Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

இன்பம் தரும் இல்லம்

வீடு என்பது எதைக் குறிக்கிறது? நாம் வசிக்கும் இல்லமா, நாம் வாழும் ஊரா, நாடா, குடும்பத்தோடு இருக்கும் இடமே நமது வீடாக மாறிவிடுகிறதா? 

வாசிப்புநேரம் -


வீடு என்பது எதைக் குறிக்கிறது? நாம் வசிக்கும் இல்லமா, நாம் வாழும் ஊரா, நாடா, குடும்பத்தோடு இருக்கும் இடமே நமது வீடாக மாறிவிடுகிறதா? வீடு என்ற சொல்லைக் கேட்டால் நான்கு சுவர்களும் ஒரு கூரையும்தான் உடனடியாக நினைவுக்கு வரும். ஆனால், வீடு என்பது அதற்கும் அப்பாற்பட்டது.


எங்கு மனநிம்மதியுடன் முழுமையாய் நாமாக இருக்கிறோமோ, அதுவே நாம் வாழும் வீடு.



தேசிய தினத்தின்போது பாடப்படும் பாடல்களைச் சற்று உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள். வீடு அல்லது “Home” என்ற சொல் பல பாடல்களில் இடம்பெற்றிருக்கும். நாட்டை வீட்டுடன் ஒப்பிடுவதற்குக் காரணம் அந்தச் சொல்லிலிருந்து எழக்கூடிய உணர்ச்சி.


வீடு என்றால் அதில் உள்ளடங்கியிருக்கும் அர்த்தங்கள் பல.


வீடு என்பது ஒரு சின்னம்.


நாம் வேறூன்றி இருக்கும் இடம். அடிக்கடி பார்க்கும் முகங்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் இடம். ஒரு குடும்பத்தில் நாமும் ஓர் உறுப்பினர் எனும் எண்ணத்தைத் தோற்றுவிக்கும் இடம்.

அது போன்றே நாட்டை வீட்டுடன் ஒப்பிடுகையில் நம்மிடையே ஒரு பற்று உண்டாகிறது. நமக்கும் இங்கு ஓர் இடம் உள்ளது என்ற சிந்தனை உதிக்கிறது. மனம் திருப்தியடைகிறது.

சிங்கப்பூர் அரசாங்கம், அதன் மக்களுக்குச் சொந்த வீடுகளை வாங்க பற்பல சலுகைகளை வழங்கி வருகிறது. சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை பல வருமானப் பிரிவினருக்கும் வீட்டுரிமை வழங்குவதைக் கடமையாகக் கொண்டுள்ளது அது. வாழ்க்கையில் மற்ற நாடுகளைப் போல இங்கு பலர் வாடகை வீடுகளில் வசிப்பதில்லை. 99 ஆண்டுக்கு மட்டுமே வீடு நமது பேரில் இருந்தாலும் அது “எனது” என்று உரிமையாகக் கூறும் பெருமை கிடைக்கிறது. வாழ்வில் ஒரு மைல்கல்லை அடைந்துவிட்டோம் என்ற உணர்விலிருந்து வருகிறது ஒரு வகை முதிர்ச்சி.

மாளிகையில் இருப்பவர் அனைவரும் எப்போதும் இன்பத்தில் திளைத்தில்லை; சிறிய வீடுகளில் வாழ்பவர்கள் எல்லாரும் துன்பத்தில் துவண்டு போனவர்களும் இல்லை.


மணலும் செங்கல்லும் சேர்ந்தது மட்டுமல்ல வீடு.


அங்கிருக்கும் அன்பு உள்ளங்களே ஒரு வீட்டை இல்லமாக மாற்றுகின்றனர்.

வீட்டிற்குத் தாமதமாக வந்தால் அன்போடு நம்மைக் கடிந்துகொள்ளும் தந்தை. “சாப்பிட்டுவிட்டாயா?” என்று அக்கறையுடன் கேட்கும் தாயார். அந்த நாளில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளைப் பற்றி ஆவலுடன் விசாரிக்கும் உடன்பிறப்புகள். வேலைப் பளுவைக் குறைக்க உதவும் வாழ்க்கைத் துணை. இதுதான் ஒரு சாதாரண வீட்டில் நாம் பார்க்கும் உறவுகள்.

இவர்கள் அனைவரும் இருந்தால்தான் ஒரு வீடு முழுமையாகிறது என்பதல்ல. பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழ்பவர்களுக்கும் மணவிலக்குப் பெற்று புது வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்களுக்கும்கூட வீடு என்றால் ஆனந்தமே.

நமக்கு நாமே அமைத்துக் கொள்ளும் குட்டி உலகமே நாம் வாழும் வீடு. அது எங்கிருந்தாலும் எந்த அளவில் இருந்தாலும் அதில் நமக்கும் ஒரு பங்கு உண்டு என்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை.

வீடு என்பது ஒரு சொத்து என்பதைத் தாண்டி நமது அடையாளத்தைச் செதுக்கும் ஓர் அம்சம்.


அன்புடன் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்