Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

வேலையா? குடும்பமா?

வேலை-வாழ்க்கை இரண்டுக்கும் சமநிலை காணமுடியுமா? 

வாசிப்புநேரம் -

(மங்கள தர்ஷினி)

அண்மைக் காலத்தில் என்னுள் ஒரு கேள்வி. வேலை-வாழ்க்கை இரண்டுக்கும் சமநிலை காணமுடியுமா? அதற்கான பதிலை நான் தொடர்ந்து தேடுகின்றேன்.

சில மாதங்களுக்கு முன் என் அம்மாவோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவரின் பள்ளித் தலைமையாசிரியர் கூறியதை நினைவுகூர்ந்தார். “ஒன்றைப் பெற ஏதேனும் ஒன்றை விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும். வேலையிட முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், குடும்ப வாழ்க்கையைச் சற்று விட்டுக்கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றும் குடும்பத்துக்கு முதலிடம் கொடுத்தால், வேலையிடத்தில் சற்றுப் பின்தங்க நேரிடலாம் என்றும் அவர் கூறியதாகச் சொன்னார் அம்மா.

அதைக் கேட்டதிலிருந்து என் மனத்தில் குழப்பம். வேலையிட வெற்றியென்பதை வைத்து ஒருவரின் நிலையை மதிப்பிடுகின்றனர் பலர். வேலையிடத்தில் ஆக உயர்ந்த நிலையை அடைவது வாழ்க்கையின் இலக்காக அமைகிறது பெரும்பாலோருக்கு. அதற்காக 20, 30 ஏன் 40 ஆண்டுகூட அயராது உழைக்கிறோம். இதில் தவறு இல்லை.

ஆனால் இலக்குகளைத் தீவிரமாகத் துரத்தும்போது பலரும் வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மையை மறந்துவிடுகிறோமோ என எண்ணத் தூண்டுகிறது. சில நேரங்களில் கடும் வேலைக்கு இடையில் நமக்கென இருப்பவர்களை மறந்துவிடுகிறோம்.

நம்முடன்தானே இருக்கிறார்கள், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துவிடுகிறோம். கண்களை மூடித் திறப்பதற்குள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துவிடுகின்றன.

பிள்ளைகள் படிக்க வெளியூருக்குச் சென்றுவிடுகின்றனர்; சிலர் கல்யாணமாகித் தொலைதூரம் செல்கின்றனர், முதியோர் நம்மைவிட்டுப் பிரிந்து செல்லும் நிலைமையும் ஏற்படலாம்.
இவை அனைத்தும் நமக்காகக் காத்திருக்காது. நாம் வேலைக்குத் தலையாய முக்கியத்துவம் அளித்து, அதில் மூழ்கியிருக்கும் அதே நேரத்தில்தான் நம் பெற்றோருக்கு வயதாகிறது, நம் பிள்ளைகளும் வளர்கின்றனர், நாமும் இளமையை இழக்கிறோம்.
சரி இதற்கு பதில்தான் என்ன?

வேலை என்பது அத்தியாவசியம். வேலையில்லாமல் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்திசெய்ய முடியாது. உண்மைதான். ஆனால் என்ன செய்யலாம்?
வேலையிடத்தில் இருக்கும்போது, கவனத்தைச் சிதறவிடாமல், வேலையைச் சிறப்பாகச் செய்துமுடிக்கலாம். அதே போல் வாழ்க்கைத் துணையோடு, பெற்றோரோடு பிள்ளைகளோடு இருக்கும்போது, முழுமையாகக் கவனத்தை அவர்களுக்குக் கொடுங்கள். அந்தச் சில நிமிடங்களுக்குத் தொழில்நுட்பத்தை, வேலையை, மின்னஞ்சலை, வாட்ஸ்ஏப்பை மறந்துவிடுங்கள். அவர்களிடம் உண்மையான, வாழ்க்கையின் ஆழமான அம்சங்கள் பற்றிப் பேசுங்கள்.

வீட்டில் இருக்கும்போது நம்மில் பலரும் தொலைக்காட்சிக்குமுன் குடும்பத்தாருடன் சேர்ந்து அமர்ந்துகொள்வோம். பின், பக்கத்தில் உள்ளோரை மறந்து, தொலைக்காட்சியுடன்தான் நேரம் செலவழிப்போம். இந்நிலையில் எப்படி நமக்கு நெருக்கமானவர்களின் மனத்தை, அவர்களின் ஆசைகளை, வருத்தங்களைப் புரிந்துகொள்ள முடியும்?

உங்கள் பெற்றோர், பிள்ளைகள் அல்லது வாழ்க்கைத் துணையைப் பற்றி இந்த விவரங்கள் தெரியுமா என்று யோசித்துப் பாருங்கள்:

• வாழ்வில் அவர்களுக்கு இதுவரை மிகுந்த மகிழ்ச்சி கொடுத்துள்ள அனுபவம் எது?
• மிக மகிழ்ச்சியான நாள் என்று அவர்கள் கருதும் ஒரு நாள் எப்படி அமையும், அந்நாளில் என்னென்ன நடக்கும்?
• அவர்களின் வாழ்வில் மிகப் பெரிய சாதனையென்று கருதுவது எதனை?
• நீண்ட நாளாகச் செய்யவேண்டும் என்று நினைத்து, இன்னும் செய்யாதது ஏதேனும் உள்ளதா?
ஒவ்வொரு நாளும் சாதனை புரிய முனையும் அதே நேரத்தில், வீட்டிலும் நம் குடும்பத்துடன் அர்த்தமுள்ள வகையில் ஒன்றைச் செய்ய முனைவோம். அவர்களுடன் புதிய அனுபவங்களை, நினைவுகளை உருவாக்குவதற்கும் நேரம் ஒதுக்குவோம்.

Work-Life Balance எனும் மாய கலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால் வேலையிடத்திலும் வீட்டிலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, மனநிறைவான வாழ்க்கை வாழ்வது சாத்தியம்தான்.

அன்புடன்,
மங்கள தர்ஷினி
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்