பேசுவோமா

Images
  • family

ஏதோ நினைவுகள் 3 – தொடரும் பாரம்பரியம்

பண்டிகைக் காலம் பல நினைவுகளைத் தூண்டும்.
தீபாவளி என்றாலே என் அம்மாவும் மூத்த அக்காவும் என் நினைவுக்கு வருவார்கள்.


இப்போது பெண்கள் வேலைக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது.
ஆனால், 70களில் அது சற்று அரிதென்றே கூறலாம்.


அதிலும் 8 பிள்ளைகள் என்றால் பெரும்பாலான பெண்கள் இல்லத்தரசிகளாகவே இருந்தனர்.


நான் பிறந்த பிறகே என் தாயார் வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.


பிள்ளைகளின் படிப்புக்கான செலவு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, முக்கியமாகச் சொந்த வீடு வாங்கவேண்டும் எனும் கனவு.

இத்தகைய காரணங்களால், என் அம்மா அந்த முடிவை எடுத்தார்.என் மூத்த அக்காவுக்கும் எனக்கும் 20 வயது இடைவெளி. என் அம்மா வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் என்னை வளர்க்கும் பொறுப்பில் சரி பாதி அக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.


அந்த வகையில் நான் பாக்கியசாலி.


இருவரிடமிருந்தும் நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் எண்ணிலடங்கா.


வேலைக்குச் சென்றுகொண்டே வீட்டையும் பார்த்துக்கொள்வது எவ்வளவு சிரமம் என்பதைக் கண்கூடாக நான் பார்க்க முடிந்தது.
குடும்பத்தின் நலனுக்காக இளம் வயதிலேயே பல பொறுப்புகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்வது எப்படி என்றும் தெரிந்துகொண்டேன்.


படிப்பு, வேலை, குடும்பம் எனப் பல நிலைகளை நான் கடந்துவந்ததற்கு இந்தப் படிப்பினைகள் உறுதுணையாக இருந்தன.


நான் முன்பு நினைப்பது உண்டு... எப்படி அம்மாவுக்கும் அக்காவுக்கும் இவ்வளவு உற்சாகம். அவர்கள் சோர்ந்துபோனதையோ, புலம்பியதையோ நான் பார்த்ததே இல்லை.
அதிலும் பண்டிகைக் காலம் நெருங்கும்போது சொல்லவே வேண்டாம்.


வீடு களைகட்டிவிடும்.


அந்தக் காலக்கட்டத்தில் எங்கள் வீட்டிற்கு ஜவுளிக் கடைக்காரர் ஒருவர் வருவார்.


அவர் தமது தோளில் ஒரு பெரிய பெட்டியைத் தூக்கிக்கொண்டு வருவார். அதற்குள் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் எத்தனை புடவைகள், துணிமணிகள்.


உடைகள் மீது நான் கொண்டிருக்கும் மோகம் அப்போதுதான் தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.


வாங்கிய துணிகளுக்கு மொத்தமாகப் பணம் செலுத்தவேண்டிய அவசியமும் இல்லை. தவணை முறையில்தான் பணம் கொடுப்போம்.


துணி வாங்கியதும் தையல் வேலை தொடங்கும். ஆரம்பத்தில் என் அத்தை எங்கள் துணிகளைத் தைத்துத் தருவார்.


அதை உன்னிப்பாக கவனித்த என் அக்கா, எஞ்சிய துணிகளில் சொந்தமாகத் தையல் பயின்றார். நான் திருமணம் புரியும் வரை அவரே என்னுடைய துணிகளைத் தைத்துத் தந்தார்.


புடவை ரவிக்கை, பெண்களுக்கான உடைகள், ஆண்களுக்கான மேல் சட்டை, சன்னல் திரை, நீள் இருக்கை (sofa) உரை அனைத்தும் அவருக்கு அத்துப்படி.


பலகாரம் இல்லாத தீபாவளியா?அரிசி, ரவா போன்றவற்றை வறுத்து, மாவு அரைத்துத்தரும் கடைக்கு அம்மாவும் அக்காவும் செல்வார்கள்.


சில நேரங்களில் அண்டை வீட்டுக்காரர்களுடன் சேர்ந்து செல்வதும் உண்டு.


செய்த பலகாரங்களைப் பகிர்ந்துகொள்வதும் வழக்கம்.


பைனாப்பிள் (அன்னாசி) டார்ட், நீராவியில் வேக வைத்த பழ கேக், பூலோட், அரிசியால் செய்யப்பட்ட வாஜேக் எனும் மலாய்ப் பலகாரம் போன்ற இனிப்பு வகைகளுடன் நெய் உருண்டை, அதிரசம், முறுக்குப் போன்ற பாரம்பரியப் பலகாரங்களும் உண்டு.


கடைகளில் நாம் பார்க்கக்கூடிய சன்னல் வைத்த பெரிய தகர டப்பாக்களில் பலகாரங்களை அம்மா அடுக்கி வைப்பார்.


தீபாவளிக்கு முன்னதாகவே அவை முடிந்துவிடக்கூடாது என்பதால் சிலவற்றைப் படுக்கைக்குக் கீழும் அவர் மறைத்து வைப்பதுண்டு.


ஆனால், தீபாவளிக்குச் சில தினங்களுக்கு முன்னர், தீமிதித் திருவிழா முடிந்த பிறகே என் அம்மா முறுக்குப் பிழியத் தொடங்குவார்.


அந்தப் பழக்கத்தை நானும் என் 3 அக்காமார்களும் இதுவரை தொடர்கிறோம்.


அதேபோல், தீபாவளியன்று எண்ணை தேய்த்துக் குளித்தபின் குடும்பத்தாருடன் வீட்டில் வழிபாடு செய்த பிறகே கோயிலுக்குப் போவோம்.


அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு நண்பர்கள் அதிகம் வருவார்கள். என் பெரியம்மாவின் பிள்ளைகளும் வருவதுண்டு.


காலையில் தொடங்கும் சமையல் இரவு 10 மணியைத் தாண்டியும் நீடிக்கும். விருந்தாளிகள் வயிறாறச் சாப்பிடுவதைப் பார்த்த மகிழ்ச்சியில் அம்மாவுக்கும் அக்காவுக்கும் களைப்பே தெரியாது.


என் திருமணத்திற்குப் பின் சில மாற்றங்கள் ஏற்பட்டன.


காலையில், என் மாமியார் வீட்டுக்குச் சென்று பசியாறிவிட்டு, பிற்பகலில் என் அம்மா வீட்டுக்குச் செல்வோம்.


இரவில் என் கணவரின் பாட்டி வீட்டில் கூடுவோம். அதனுடன் தீபாவளி நிறைவடையும்.


இந்த ஆண்டு சற்று வித்தியாசமான தீபாவளிக் கொண்டாட்டம்.
நண்பர்களையும் உறவினர்களையும் எங்கள் வீட்டுக்கு அழைத்தோம்.


வீட்டைத் துப்புரவு செய்வது, பலாகாரம் செய்வதற்கு என் பிள்ளைகளும் கைகொடுத்தனர்.


அப்போது பல நினைவுகளைப் பகிரும் வாய்ப்பும் கிட்டியது.
பாரம்பரியமும் தொடர்கிறது.
 

Top