Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

‘வண்ண’ நிலவே ‘வண்ண’ நிலவே...

நிலா காயும் நேரம்....

வாசிப்புநேரம் -

நிலா காயும் நேரம்....

நல்ல தமிழ்ப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே பூங்காவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.

அன்றும் அப்படித்தான்.

தொலைபேசியில் இருந்து வழிந்தது ஹரிஹரனின் வசீகர கானம் ‘வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா’ .....

குறும்புக்கார நண்பர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

"ஒரு நிமிடம்... எல்லாரும் வானத்தைப் பாருங்க...."

பார்த்தோம்...

"நிலா பால் போல் ஒளிருது. ஆனால்... ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தில் கவிஞர் பழநிபாரதி ‘வண்ண நிலவே வண்ண நிலவே’ என்று ஏன் எழுதினார்?"

நிலா எப்படி வண்ணமாக இருக்கும்? 

கொளுத்திப் போட்டார் குறும்பர்.

"ஏம்பா பாட்டைக் கேட்டோமா? பட்ட பாட்டை மறந்தோமான்னு போறதை விட்டுட்டுப் பெரிசா கேள்வியெல்லாம் கேட்கிறே...?" கொந்தளித்தார் இன்னொரு நண்பர்.

அடடா.... நிலாவே குளிருது... நீ ஏம்பா கொதிக்கிறன்னு சொல்லிட்டு...எப்பா குறும்பாசிரியர், எங்களுக்கு ஒண்ணும் தெரியாது... நீயே அந்தக் காரணத்தைச் சொல்லிடு 

என்று வார்த்தைகளில் வலை விரித்தார் இன்னொருவர்.

குறும்பர் தொடர்ந்தார்.....

வண்ணம் என்றால் ‘நிறம், அழகு’ என்ற பொருள் உண்டு. ஆனால் பெரும்பாலும் நாம் அந்தச் சொல்லை ‘வர்ணம்’ என்பதற்கு மாற்றாக நிறம் என்பதைக் குறிக்கவே பயன்படுத்துகிறோம். ஆனால் திரைப்படப் பாடல் எழுதும் கவிஞர்கள் வண்ணத்தை ‘அழகு’ என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள் என்றார் குறும்பர்.

‘புரியலையே... ஓர் உதாரணம் சொல்லு’ என்றார் மற்றொருவர்.

"’பாடாத தேனீக்கள்’ படத்தில் ஒரு பாட்டு வருமே.... ராதிகாவும், சிவகுமாரும் குழந்தையை வைச்சுக்கிட்டுப் பாடுவாங்களே ‘வண்ண நிலவே... வைகை நதியே....’ன்னு ஒரு பாட்டு... கேட்டதுண்டா” என்றார் குறும்பர்.

“ஆமாமா” என்று பெரிதாகத் தலையாட்டினார் நண்பர்.

வண்ணம் என்ற சொல் ‘திறமை’ என்ற பொருளிலும் சில இடங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு.

“ஓவியர், சித்திரம் தீட்டுவதில் தம் ‘கை வண்ணத்தைக்’ காட்டினார் என்று சொல்லப்படுகிறது. அங்கு "வண்ணம்" என்ற சொல் நிறத்தை மட்டுமல்ல ... ஓவியரின் திறமையையும் சேர்த்தே குறிக்கிறது” என்று விளக்கினார் குறும்பர்.

“சரி... வண்ணம் என்ற சொல்லைப் பயன்படுத்திய வேறு திரைப்பாடல்களைச் சொல்லுங்க பார்க்கலாம்” என்று கேட்டார் அவர் ....

நண்பர்கள் பட்டியலிடத் தொடங்கினர்....

‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ…’

(சிகரம் - வைரமுத்து)

‘பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்…’

(பாசம் - கவியரசு கண்ணதாசன்)

நண்பர்கள் மட்டும்தானா... நீங்களும் பட்டியல் போடலாம்...

ஏன்னா வாலிபக் கவிஞர் வாலியே சொல்லியிருக்காரு...

‘எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா.....’ (அவதாரம்)


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்