Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

மண்வாசனைச் சொற்கள்

‘பசியாறிட்டீங்களா?’ இந்தச் சொல்லைக் கேட்டவுடன், நம்மில் பலருக்கு, உணவின் ஞாபகத்துடன் உள்ளூர் உணர்வும் சற்று எழக்கூடும்.

வாசிப்புநேரம் -

‘பசியாறிட்டீங்களா?’ இந்தச் சொல்லைக் கேட்டவுடன், நம்மில் பலருக்கு, உணவின் ஞாபகத்துடன் உள்ளூர் உணர்வும் சற்று எழக்கூடும்.

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளைத் தவிர இச்சொல்லை மற்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பரவலாகப் பயன்படுத்தி நான் கேட்டதில்லை. காலை உணவிற்கு மட்டுமே பொருந்தக்கூடிய அந்தச் சொல்,  மண்வாசனையைக் கமழச் செய்கிறது. மனத்திற்கு இன்பத்தைக் கூட்டுகிறது. 

அதுபோன்ற பல சொற்கள் வட்டார வழக்கில் கலந்துள்ளன. உள்ளூர்வாசிகளுக்கு அவை பழக்கமான  சொற்கள். எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.

ஆனால் வெளிநாட்டினருக்கோ அவை புதுமையாக இருக்கலாம். புரியாமலும் போகலாம்.

வட்டார வழக்குச் சொற்களால் நேர்ந்த ஒரு சம்பவத்தை எனது நண்பர் பகிர்ந்துகொண்டார்.

உணவங்காடி நிலையத்திற்குச் சென்று தமிழ்க் கடைக்காரரிடம்..

"ஒரு veg சாப்பாடு வேண்டும்" என்று கேட்டார் நண்பர்.

 "மரக்கறியா?" எனக் கடைக்காரர் கேள்வி எழுப்பினார்.

இல்லை எனக்குக் கறி எல்லாம் வேண்டாம். நான் சைவம். ஒரு veg சாப்பாடு மட்டும் போதும்

என்று நண்பர் பதிலளித்தார்.

மரக்கறி என்றால் சைவ சாப்பாடு

 என்று கடைக்காரர் விளக்கமளித்தார்.

அப்போதுதான் நண்பருக்குப் புரிந்தது மரக்கறி என்ற சொல் சைவ உணவைக் குறிக்கிறதென்று.

இதுபோன்ற சம்பவங்கள் உங்களுக்கோ உங்களின் நண்பர்களுக்கோ நேர்ந்திருக்கலாம். ஒரு சொல்லை ஒருவர் வேறோர் அர்த்தத்தில் புரிந்துகொள்வதால் வரும் சிக்கல் அது.

மற்றொரு சம்பவத்தில் எனது அண்டை வீட்டாரின் இல்லத்திற்கு நண்பர் ஒருவர் விருந்திற்குச் சென்றிருந்தார். அப்போது அவரின் காலணிகளைப் பார்த்து..

சப்பாத்து நல்லா இருக்குதே. எங்கே வாங்குனீங்க?

என அண்டை வீட்டைச் சேர்ந்த ஒருவர் நண்பரைக் கேட்டார்.

நண்பர், சப்பாத்து என்பதை சப்பாத்தி என்று எண்ணி,

அதை எல்லாம் எங்கும் வாங்க மாட்டேன். வீட்டிலே செய்துவிடுவேன்

எனச் சொன்னார்.

வீடெங்கும் சிரிப்பொலி. பின்னர்தான் ‘சப்பாத்து’ என்ற சொல்லின் பொருளைப் புரிந்துகொண்டார் நண்பர். அது காலணியைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொல்.

மேங்கறி (இலையின் மேலே வைக்கப்படும் காய்கறி வகைகள்), கூட்டாளி (நண்பர்), தோம்பு (குப்பைத் தொட்டி), புட்டா மாவு (பவுடர்), குசினி (சமையல் அறை), அல்லூறு (கழிவுநீர்,சாக்கடை), சிலுவார் (காற்சட்டை), பசார் (சந்தை), கம்பம் (கிராமம்), ஊடாங் (இறால்) ஆகிய சொற்கள் உள்ளூர்ப் பேச்சு வழக்கில் அதிகம் புழங்கப்படுகிறது.

படம்: நித்திஷ் செந்தூர் 

சிங்கப்பூரர்கள் உரையாடும்போது இத்தகைய சொற்கள் இடம்பெற்றால் இனம் புரியாத பிணைப்பு ஏற்படுவது இயல்பே.

அந்தப் பகுதியின் தனித்துவத்தை இச்சொற்கள் பிரதிபலிக்கின்றன. இப்போது உங்களுக்கும் மண்வாசனைச் சொற்கள் சில நினைவுக்கு வரலாம்.

 

அன்புடன்

நித்திஷ் செந்தூர்


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்