பேசுவோமா

Images
  • pesuvama-1
    படம்: Pixabay

தவறக்கூடாத கடமைகள்

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நமக்கென பல்வேறு கடமைகள் இருக்கும். கடமை என்றால் என்ன? அதை நிர்ணயிப்பவர் யார்? அதனால் என்ன பலன்? இந்தக் கேள்விகள் மனத்தில் எழலாம்.

கடமைகள் என்று வரும்போது அவை நாம் வகுத்துக்கொள்வது மட்டுமே அல்ல. சமுதாயத்தின் பார்வையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.


எடுத்துக்காட்டுக்கு, பள்ளிப் பருவத்தில் ஒரு மாணவர் நன்கு படிக்கவேண்டும் என்பது அவரின் கடமை. அத்துடன் அவர் நற்பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், சேட்டைகள் செய்யாமல் இருக்கவேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். அந்தக் கடமைகளைச் செய்யத் தவறும்போது மற்றவர்கள் அவர் மீது கொண்டுள்ள பார்வை மாறுகிறது.

மகள்/மகன், மனைவி/கணவன், தோழி/தோழன், ஊழியர் என்று தினமும் பல பொறுப்புகளைச் சுமக்கிறோம். அவை அனைத்தையும் தராசைப் போல கவனமாகச் சமன்படுத்த வேண்டும். வாழ்க்கை அதிவேகத்தில் செல்வதால் சில சமயங்களில் நம்மிடையே எதிர்பார்க்கப்படும் கடமைகளை நாம் உன்னிப்பாக கவனிப்பதில்லை. கடமை தவறும்போதுதான் “அடடா மறந்துவிட்டோமே” என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது.

அவ்வாறு வருந்திய சம்பவம் அண்மையில் எனக்கும் ஏற்பட்டது. திருமணத்துக்குப் பிறகு சொந்த வீட்டுக்குக் குடிபுகுந்தேன், கணவர், குடும்பம், வீட்டுவேலை எனக் கூடுதல் பொறுப்புகள் சேர்ந்தன. பலர் கைகொடுத்தாலும் சில நேரங்களில் நம்மை அறியாமலே சில பொறுப்புகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

 

வேலையிடத்தில் கொடுக்கப்படும் வேலைகளை நன்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம். வீட்டைச் சரிவர நிர்வகிக்கவேண்டும் என்ற நினைப்பு மறுபுறம். இவற்றுக்கிடையே என்னை அறியாமலே ஓரிரு வாரங்கள் பிறந்தவீட்டிற்குச் செல்ல இயலவில்லை.

பெற்றோர், சகோதரிகளுடன் WhatsApp வாயிலாகத்தான் தினமும் பேச்சு. அப்படியிருந்த நேரத்தில், ஒரு நாள் என் தாயார் வீட்டுக்கு அழைத்திருந்தார். நானும் வேலை முடிந்து கணவருடன் தாயாரின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு சென்றதும் எப்போதும் போல வீட்டிற்குள் நுழைந்து கலகல என எல்லோரிடமும் பேசத் தொடங்கினேன். வீட்டில் உள்ள மற்றவர்களை விட ஒருவரின் முகம் மட்டும் என்னைப் பார்த்ததும் அதிகம் மலர்ந்தது. என் பாட்டி. அவர் என்னைப் பார்த்து

எப்படி இருக்கிறாய் அம்மா?

என்று கேட்ட தருணத்தில், என்னுள் அந்தக் குற்ற உணர்வு தோன்றியது.

 என்னுடன் அன்றாடம் அன்பாகப் பேசும் பாட்டியிடம் நான் ஒரு நாள்கூட நலம் விசாரிக்கவில்லை. அன்று நானும் என் கணவரும் வீட்டிற்கு வருகிறோம் என்று அறிந்து எங்களுக்குத் தடபுடலான விருந்தை அவர் தயார் செய்திருந்தார். அவரின் குட்டி உலகில் நான் வகிக்கும் பங்கை அன்று அறிந்துகொண்டேன். அவர் எவ்வாறு என்னிடம் பேச ஏங்கியிருந்தார் என்பதை உணர்தேன், கண் கலங்கினேன்.

சில கடமைகள் சில நேரங்களில் மிக முக்கியமாக இருக்கலாம். ஆனால் ஒரே கடமையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்ற மனப்பான்மையுடன் கடிவாளம் போட்ட வகையில் செயல்படக்கூடாது. அவ்வப்போது மற்ற கடமைகளுக்கும் நாம் முக்கியத்துவம் தர வேண்டும். அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்வது இயலாத காரியம். ஆனால் எந்தக் கடமைகள் மற்றவர்களுக்குப் பலனளிக்கின்றன என்பதை உணர்ந்து செயல்படுவது முக்கியம்.

காலம் கடந்து வருந்தாமல், இப்போதே அவற்றைச் செயல்படுத்தலாமே...

அன்புடன்,

காயத்திரி அய்யாதுரை


Top