்றியை நம்முடைய வாழ்க்கையோடு ஒப்பிடுவது இயல்பு. மற்றவர்கள் நம்மைவிடச் சிறப்புத் தேர்ச்சி பெறுகிறார்களோ நாம்

வாழ்க்கையில் பின்தங்கிவிட்டோமோ போன்ற எண்ணங்கள் மனத்தில் தோன்றுகின்றன. இதனால் தேவையற்ற மனவுளைச்சல் ஏற்படுகிறது. 


அதுமட்டுமல்லாமல் நாம் பொதுவாக நல்லவற்றைத்தான் சமூக ஊடகங்களில் பதிவு செய்வோம். முகத்தில் உள்ள பருவை நீக்கவும் மெலிந்த உடல் கொண்டதைப் போல் படத்தை மாற்றியமைக்கவும் பல செயலிகள் உள்ளன.

‘Filter’ போட்டு, செயலி பயன்படுத்தி மெருகூட்டப்பட்ட படங்கள் உண்மை வாழ்க்கையின் பிரதிபலிப்பல்ல என்பதை நம்மில் பலர் எளிதில் மறந்துவிடுகிறோம். 

பதவி உயர்வுக்காகக் கடினமாக உழைப்பது, உடற்பயிற்சி செய்வதற்காக உறக்கமில்லாமல் சிரமப்படுவது, வெளிநாட்டுப் பயணத்திற்காக பிடித்த ஆடைகளையும் உணவையும் வாங்காமல் பணத்தைச் சேமிப்பது... சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ள பெரும்பாலான மகிழ்ச்சி தரும் இத்தகையத் தருணங்கள் சிரமமில்லாமல் வந்திருக்கமாட்டா. ஆனால் அவற்றைப் பார்க்கும்போது நம்முடைய மனம் ஏங்கும்… ஒப்பிட்டுப்பார்க்கும். நண்பர்களால் மட்டும் சுலபமாகச் சாதிக்க முடிந்தது ஏன் நம்மால் முடியவில்லை என்ற சிந்தனை தோன்றும்.

சமூக ஊடகங்களை இனி பயன்படுத்த வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. 

ஆங்கிலத்தில் சொல்வதைப் போல ‘take it with a pinch of salt’. 

கண்ணால் பார்ப்பது அனைத்தும் உண்மையல்ல. 

வெற்றி என்பது ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் வித்தியாசமான விதத்தில் அமையும்.

மற்றவர்களைப் பார்த்து உள்ளுக்குள் மருகும்போது நம் வாழ்க்கையில் நிகழும் நல்ல தருணங்களைத் தவறவிட்டுவிடுகிறோம். 

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள். 

நண்பர்களுக்காக மகிழ்ச்சி அடையுங்கள். 

ஆனால் ஏக்கம் வேண்டாம். 

கைத்தொலைபேசியைக் குனிந்து பார்ப்பதை விடுத்துச் சற்றே நிமிர்ந்தால் நம்முடைய வாழ்க்கையிலும் எத்தனையோ மகிழ்ச்சி தரும் தருணங்கள், வெற்றிகள் கண்முன் வரும். 

யாருக்குத் தெரியும், நம்முடைய Instagram படங்களைப் பார்த்து யார் ஏங்குகிறார்களோ!

இப்படிக்கு ஏக்கமில்லா அன்புடன்,


  

Top