பேசுவோமா

Images
  • words

சொல்லும் கலை

சொல் என்றாலே பொருள் தரக்கூடிய எழுத்து அல்லது எழுத்துகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பொருள் தருவது மட்டுமேவா சொற்களின் சிறப்பு? அவை பயனும் தர வேண்டாமா?

நாம் எதைச் சொன்னாலும் அது பயனுடையதாய் மட்டுமே இருக்க வேண்டும்; அப்படி அல்லாதவற்றைச் சொல்லவே கூடாது என்பது வள்ளுவர் வாக்கு.

“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்” என்ற குறள் அதைத்தான் சொல்கிறது.

பயனுடையதே சொன்னாலும் கேட்பவர் அதை எடுத்துக்கொள்ளவில்லையே என்ற கவலை… அங்கலாய்ப்பு… நம்மில் பலருக்கு உண்டு. ஏதாவது ஒரு கட்டத்தில் பிள்ளைகள் குறித்து இந்தப் புகாரைச் சொல்லாத பெற்றோர் அரிதாகவே இருப்பர்.

“நான் ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாறவேண்டும்” என்றா பேராசைப்படுகிறோம்? அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்க்கும் பிள்ளையின் நலனுக்குத் தேவையானதைச் சொன்னால் காது கொடுத்தே கேட்பதில்லையே என்ற ஆதங்கம் பெற்றோர் பலருக்கு உண்டு.

ஏன் அந்த நிலை?

குறை, பிள்ளைகள் மீது மட்டுமில்லை. கேட்கும் விதத்தில் நமக்குச் சொல்லத் தெரியவில்லை என்பதும் உண்மை!

எப்போதும் சொல்பவர்கள் நாமாகவும், கேட்பவர்கள் அவர்களாகவுமே இருக்கவேண்டியதில்லை. இதை உணர்ந்துவிட்டாலே மிகப் பெரிய மாற்றங்கள் சாத்தியம்.

வீட்டுக்குள், உறவுகளுக்குள் சொல்வதும், கேட்பதும் வேறு, ஊர் கேட்கச் சொல்வது வேறு.

நாம் சொல்பவை, சில தருணங்களில், எதிரிலிருப்பவரைக் காயப்படுத்தும் வல்லமை கொண்டவை; நம் நோக்கம் அதுவாக இல்லாதபோதும்கூட!

அதனால்தான் பெரியவர்கள் சொல்வார்கள், “கொட்டிய நெல்லை அள்ளிவிடலாம், ஆனால் சொல்லை அள்ள முடியாது” என்று.
சொல்லாத சொல்லிற்கு விலை ஏதும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ…. அதேயளவு நெருப்பில்லாமல் சுடும் தன்மை நாவிற்கு உண்டு என்பதும் உண்மை.

நயந்து பேசியே பிள்ளைகளை வழிக்குக் கொண்டுவரும் பெற்றோர், அரவணைத்து வழிகாட்டும் ஆசிரியப் பெருமக்கள், தட்டிக் கொடுத்தே வேலை வாங்கும் மேலாளர்கள், கனிவாக எடுத்துக்கூறி காரியம் சாதிப்போர், அன்பான வார்த்தைகள் மூலமே தொண்டர்களின் மனச் சிம்மாசனத்தைக் கைப்பற்றும் தலைவர்கள்.

இவர்கள் எல்லாருக்கும் பொதுவானது என்ன?

சொல்லும் விதத்தை அவர்கள் அறிந்துவைத்திருப்பதுதான்!
பதமாகச் சொல்லத் தெரிந்தால் உறவு இழை ஏன் பாழ்படப் போகிறது? சொல் என்பதைக் குறிக்கப் “பதம்” என்றும் சொல்வதன் உள்ளர்த்தம்கூட சொல்வதைப் பதமாகச் சொல்லவேண்டும் என்பதுதானோ என்று நான் நினைப்பதுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன், பிரேஸிலைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர், திடீரென்று ஒரு நாள் பல்லாயிரம் டாலர் பெறுமான தனது சொகுசுக் காரைப் புதைக்கப் போவதாக அறிவித்தார். எல்லாரும் அவரைப் பைத்தியம் என்று திட்டாத குறைதான். அவர் பிடிவாதமாக, குறித்த நாளில் செயலில் இறங்கத் தயாரானார். செய்தியாளர்கள் அவரிடம், “இவ்வளவு விலையுயர்ந்த வாகனத்தை இப்படி யாருக்கும் பயனின்றி ஏன் மண்ணில் புதைக்கிறீர்கள்?

தேவைப்படுவோருக்குக் கொடுக்கலாமே..?” என்று கேட்டனர். “இம்மாதிரியான சொத்தைவிட மனித உடல் எவ்வளவு விலைமதிப்பில்லாதது? மாண்டபின்… தேவையானோருக்கு அந்த உறுப்புகளைக் கொடுக்காமல், மண்ணில் புதைக்கிறீர்களே?” என்று செல்வந்தர் திருப்பிக் கேட்டார்.

ஊரார் சிந்திக்கத் தொடங்கியவுடன் உறுப்பு தானத்தின் பயன்களை விளக்கிப் பலரையும் தூண்டிவிட்டார். எப்பேர்ப்பட்ட உத்தி பாருங்கள்!

தட்டித் தட்டித் தங்கத்தை நகையாக்குவதைப் போல, நாம் சொல்வதைக் கேட்கும் நிலைக்கு மற்றவரை முதலில் பக்குவப்படுத்தவேண்டும்.

கனிவான சொற்களுக்குத்தான் மனத்தைக் கனியவைக்கும் வல்லமை உண்டு.

அப்படிச் சொல்லும் கலை, சொல்லிக் கொடுத்து வருவதல்ல. நாம் உணர்ந்து நம்மை மாற்றிக்கொண்டால் தானாகவே கைகூடுவது.
சொல்லும் விதத்தில் சொன்னால், ஒரு சொல் மட்டுமல்ல ஒவ்வொரு சொல்லுமே வெல்லும்!

வெல்வோம் என்ற நம்பிக்கையுடன்

கலைச்செல்வி வைத்தியநாதன்.


 

Top