பேசுவோமா

Images
  • pESUVOMA
    (படம்: Pixabay)

உறவுக்கு மரியாதை...


ஒவ்வோர் ஆண்டும் பண்டிகைக் காலங்களில் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான துணிமணிகளையும் பலகாரங்களையும் வழங்குவது எனக்கு வழக்கத்தில் இருக்கும் ஒரு பழக்கம்.


இந்த ஆண்டு சற்று வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று தோன்றியது. நாமாகவே அவர்களுக்குத் தேவையானதை வழங்குவதைவிட அவர்கள் விரும்புவதைக் கொடுக்கவேண்டும் என்ற ஒரு யோசனை.


சிறிய தாள் ஒன்றில் அவரவர் விருப்பத்தை எழுதச் சொல்லியிருந்தேன். ஒவ்வொன்றையும் ஆசை ஆசையாகத் திறந்து வாசித்தேன்.


அங்குள்ள பல முதியவர்கள் குறிப்பிட்டிருந்த விஷயம் என் மனத்தை நெகிழ வைத்தது. அவர்கள் விரும்பியதெல்லாம் தங்கள் பிள்ளைகள் அவர்களை அடிக்கடி வந்து பார்க்கவேண்டும் என்பதுதான்.


ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தங்களின் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கலாம்.


அது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது. ஆனால் பெற்று வளர்த்த தாய் தந்தையரைச் சென்று பார்ப்பதற்குக்கூட நேரம் இல்லை என்று சொல்வது என்னைப் பொறுத்தவரையில் கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.


நாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது நமக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தவர்கள் பெற்றோர்.


பிள்ளைகளுக்கு எந்த ஒரு குறையும் வைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தங்களின் விருப்புவெறுப்புகளை விட்டுக்கொடுத்தவர்கள். கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை அவர்கள்.


இணையில்லா அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கிய அவர்களை இப்படித் தனிமையில் தவிக்கவிடுவது எந்த விதத்தில் நியாயம்? எவ்வளவுதான் பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தாலும் பிள்ளைகள் என்ற முறையில் நாம் பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைகள் நிறையவே உள்ளன.


அன்று, அறியாப் பருவத்தில் நாம் செய்த தவறுகளைத் திருத்தி நல்வழியில் வாழ வழி காட்டியவர்கள் பெற்றோர். வெளியில் சென்ற பிள்ளைகள் வீடு திரும்பும் வரை, உண்ணாமலும் உறங்காமலும் காத்திருந்தவர்கள்.


இன்று, முதுமையில் வலுவிழந்த காலத்திலும் பிள்ளைகளின் நலனை நினைத்தே வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களைப் புறக்கணிக்கலாமா?


பெற்றோரின் அருமை அவர்களை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு நன்றாகவே புரியும். அவர்களின் அன்புக்காக நாம் ஏங்கித்தவிக்கும் ஒரு காலம் நிச்சயம் வரும். அந்த இடைவெளியை யாராலும் நிரப்ப முடியாது, எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது.


அப்போது, அவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த நினைவுகள் நம் கண் முன் வந்தால் மட்டுமே ஓரளவுக்கு நம் கடமைகளைச் சரியாகச் செய்துள்ளோம் என்ற மனநிறைவை அடைய முடியும்.


எந்த ஓர் உறவுக்கும் நாம் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய மரியாதை அவர்களுக்கென்று நாம் ஒதுக்கக்கூடிய நேரம்தான். அனைவரிடமும் அன்பாக இருப்போம், பணிவன்போடு நடந்துகொள்வோம்.


பொறுப்புகளை நிறைவேற்றுவோம். வாய்ப்பு இருக்கும்போதே தவறுகளைத் திருத்திக்கொள்வோம்


இந்தப் பண்டிகைக் காலத்தில் உற்ற நண்பர்களோடு உறவுகளையும் கொண்டாடுவோம்!


அன்புடன்
காமாட்சி ஹபிமன்னன்
 

Top