பேசுவோமா

Images
  • appreciate

பாராட்டை எதிர்பார்ப்பதில் தவறில்லை!

பாராட்டு. இதைப் பெறுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி, மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் இருக்கவேண்டும். நமக்குப் பாராட்டுக் கிடைக்கும்போது மனம் நெகிழ்வோம். சிலர் கூச்சமடைவோம். நம்மில் பலர் மற்றவர்களைப் பாராட்டவும் செய்வோம்

ஆனால், உண்மையில் பாராட்டின் சக்தியை நாம் புரிந்துவைத்துள்ளோமா?

ஓர் ஆரோக்கியமான உறவில், மூன்று முக்கிய அம்சங்களில் ஒன்று இருக்கும். இருக்கவேண்டும். ஏற்றுக்கொள்ளுதல், பாராட்டுதல், அங்கீகரித்தல். பொதுவாக இவற்றை நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம். அதில் தவறில்லை. சொல்லப்போனால், பாராட்டு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பே.

வீடோ வேலையிடமோ ஒருவரைப் பாராட்டினால் ஏற்படக்கூடிய மாற்றங்களும் பயன்களும் அலாதி. அப்படிப்பட்ட 3 பயன்களை ஆராய்ச்சிகள் முன்வைக்கின்றன.

1. ஒருவரைப் பாராட்டும்போது, அவர்களிடம் ஊக்கமளிக்கும் வகையில் பேசும்போது அல்லது அவர்களைப் பார்த்துச் சிரிக்கும்போது, அந்த நபருக்கு, அவர் மிகவும் முக்கியமானவர், மதிப்புக்குரியவர் என்ற உணர்வைக் கொடுக்கிறோம். அது அவர்களை இன்னும் சிறப்பாகப் பணியாற்ற, மேன்மேலும் கனிவோடு நடந்துகொள்ள ஊக்குவிக்கும்.

2. மற்றவர்களைப் பாராட்டும்போது அல்லது அவர்களிடம் நன்றி தெரிவிக்கும்போது, அவர்களுக்கு மட்டும் அது மகிழ்ச்சியாக அமையாது. உங்களுக்கும் அது மனநிறைவைத் தரும்.

3. பாராட்டுவது, நன்றி தெரிவிப்பது, அக்கறை காட்டுவது இவை, மற்றவர்கள் நமது நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ள உதவும் நற்பண்புகள். நல்ல நட்புகளை, உறவுகளை உருவாக்கிக்கொள்ள இவை முக்கியம்.

'நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள். தொடர்ந்து சிறப்பாகச் செய்யுங்கள்.'
'நீ இன்று சுவையாகச் சமைத்தாய். மிக்க நன்றி!'
‘என்ன உடல்நலம் சரியில்லையா? ஏதாவது உதவி வேண்டுமா?’

இந்த வாக்கியங்களுக்கு, வார்த்தைகளுக்கு உள்ள வலிமை....
நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

மற்றவர்களைப் பாராட்டுவோம்.... ஊக்குவிப்போம்.
மாற்றத்தைக் கொண்டுவருவோம்.!
அதில் நமக்கும் மகிழ்ச்சி. மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி.

அன்புடன்
இலக்கியா செல்வராஜி


 

Top