பேசுவோமா

Images
  • pm lee 10yr
    (படம்: Facebook.com/leehsienloong)

படங்கள் சொல்லாத மாற்றங்கள்

ஆண்டின் தொடக்கத்தில் பலர் சமூக ஊடகங்களில் தங்களின் இரு படங்களைப் பதிவேற்றம் செய்திருந்ததைப் பார்த்திருப்பீர்கள். இந்த ஆண்டு எடுத்த படத்தையும் 10 ஆண்டுக்கு முன்னர் எடுத்த படத்தையும் அடுத்தடுத்து அவர்கள் வைத்திருந்தனர்.

இணையத்தில் பரவிவரும் இந்தச் சவாலுக்கு ‘#10yearchallenge’ என்று பெயர்.

பத்து ஆண்டுகளில் உடல் ரீதியாக என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை இந்தப் படத்தொகுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உடல் மெலிந்துள்ளதா? முகத்தில் சுருக்கங்கள் இருக்கின்றனவா? ஆடை அலங்காரங்களில் என்ன விதமான மாற்றங்கள் என்ன? இப்படி மேலோட்டமாகப் பல மாற்றங்களைக் கண்டுபிடித்துப் பழங்கால நினைவுகளைக் கண்முன் நிறுத்த இந்தச் சவால் உதவுகிறது.

இதில் நம் பிரதமர் லீ சியென் லூங் உட்பட சில தலைவர்களும், ஷ்ருதி ஹாசன் போன்ற திரைப்பட நட்சத்திரங்களும் மேலும் பலரும் கலந்துகொண்டனர். நம் ‘செய்தி’க் குழுவில் பல செய்தியாளர்களும் படங்களைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்தனர்.

ஆனால் என் மனத்தில் ஒரு கேள்வி எழுந்தது. தோற்றம் குறித்த மாற்றங்களைப் பகிர்ந்துகொள்ளப் பலரும் ஆர்வமாய் இருந்தனர். மாற்றங்கள் உடல் ரீதியாக மட்டும்தான் ஏற்படுகின்றனவா?

கடந்த 2009இலிருந்து இன்று வரை மனத்தளவில் நாம் பரிணாம வளர்ச்சியைக் கண்டிருப்போம். குணநலன்களும் காலப்போக்கில் மாறியிருக்கும். அவற்றைப் பற்றிச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டவர்களை நான் பார்க்கவில்லை. கேள்விப்படவும் இல்லை.

10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தேன். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதே வாழ்க்கையில் எனக்கிருந்த ஒரே குறிக்கோள். அதை நோக்கி நான் பயணம் செய்தேன். வேறு எதிலும் நான் கவனம் செலுத்தவில்லை.

இப்போது, மனத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. அது என் இலக்குகளிலும் பிரதிபலிக்கிறது. எவற்றுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுவது என்பதில் கருத்து மாறியுள்ளது.

மீண்டும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுநிலைப் பட்டத்தைப் பெற மனம் ஏங்குகிறது. அதே சமயத்தில், பணியிடத்தில் முன்னேறி நற்பெயரைப் பெறவேண்டும் என்ற ஆர்வத்தையும் அழுத்தமாய் மனத்தில் விதைத்திருக்கிறேன்.

ஆனால் அண்மையில் திருமணமானதால் கணவர், பெற்றோர், முதிர்ந்த உறவினர்கள், உற்ற நண்பர்கள் ஆகியோருடன் நேரம் செலவிடுவதற்கு நேரத்தை வகுக்கவேண்டும் என்று தெளிவாகப் புரிகிறது. நேரம் இருக்கும்போதே அவர்களுடன் செலவிடுவதுதான் முக்கியம் என்பதிலே எனக்குத் திடமான நம்பிக்கை.

‘வெற்றி என்றால் என்ன?’ என்பதிலும் நான் புதிய பொருளைக் கண்டுபிடித்திருக்கிறேன். ‘தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறுவது மட்டுமே வெற்றி’ என்று இருந்த காலம் மாறி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மற்றவர்களைக் கரையேற்றிவிட்டு என்னையும் மேம்படுத்திக்கொள்வதே வெற்றி என்பதை உணர்கிறேன்.

வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிந்துணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.

#10yearchallenge-இல் ஈடுபட்டவர்கள் மேலோட்டமான மாற்றங்களை மட்டும் பார்க்காமல் தங்களுக்குள்ளே ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றியும் சிந்திப்பது நல்லது.

‘கடந்த பத்தாண்டுகளில் ஆழ்மனத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?’ என்பதை தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளவேண்டும்.

அத்துடன் நிறுத்திவிடாமல், அடுத்த 10 ஆண்டுகளில் உடல்ரீதியாக மட்டுமின்றி மனத்தளவிலும் குணநலன்களிலும் ஏற்பட விரும்பும் மாற்றங்களைக் குறித்துவைத்துக்கொள்ளலாம்.2029இல் படம் எடுக்கும்போது அத்துடன் இணையத்திலோ நாட்குறிப்பிலோ அவற்றைப் பின்னர் பதிவு செய்யலாம்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அப்போது தெளிவாகலாம்.

அன்புடன்
சுதா ராமன்

Top