Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

எது சாதா’ரணம்’?

பலர் சாதாரணமாக எண்ணக்கூடிய வார்த்தைகள், செயல்கள் தலையெழுத்தை மாற்றக்கூடியவை. இத்தகைய அனுபவங்கள் நமக்கு ஏற்பட்டால் சிலர் நம்மிடையே இப்படிக் கூறலாம், "அட... ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டார், அதனால் என்ன?

வாசிப்புநேரம் -

ஒருவர் மற்றொருவரைப் புண்படுத்தினால் அவரிடம் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளச் சொல்வது வழக்கம்.

பாதிக்கப்பட்டவரின் நலனில் அக்கறை உள்ளவர்கள் அதைத்தான் செய்வர். ஆனால் யார் என்ன சொன்னாலும் கடும் வார்த்தைகளுக்கு ஆளானவரின் மனம் சில நேரங்களில் ஆறாது.

இதற்கெல்லாம் எதற்காக மனத்தை அலைக்கழிக்கவேண்டும் என்று சுற்றியுள்ளவர்கள் விவகாரத்தை உதறித் தள்ளலாம்.

ஒருவர் இன்னலுக்கு ஆளாகும் அந்தத் தருணம் அவரின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றக்கூடியதாக உருவெடுக்கலாம்.
தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியை ரயிலிலிருந்து தள்ளிவிடவில்லை என்றால் இந்தியாவில் புரட்சி எழுந்திருக்காது.

அங்கு பிரிட்டிஷ் ஆட்சி கவிழ்ந்திருக்காது, உலகம் முழுவதும் பிரிட்டனின் ஆதிக்கம் சரிய ஆரம்பித்திருக்காது. எல்லாம் மாறிவிட்டது. இன்று நாம் வாழும் உலகமே வேறு!

சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து பிரிந்தபோது என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார் மறைந்த நமது முதல் பிரதமர் திரு. லீ குவான் இயூ.

சிறிய தீவான சிங்கப்பூருக்கு இனி பிழைப்பதே சிரமம் என்று மலேசியா உட்பட பல நாடுகள் கருதின அன்று.

அதைப் பொய்யாக்கவேண்டும், வாழ்ந்து காட்டவேண்டும் என்ற மனவுறுதி திரு. லீக்கு ஏற்பட்டது. மலேசியாவிடமிருந்து பிரியாமல் இருந்திருந்தால் இன்று சிங்கப்பூர் கொடிகட்டிப் பறக்குமா என்பது சந்தேகமே.

1987இல் அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. ராமசந்திரன் மறைந்தபோது அவரின் உடலைப் பார்க்கச் சென்ற திருவாட்டி ஜெயலலிதாவைப் பீரங்கி வண்டியிலிருந்து சிலர் கீழே தள்ளிவிட்டனர்.

அந்தச் சம்பவம் நேராதிருந்தால் திருவாட்டி ஜெயலலிதா அரசியலுக்குள் இத்தனை முனைப்புடன் முன்னேறியிருப்பாரா...

கேள்விக்குறியே. அவரின் மரணம் பல உலகக் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இத்தனைக்கும் அவர் இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் ஒருவர்தான். திருவாட்டி ஜெயலலிதா சர்ச்சைக்குரிய ஒருவர். ஆனால் அது வேறு, இது வேறு. 

பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தருவதாகக் கருதப்படும் மகாபாரதத்தின் ஒரு காட்சியில் திரௌபதி துரியோதனனைக் கேலியாகப் பேசுவார்.

அதுவரை பாண்டவர்களுக்குச் சிறிய அளவில் பிரச்சினை தந்துகொண்டிருந்த துரியோதனன் அந்தச் சம்பவத்திற்குப் பிறகே கொடூரமானவராக உருவெடுத்தார் எனச் சொல்லப்படுவதுண்டு.

இப்படிப் பல உதாரணங்கள்.

பலர் சாதாரணமாக எண்ணக்கூடிய வார்த்தைகள், செயல்கள் தலையெழுத்தை மாற்றக்கூடியவை.

இத்தகைய அனுபவங்கள் நமக்கு ஏற்பட்டால் சிலர் நம்மிடையே இப்படிக் கூறலாம், "அட... ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டார், அதனால் என்ன?

தெரியாமல் பேசிவிட்டார், விடுங்கள்... அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்..." என்று. பாதிக்கப்பட்டவருக்குத்தான் தெரியும் அந்த வேதனை, வலி. இந்த உண்மை பலருக்குத் தெரிவதில்லை.

சாதாரணம் என்று நாம் நினைக்கக்கூடிய வார்த்தைகள், செயல்கள், பாதிக்கப்பட்டவரை ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும்.


எனவே எது சாதாரணம்?


அது அவரவரைப் பொறுத்ததே.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்