Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

எனது பார்வையில்..

நம் அனுமதியில்லாமல் நமது மகிழ்ச்சியை யாராலும் பறிக்கமுடியாது என்பதைக் கொல்கத்தா குழந்தைகள் எனக்கு உணர்த்தினார்கள். 

வாசிப்புநேரம் -

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஏதாவது ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறார்கள். 

ஒருமுறை குடும்பத்தோடு அலாஸ்காவுக்குக் கப்பல் பயணம் புறப்பட்டோம்.
அலாஸ்கா பூமியின் வடகோடியில் இருக்கிறது.

அவ்வளவு தூரம் செல்வதற்கு எனக்கு மிகவும் மலைப்பாக இருந்தது.

எளிதில் களைத்துவிடும் எனக்கு இந்தப் பயணம் ஒத்துவராது என்றுதான் முதலில் நினைத்தேன்.

பின்னர் முயன்று பார்ப்போம் என்று முடிவெடுத்துப் புறப்பட்டோம்.
சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவின் சியேட்டல் நகருக்கு விமானத்தில் 13 மணிநேரப் பயணம்.

அதன்பிறகு, அங்கிருந்து கப்பலில் 8 நாள் பயணம்.

கப்பலில் கால் வைத்ததும் எங்களை வரவேற்றார் பழுத்த அனுபவம்கொண்ட கப்பலின் தலைமை மாலுமி.

ஒரே பார்வையில் அவர் ஓர் உண்மையை எனக்கு உணர்த்தினார்.
எந்த வயதிலும் எந்த நிலையிலும் உற்சாகமாக இருக்கலாம் என்பதே அந்த உண்மை.

நரைத்த முடி. தளர்ந்த உடல். சக்கர நாற்காலியில் இருக்கை. ஆனால் உயிரோட்டமான பார்வை.

ஒரு மாபெரும் கப்பலை வழிநடத்தும் குழுவுக்கு அவர்தான் தலைவர்.
எப்படி அவரால் முடிகிறது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது இன்னொருவரும் என் உள்ளத்தைக் கவர்ந்தார்.

11 மாடிக் கப்பலின் மின்தூக்கியில் வயதான ஒரு பெண்மணியைச் சந்தித்தேன்.

பயணிகளில் ஒருவரான அவர் சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்தார்.
கை நரம்பில் ஊசி. அதோடு சேர்க்கப்பட்டிருந்தது ஒரு குழாய். அந்தக் குழாய் வழியாக மருந்தோ திரவ உணவோ அவர் உடலுக்குள்

சென்றுகொண்டிருந்தது. அவருடைய நாற்காலியை வயதான ஓர் ஆடவர் பிடித்துக்கொண்டிருந்தார். கணவர் என்று நினைக்கிறேன்.

எங்களைப் பார்த்ததும் இருவரும் ‘குட் மார்னிங்’ என்று அன்போடு கூறினார்கள்.

நாங்களும் பதிலுக்கு ‘குட் மார்னிங்’ என்றோம். ஆனால் என் உள்ளத்திலோ பல்வேறு எண்ணங்கள்.

இந்த நிலையில் யாராவது கொந்தளிக்கும் பசிபிக் பெருங்கடலில் கப்பல் பயணம் மேற்கொள்வார்களா?

உடல் நலமில்லாத ஒரு பெண்மணியை இவ்வளவு பாசத்தோடும் பரிவோடும் வயதான முதியவரால் எப்படிப் பார்த்துக்கொள்ள முடிகிறது?

கேள்வி கேட்ட என் உள்ளம் பதிலையும் கொடுத்தது.

உள்ளம் உறுதியாக இருந்தால், எந்தத் தடைகளையும் தாண்டலாம். மகிழ்ச்சியாக வாழலாம்.

வயதாகிவிட்டது. உடல் நலமில்லாமல் போய்விட்டது. என்னால் முடியாது என்று சொல்வதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் காரணங்கள்.

உடல் இருக்கும்வரை அது இயங்கும். அதன் இயக்கத்தை அர்த்தமற்ற காரணங்களைக் கூறி முடக்கக்கூடாது என்பதைக் கப்பல் பயணத்தின்போது நான் உணர்ந்துகொண்டேன்.

இன்னொரு சம்பவம். சுவிட்ஸர்லந்தில் இண்டர்லாக்கன் என்றொரு மலைச் சுற்றுலா நகரம் இருக்கிறது.

அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சாலையோரத்தில் சந்தை விரிக்கிறார்கள். கண்ணைப் பறிக்கும் அங்குள்ள பழங்களும் பச்சைக் காய்கறிகளும்.

சிலர் கம்புகளை ஊன்றிக்கொண்டு நடந்தார்கள்.

அவர்களிடத்தில் எந்தச் சலிப்பையும் நான் பார்க்கவில்லை. ஆவலுடன் பொருட்களை வாங்கினார்கள்.

அந்த நேரத்தில் எனக்குத் தோன்றிய கேள்வி இதுதான்.

ஏன் நம்முடைய நாட்டில் வயதானவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள்?

சலிப்பா? சோர்வா? வலியா? சோகமா?

காரணம் எதுவாக இருந்தாலும் சரி.

துடிப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை எதற்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று உணர்ந்துகொண்டேன்.

அதற்கு என் இந்தியப் பயணமும் மற்றொரு காரணம்.

கொல்கத்தா நகருக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை கிடைத்தது.
அடைமழைக்காலம்.

சாலைகளில் வெள்ளம் திரண்டு குளங்களாக மாறின.

கன்னங்கரேலென்று கறுப்பாகத் தண்ணீர்.

அழுக்குநீர் போல் எனக்குத் தோன்றியது.

சாலையெது, சாக்கடையெது என்று தெரியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால் அங்கிருந்த பிள்ளைகளோ அந்தத் தண்ணீரில் ஆடிக்களித்து மகிழ்ந்தனர்.

பேருந்தினுள் இருந்த நான், பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயந்தேன்.

எந்தக் கலக்கமும் இல்லாமல் நீச்சலடித்துக் கொண்டிருந்த அவர்கள், எந்த நிலையிலும் எங்கள் உள்ளம் தளராது என்று சொல்வதுபோல் இருந்தது.

மனம் கொண்டது மாளிகை.

நம் அனுமதியில்லாமல் நமது மகிழ்ச்சியை யாராலும் பறிக்கமுடியாது என்பதைக் கொல்கத்தா குழந்தைகள் எனக்கு உணர்த்தினார்கள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்