Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

தேவையா? இது தேவையா?

“தேவையா? இது தேவையா?”

வாசிப்புநேரம் -

ஒரு சட்டையின் விலை 3 வெள்ளிக்கும் கிடைக்கிறது. 30 வெள்ளிக்கும் கிடைக்கிறது. 300 வெள்ளிக்கும் கிடைக்கிறது. எவ்வளவு விலைக்கு வாங்கலாம்?

80 வெள்ளிக்கு வாங்க முடிவெடுக்கிறோம். முதலில் என்ன செய்கிறோம்?

பிடித்த நிறம், பிடித்த துணி, பிடித்த வடிவம் இதைப் பார்க்கிறோம். எப்படியும் நாம் வாங்க நினைக்கும் பொருளில் குறைந்தது 10 வகை கண்ணில் படுகிறது. அதில் பெரும்பாலானவை நாம் திட்டமிட்டதைவிட அதிக விலையில் இருக்கிறது. சில நேரங்களில் அதுதான் நமக்கும் பிடிக்கிறது!

விலை இடிக்கிறது; பொருட்படுத்துவதில்லை. 20 வெள்ளி அதிகம் கொடுப்போம். முடிந்தது!

இதே நிலை காலணி வாங்கவும், பை வாங்கவும், சாப்பிடவும், கேளிக்கைகளுக்குச் செலவிடவும்... பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இணையத்தில் பொருட்கள் வாங்கினால், கேட்கவே வேண்டாம். பல்லாயிரம் வகை நம் கண்ணில்பட்டு, கண்ணை அலைபாயவிட்டு, எதை வாங்க இணையத்தளத்துக்குள் நுழைந்தோம் என்பதையே மறந்து, எதை எதையோ வாங்கி....

இதற்கு எல்லையே இல்லை. ஆசைகளுக்கு ஏது எல்லை? ஒரு கட்டத்தில், இந்த ரகப் (Brand) பொருட்களைத் தவிர வேறு எதுவும் எனக்குப் பொருந்தாது என்று மனம் கூறிவிடுகிறது.

மாத இறுதியில் மனம் வலிக்கிறது. ஒவ்வொன்றிலும் தொகை கூடி இறுதியாகச் சேமிப்பு குறைகிறது அல்லது சேமிக்கவே முடிவதில்லை...
அதற்காகக் குறைந்த விலைச் சட்டையை வாங்கி அலுவலகத்துக்கு அணிந்து செல்லமுடியுமா? விலை மலிவு என்பதற்காக எதையோ வாங்கமுடியுமா? நிச்சயம் முடியாதுதான்...

ஆனால் என்ன வாங்குகிறோம்? எதற்கு வாங்குகிறோம்? எந்தத் தேவைக்கு வாங்குகிறோம்? எத்தனையாவது முறையாக வாங்குகிறோம்? இதை நிச்சயம் யோசிக்கலாம்.

சிலர் அன்றாடம் மதிய உணவுக்கு 20 வெள்ளிக்கும் மேல் செலவு செய்கிறார்கள். ஓரிரு நாளென்றால் பரவாயில்லை. அது இயல்புதான். ஆனால் தினமும் என்றால் அது தேவைதானா என்று யோசிக்கவேண்டும்.

‘பிள்ளைகளைக் குறிப்பிட்ட வகுப்புக்குத்தான் அனுப்புவேன், நான் நினைத்துவைத்திருந்த பொருளைத்தான் வாங்குவேன், இந்த உணவகத்துக்குத்தான் போவேன்’ என்று சில நேரங்களில் பிடிவாதமாக இருக்கிறோம்.
அவ்வாறு செய்யும்போது ஆசைகளுக்கு அடிபணிந்து வியாபார உத்திகளுக்கு வீழ்கிறோம் என்பதை நம்மில் எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறோம்?

நாம் வளர்ந்த காலக்கட்டத்தில் தெரிவுகள் குறைவாக இருந்தன. பெட்டி என்று எடுத்தால் 3 வகை இருக்கும். பேனா என்றால் 4 வகை. இப்போது... எக்கச்சக்க வகை, எல்லாம் கைக்கெட்டிய தூரத்தில், ‘வாழ்க்கையை அனுபவித்து வாழ்வோமே’ என்ற மனநிலை - இவை மூன்றும் நம்மை அலைக்கழிக்கின்றன.

தவறில்லை. நினைத்த விலைக்கு வாங்கலாம். அனுபவிக்கலாம். இதே நிலை நீடித்துவிட்டால் நல்லது.
ஆனால் ஒருவேளை....

இந்த ‘ஒருவேளை’ பேச்சைப் பலர் பேசவோ, நினைக்கவோ விரும்புவதில்லை. ‘இதையே சிந்தித்தால், எப்படி வாழ்வது?’ ‘எதிர்மறையாகப் பேசுவது நல்லதல்ல’ – இவை அவர்களின் வாதம்.

ஆனால் அத்தகைய நிலைக்கு ஆளானவர்களை அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். கையில் காசு இருக்கும்போது அள்ளிவீசிவிட்டு, இல்லாதபோது தடுமாறும் எவ்வளவோ பேரைப் பார்க்கிறோம்.

எல்லாவற்றையும் வாழ்க்கையில் பட்டுத் தெரிந்துகொள்ள முடியாது.

எந்த ஒரு தேவையாக இருந்தாலும், அதை நீட்டித்துக்கொள்வதும், ஆடம்பரத்தில் சுகம் காண்பதும் எளிது. ஆனால் அதைச் சுருக்கிக்கொள்வதுதான் சிரமம்.

சிக்கனமாக இருப்பதற்கும் கருமித்தனமாக இருப்பதற்கும் இடையே ஒரு மெல்லிய இடைவெளிதான்.
தேவையை அறிந்து செலவு செய்தால் சிக்கனம், தேவைக்குக்கூட செலவு செய்யாவிட்டால் கருமித்தனம்.

சிக்கனத்தைக் கருமித்தனம் என்று பிறர் தூற்றினால், கவலைப்படுவதில் அர்த்தமில்லை.

தேவைகளைக் குறைத்து, கிடைப்பதில் நிறைவு காண்போம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்