பேசுவோமா

Images
  • Pesuvoma Baby
    (படம்: Pixabay) 

‘எவரிடமும் கற்கலாம்’


குழந்தைகளின் சிரிப்பில் தெய்வத்தை உணரலாம் என்பார்கள்...


அதுவும் சொந்தங்களுக்குக் குழந்தைகள் பிறக்கும்போது அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வருணிக்க முடியாது.

என் குடும்பத்தில் நான் கடைக்குட்டி; பெற்றோரின் செல்லப்பிள்ளை. 14 ஆண்டு நீடித்தது என் ஆட்சி.

அந்த நேரத்தில் அக்காவுக்கு முதல் குழந்தை பிறந்தது.
அத்தனை பேரின் கவனமும் பெண் சிசுவின் பக்கம் திரும்பியது. குடும்பத்தின் புதிய ராணி வந்துவிட்டார்.


எப்படி ஒரே நாளில் அனைவரின் கவனத்தையும் இந்தப் பச்சிளங்குழந்தையால் ஈர்க்க முடிந்தது?

முதல் பேத்தி என்பதாலா?

இப்படி இன்னும் சில கேள்விகள் எழுந்தன, அந்தக் குழந்தையின் பிஞ்சுக் கைகளை நான் பிடித்தபோது.


காலம் செல்லச் செல்ல அவள் என் கையைப் பிடித்து நடக்கத் தொடங்கினாள்...

அவள் என்னை அழைத்ததோ சித்தி என்று... அக்கா பிள்ளை என்பதைத் தாண்டிய பந்தம்.


இருவருக்கும் இடையில் கண்களால் பேசக்கூடிய அளவு நெருக்கம்.
எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழ முயற்சி செய்யும் குழந்தையிடமிருந்து கற்றுக்கொண்டேன் மனவலிமையை.

என் கண்ணீரைக் கண்டால், குழந்தைக்குக் காரணம் புரியாது. ஆனால் உடனே துடைத்துவிட பறந்துவரும் கைகள்...

பிறர் துன்பத்தில் இருக்கும்போது சமாதானம் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை; உடன் இருந்தாலே போதும்.

மற்ற உடன்பிறப்புகளுக்கும் குழந்தைகள் பிறந்தன. குடும்பத்தில் இதுவரை 8 பேரப்பிள்ளைகள்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு பெற்றோரின் அரவணைப்பைத் தட்டிக் கழித்த பிள்ளைகள் வார இறுதிகளில் என் மடிமேல் தூங்கினர்.
அத்தை மடி மெத்தையடி என இதைத்தான் சொன்னார்கள் போலும்.

காற்பந்து விளையாட்டில் என்னையும் சேர்த்துக்கொள்வர். வார நாட்களில் பள்ளிகளில் நடந்தவற்றைச் சொல்வார்கள்.

பொறுமையோடு ஒன்றை விளக்குவது, பரபரப்பிலும் அமைதியைக் கடைப்பிடிப்பது, இருப்பதைச் சமமாகப் பகிர்ந்துகொள்வது, சோகத்தை மறந்து சிரிப்பது, சிக்கல்களைக் கடக்க பிறருக்குக் கைகொடுப்பது... அண்மைப் பாடல்கள், தொழில்நுட்பம் முதலியவற்றை அலசுவது எனப் பிள்ளைகளிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம்.

என்னைப் பார்த்து அவர்களும் கற்றுக்கொள்வார்கள் என்ற நினைப்பும் நித்தம் இருக்கும் சிந்தையில்...
எது செய்தாலும் ஒன்றுக்குப் பலமுறை யோசிக்க வைக்கும் அந்த நினைப்பு.


வார்த்தைகளைவிட பெரியவர்களின் நடத்தையை சிறார்கள் அதிகம் கவனிக்கின்றனர்.


அதனால் நாம் அதிகம் கவனத்தோடு இருக்கவேண்டியுள்ளது.

இப்படி நம்மையும் பண்படுத்துகின்றனர் பிள்ளைகள்.

நாம் வளர்வது நமக்காக மட்டுமல்ல, அடுத்துவரும் தலைமுறையினருக்கும்தான்...
  

Top