Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

கற்பதற்கு ஏது எல்லை?

கண், கை, காதுகளுக்கு அருகில் வரும் எதையும் கற்றுக்கொள்ளவேண்டும். 

வாசிப்புநேரம் -

“கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆகலாம்!” என்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

‘பார்ப்பதை எல்லாம் படித்துவிட்டால் அனைத்தும் தெரிந்துவிட்டது’ என்று அதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. நல்லவற்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும். அவ்வாறு பலவற்றையும் கற்பதால் பரந்துபட்ட அறிவைப் பெற முடியும். ஆங்கிலத்தில் “Jack of all trades” என்பார்கள்.

அதுபோல எதையும், எப்போதும், எப்படியும் தெரிந்துகொள்ளத் தயார்நிலையில் இருக்கவேண்டும்.


யாரிடமிருந்து கற்கலாம்? அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். சிறு குழந்தையாக இருக்கலாம்; பெரியவராக இருக்கலாம்; படித்தவராக இருக்கலாம்; படிக்காதவராக இருக்கலாம்.

எந்த வயதில் கற்பது? கற்றுக்கொள்வதற்கு வயது வரம்பே கிடையாது. இனி கற்றுக்கொண்டு என்ன பயன் என்று ஒருபோதும் எண்ணக்கூடாது.

எனக்குத் தெரிந்த ஒரு முதியவர், அமாவாசையை நினைவுபடுத்த கைபேசியில் அறிவிப்பு மணி வைத்திருந்தார். தெரிந்த இளையர் ஒருவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டதாக அவர் சொன்னார். எனது அண்டை வீட்டுச் சிறுவன் ஒருவன், பழைய பொருட்கள், செய்தித்தாள் வாங்க வரும் “காராங்குனி”யிடம், செய்தித்தாள் அடுக்கை எப்படி இறுக்கமாகக் கட்டுவது என்பதைக் கற்றுக்கொண்டதைப் பார்த்தேன். அவரும் ஆர்வமாகச் சொல்லிக்கொடுத்தார்.

ஆச்சர்யமாக இருந்தது!

இதில் உங்களுக்கு எத்தனை தெரியும் என்று சோதனை செய்துபாருங்கள்... உங்களுக்கே மதிப்பெண் கொடுத்துக்கொள்ளுங்கள்...

  •  ஆடையில் அறுந்துபோன ஒரு பொத்தானைத் தைத்துக்கொள்ளத் தெரியுமா?
  • புதிய மின்சார விளக்கைப் பொருத்தத் தெரியுமா?
  •  சைக்கிள் சங்கிலி மாட்டத் தெரியுமா?
  •  உங்கள் கணினியைச் சுத்தப்படுத்தத் தெரியுமா?
  •  தோசைக்கு மாவரைத்துச் சொந்தமாகச் செய்துகொள்ளத் தெரியுமா?
  •  உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தாருக்கோ இருக்கும் மருத்துவப் பிரச்சினைகள் குறித்த விவரங்கள் தெரியுமா?
  •  காருக்குச் சக்கரம் மாற்றத் தெரியுமா?
  •  உங்கள் வீட்டின் வரவு செலவுக் கணக்கை எழுதி அதைச் சரிபார்க்கத் தெரியுமா?
  •  அழகாக டை (Tie) கட்டத் தெரியுமா?

யாரிடமிருந்தும் எதையும் கற்றுக்கொள்ளலாம். அதற்குத் தேவை இரண்டே இரண்டு....

எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையை அகற்ற வேண்டும்; கேட்டுத் தெரிந்துகொள்வதற்கான தாகம் வேண்டும்.

இதை நான் ஏன் அவரிடம் கேட்கவேண்டும்?

இதைத் தெரிந்துகொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்?

பிள்ளைகள் இப்படிக் கேள்விகள் கேட்டால் விளக்கமளிக்கவேண்டும். இலவசமாக வீட்டுக்கு வரும் துண்டுப் பிரசுரங்களிலும், விளம்பரங்களிலும் கூடத் தெரிந்துகொள்ள ஏதேனும் இருக்கும்... அது என்றோ எதற்காகவோ உதவும்.

இன்றைய உலகில் கற்றுக்கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. இணையம் அனைத்தையும் விரல் நுனிகளுக்குக் கொண்டுவருகிறது. இருப்பினும், கற்றுக்கொள்வதற்கான தாகம் நம்மிடமிருந்தே பிறக்கவேண்டும்.

அதற்கான உந்துதல் சுரந்துகொண்டே இருக்கவேண்டும்.

“கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு”
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்