Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

கண்ணாடிக் கூரை

தகுதி இருந்தும் எனக்கான உச்சத்தை இன்னும் எட்டமுடியவில்லை என்று புலம்புவோர் பலரை நாம் பார்த்திருக்கிறோம். கண்ணுக்குப் புலப்படாத மாய விலங்கு தங்களைச் சிறைப்படுத்துவதாக அவர்கள் கவலைகொள்வர்.

வாசிப்புநேரம் -
கண்ணாடிக் கூரை

படம்: Pixabay

தகுதி இருந்தும் எனக்கான உச்சத்தை இன்னும் எட்டமுடியவில்லை என்று புலம்புவோர் பலரை நாம் பார்த்திருக்கிறோம். கண்ணுக்குப் புலப்படாத மாய விலங்கு தங்களைச் சிறைப்படுத்துவதாக அவர்கள் கவலைகொள்வர்.

அத்தகைய அவர்களது எண்ணம் உண்மையா?

ஆங்கிலத்தில் Glass Ceiling என்று ஒரு சொற்றொடர் உண்டு. தகுதியுள்ள ஒருவரது வெற்றியைத் தடைசெய்யும் தடுப்புகள் என நம்பப்படுவதைக் குறிக்க, அதனைப் பயன்படுத்துவர். சிறுபான்மையினர் தங்களுக்கான சாபக்கேடு அது எனக் குறிப்பிடுவதுண்டு.

அப்படிப்பட்ட கண்ணாடிக் கூரைதான் வெற்றியை எட்டவிடாமல் உங்களைத் தடை செய்வதாய் நீங்கள் நினைக்கிறீர்களா? அதனால் தோன்றும் சுயபச்சாதாபத்தைச் சுமந்துகொண்டே நடமாடிக்கொண்டிருக்கிறீர்களா?

விரக்தி வழிகேட்டு வந்திருக்குமே இந்நேரம்?

படம்: Pixabay 

நம்மில் பெரும்பாலோர் வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் அப்படிப்பட்ட எண்ணச் சுழலைச் சந்திக்க நேர்ந்திருக்கும். அதில் சிக்கினால், சின்னாபின்னமாவது உறுதி. கடந்துவிட்டால் வெற்றி கைவசம்! சிக்கிக்கொள்கிறோமா, கவனமாகக் கடந்துசெல்கிறோமா என்பதுதான் மனிதர்களுக்கிடையே வித்தியாசப்படுவது.

உண்மையைச் சொன்னால் பலகாலம் நானும் அந்தச் சுழலில் சிக்கியிருந்ததுண்டு. அது வெற்றிக்கும் எனக்குமான இடைவெளியை இடைவேளையின்றி அதிகரித்துக்கொண்டே இருந்தது. இருந்தாலும், என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. அசைபோடுவதைப் போல என் செயல்களை அவ்வப்போது அலசி ஆராய்வேன். ஈவு இரக்கமின்றி என்னை நானே விமர்சனம் செய்துகொள்வேன். அதனால் கிட்டும் மிகப் பெரும் நன்மை என்னவென்றால், தாமதமானாலும் என் தவறுகளை நான் இனம் கண்டுகொள்வேன். என்னைப் பொறுத்தவரை அது மிகப் பெரிய வரம்!

அப்படி நான் கண்டுகொண்டது இதுதான்! நான் வெற்றி பெறாத செயல்களுக்கு மிக முக்கியக் காரணம் நானேதான்! ஆம்! வெற்றியும், தோல்வியும் பிறர்தர வாரா!

வாழ்க்கை நாம் எதிர்பார்க்கும் அனைத்தையும் வாழை இலையில் வைத்து நமக்கு விருந்தளிக்காது. தடைகளைக் கடந்துதான் இலக்கை எட்டுவது இங்கு சாத்தியம். பலபேரின் சரித்திரம் அதற்கு ஆதாரம்.

பள்ளிக்காலத்திலே எங்கள் ஆசிரியர் சொன்ன கதை ஒன்று!

படம்: Pixabay 

முன்னொரு காலத்தில் அதிசய ஞானி ஒருவர் இருந்தாராம். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவரிடம் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் அவ்வளவு எளிதில் அவரைக் காண முடியாது. அடர்ந்த காட்டுக்குள் மனித நடமாட்டம் அற்ற பகுதியில் அவர் வசித்ததாய் நம்பப்பட்டது.

மன்னன் ஒருவன் கடும் முயற்சிக்குப் பிறகு அவரைச் சந்தித்தானாம். மன்னனின் தேவையைக் கேட்டார் ஞானி. ஆனால் அவனோ, “எனக்குக் கிடைத்த இந்த தரிசனமும், வாய்ப்பும், என் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும்” என்று வேண்டினான்.

அவரவர் உழைப்பின் அடிப்படையிலேயே ஊதியம் கிடைக்கவேண்டும் என்று எடுத்துச் சொன்னார் ஞானி. மன்னனோ பிடிவாதம் பிடித்தான், “நான் பெற்றதை என் மக்களும் பெறவேண்டும்” என்று.

ஞானியும் அதற்கொரு நாள் குறித்து, அங்கிருந்த உயரமான மலையின் உச்சிக்கு அனைவரையும் அழைத்து வரச் சொன்னார். நாடு முழுவதும் தண்டோரா போடப்பட்டது. அதிசய ஞானியைக் காணக் குறிப்பிட்ட நாளில் நாடே திரண்டது மன்னனின் பின். எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் நிறைந்த முகங்கள்; முன்னேறத் துடிக்கும் கால்கள்! அனைவரையும் கனிவாக வழிநடத்திச் சென்றான் மன்னன்.

சிறிது தூரம் கடந்த பின்னர் வெள்ளிக் காசுகள் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடந்தன. மன்னன் அதைக் கடந்து முன்னேறினான். ஆனால் கால்வாசிப் பேர், “இதுவே போதும் மன்னா!” என்று அவற்றை அள்ளிக்கொள்ளப் பின்தங்கி விட்டனர்.

மேலும் சிறிது தூரம் கடந்தால் தங்கக் கட்டிகள்.... சிதறிக் கிடந்தன சீந்துவாரின்றி! இப்போது எஞ்சியோரில் அரைவாசிப் பேர், “எங்களுக்கு இது போதும்” என்றனர் பொன்மனச் செம்மல்களாய்!

மன்னன் தொடர்ந்து முன்னேற, சிறிய கூட்டம் பின்தொடர்ந்து மலை ஏறியது. அடுத்தடுத்து, வைரம், வைடூரியம், மரகதம், கோமேதகம் என அரிய விலையுயர்ந்த கற்கள்..... கூட்டத்தின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது.

இறுதியில் சிகரத்தை எட்டினான் மன்னன். மீண்டும் ஞானியின் தரிசனம்!!

“என் மக்களே! இதோ உங்கள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுதர வல்ல அறிவின் பெட்டகம்!! இனி உங்கள் வாழ்வில் தோல்வியே இல்லை!! வெற்றி மட்டுமே!!” என்று நெகிழ்ந்து பேசியவாறே திரும்பினான். ஆனால் ஒருவர்கூட அங்கே இல்லை.

திகைத்து நின்ற மன்னனிடம், “மகனே! நான் காத்திருந்தாலும், நீ வழிகாட்டினாலும், அற்ப ஆசைகள் எனும் தடைகளை அவரவர்தான் கடந்து வரவேண்டும்! அதுவரை வெற்றி அவர்களுக்கு எட்டாக்கனிதான்” என்று கூறினாராம் ஞானி.

கதையில் வருவதுபோல சலனம் மட்டுமே வெற்றிக்குத் தடை அல்ல. இன்பம், துன்பம், இடையூறு, ஏமாற்றம் எனப் பல வடிவங்களில் அது வரலாம்.

ஆகவே, கண்ணாடிக் கூரையால் கட்டுண்டு நிற்கப் போகிறீர்களா தடை கடந்து நடைபோடப் போகிறீர்களா என்பதை நன்கு சிந்தித்து முடிவெடுங்கள்.

ஒரே தோட்டத்துப் பட்டாம்பூச்சிகள்தாம் நாம். நமக்கான உயரத்தை வேறு யார் நிர்ணயிக்கமுடியும்? எதிர்மறை எண்ணங்களை மன வீட்டிலிருந்து எடுத்து வீசுங்கள். நேர்மறை எண்ணங்களை நெஞ்சம் முழுக்க நிரப்புங்கள்.

வாழ்வில் நாளும் வரலாம் போராட்டம்

எல்லா நாளுமா ஏமாற்றும்?

விழுவது ஒன்றும் தவறல்ல

எழுவது என்பது அரிதல்ல

நம்பிக்கை ஒன்றே தூக்கிவிடும்

நம் கவலை எல்லாம் போக்கிவிடும்

உங்களை நம்புங்கள்

உயரம் தொடுங்கள்

நம்பிக்கையுடன்,


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்