Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

முடிவு நம் கையில்

நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்க முடிவு எடுத்ததற்கு நன்றி. உங்களுக்கு இருக்கும் பல வேலைகளுக்கு நடுவே நேரம் ஒதுக்கி, சரி என்னதான் இந்த யாஸ்மின் எழுதியிருக்கிறார் எனப் பார்க்க வந்ததற்கு நன்றி.

வாசிப்புநேரம் -

நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்க முடிவு எடுத்ததற்கு நன்றி. உங்களுக்கு இருக்கும் பல வேலைகளுக்கு நடுவே நேரம் ஒதுக்கி, சரி என்னதான் இந்த யாஸ்மின் எழுதியிருக்கிறார் எனப் பார்க்க வந்ததற்கு நன்றி.

இந்த மாதிரித்தான் நாம் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் பல முடிவுகளை எடுக்கத் தள்ளப்படுகிறோம்.

எந்த வேலையை முதலில் முடிக்கலாம்? என்ன சாப்பிடலாம்? பல நாள் சந்திக்காத நண்பரைத் தொடர்புகொள்ளலாமா? இந்த உடையை வாங்கலாமா? வேறு வேலையைத் தேடுவோமா? பெற்றோரைப் பார்க்கச் செல்லலாமா? இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஒரு நாளில் எழுந்ததிலிருந்து உறங்கும்வரை எத்தனையோ முடிவுகளை எடுக்கிறோம்.

ஒவ்வொரு முடிவையும் எடுப்பதற்கு முன் பல தடவை யோசிக்கிறோம். பலரிடம் அது பற்றிப்  பேசுகிறோம். ஏன்? நாமே நமக்குத் தெரிந்த வகையில் தராசுத் தட்டில் அதை வைத்து நன்மை தீமைகளை எடைபோடுகிறோம்.

உண்மைதானே?

பல்கலைக்கழகத்தில் Ethics எனும் நீதி நெறிகள் பற்றிப் படித்தது நினைவுக்கு வருகிறது. ஒரு முடிவு எடுக்கும்போது எதைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது பற்றி அதில் விவாதிக்கப்பட்டிருக்கும்.

குறிப்பாக 3 கருத்துகள் இருக்கின்றன.

1.            எந்தவொரு சூழ்நிலையிலும் எது சரியோ அதைத் தான் செய்யவேண்டும். நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்போம்.. அப்பா வழக்கறிஞர்... மகன் குற்றம் புரிந்திருந்தாலும் அவருக்குத் தண்டனை கிடைக்கவேண்டுமெனப் போராடுவார். மகனாக இருந்தாலும் குற்றம் குற்றமே என நிரூபிப்பார். எது சரி எது தவறு என நிர்ணயிக்கச் சட்ட திட்டங்களைப் பின்பற்றலாம்.


2.            முடிவெடுப்பதற்கு முன் அது விளைவிக்கும் நன்மையை எடைபோடலாம். உதாரணத்திற்கு, வசதி குறைந்த ஒருவர் வீட்டிற்குத் தனியாக நடந்துகொண்டிருக்கிறார். தாங்கமுடியாத பசி அவருக்கு. அப்போது தரையில் 10 வெள்ளி கிடப்பதைப் பார்க்கிறார். அதை உரியவரிடம்  கொடுப்பதா? பசியைத் தணிக்கப் பயன்படுத்திக்கொள்வதா? திருப்பிக் கொடுப்பது நியாயம் என்றாலும் எங்கே,  யாரிடம் கொடுப்பது?

ஒரு சிலர் பசியைப் போக்க அந்த 10 வெள்ளியைப் பயன்படுத்தலாம் எனச் சொல்வார்கள். அது தவறில்லை என்பார்கள். ஒரு சிலர் அது தவறு, திருப்பித்தான் கொடுக்கவேண்டும் என்பார்கள். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? யோசித்துப் பாருங்கள்.


3. சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம். அதாவது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என யோசிக்கவேண்டும். எது அதிகமானோருக்கு நன்மையைக் கொண்டுவருகிறதோ,  அந்த முடிவைத்தான் எடுக்கவேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு ரயில் வருகிறது. அதன் பாதையில் 5 ஊழியர்கள் மாட்டிக்கொண்டார்கள். ரயில் பாதையை மாற்றலாம். ஆனால் மாற்றினால் அந்தப் பாதையில் ஏற்கெனவே வேறு வேலை செய்துகொண்டிருக்கும் ஒருவர்  இறந்துவிடுவார். என்ன செய்யலாம்? எதுவும் செய்யாவிட்டால், 5 பேர் இறந்துவிடுவார்கள். இதில் பல விதமாக யோசித்து முடிவெடுக்கலாம். எது சரி எது தவறு எனச் சொல்லமுடியாது.

வாழ்க்கையில் பல வாய்ப்புகள் வரும். நிறைய நேரங்களில் அவற்றின் தொடர்பில் ஒருவர் எடுக்கும் முடிவைப் பற்றிப் புரியாமல் தவிப்போம். சில நேரங்களில் அவரின் முடிவு தவறென நினைத்து நல்ல வாய்ப்பை விட்டுவிட்டாரே எனப் புலம்பித் தள்ளுவோம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, அதற்காக வருந்தத் தேவையில்லை.

சரி இந்தக் கட்டுரையை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன்.

இறுதியாக... வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் நம் கையில். அவற்றுக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து முடிவெடுப்போம்.

அன்புடன்

யாஸ்மின் பேகம்

 

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்