பேசுவோமா

Images
  • Nature

பூமிக்காக...

( இரா. நடராசன் )

ஒரு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அதன் தலைமை நிர்வாகியிடம் எழுப்பிய சந்தேகம் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. அவர் கேட்ட கேள்வி இதுதான் – நம் நிறுவனத்தில் மறுபயனீட்டுத் திட்டம் இல்லையா? அவர் அந்தக் கேள்வியைக் கேட்டதற்குக் காரணம், உணவு, பானமருந்தும் பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகள் முறையாகப் பயன்படுத்தப்படாததுதான்.

பொதுவான குப்பையைப் போடவேண்டிய தொட்டியில் சிலர் பிளாஸ்டிக்கைப் போட்டிருந்தனர். அப்படியென்றால் பிளாஸ்டிக் / உலோகக் கலன்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள குப்பைத் தொட்டி எதற்காக இருக்கிறது? அதில் சேரக்கூடிய குப்பை மறுபயனீட்டுக்கு அனுப்பப்படுகிறதா என்று துப்புரவாளர்கள் அல்லது இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்குப் பொறுப்பானவர்களிடம் கேட்டபோது அப்படியேதும் இருப்பதாகத் தெரியவில்லை; எல்லாக் குப்பையும் ஒரே தொட்டியில் போடப்படுகிறது என்று பதில் வந்திருக்கிறது.

எது எப்படியிருந்தாலும் மத்திய குப்பைத் தொட்டிக்கு எல்லாக் குப்பையும் போகும்போது வீசவேண்டியது, மறுபயனீடு செய்யவேண்டியது என இருவகையாக அவை பிரிக்கப்படுகின்றன; அப்படிப் பிரிக்கப்படும் பொருள்கள் முறையே அப்புறப்படுத்தப்படுகின்றன அல்லது மறுபயனீடு செய்யப்படுகின்றன; அதனால் நிறுவனத்தில் மறுபயனீட்டுத் திட்டமில்லை என்ற கூற்றில் உண்மையில்லை என்றார் அந்தத் தலைமை நிர்வாகி.

இது போன்று பல நிறுவனங்களும் இப்போது மறுபயனீட்டுத் திட்டத்தைக் கொண்டுள்ளன. நிறுவனங்கள் மட்டுமல்லாது ஊழியர்களும் தங்கள் பங்கைச் செய்யவேண்டும் என்பதையே உணர்த்துகிறது மேற்குறிப்பிடப்பட்ட கருத்துப் பரிமாற்றம். பிளாஸ்டிக் குப்பைகளை அவற்றுக்கான தொட்டியில் போட்டால் அவற்றைப் பிரித்தெடுக்க வேண்டிய வேலையும் குறையும். நேரமும் மிச்சமாகும்.

குறிப்பாக ஏன் பிளாஸ்டிக்? அண்மை நாட்களில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சீர்கேடுகள் பற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆண்டுக்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு பெருங்கடல்களில் கலப்பதாக அறிவியல் சஞ்சிகை ஒன்று கூறுகிறது. சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மக்கள் குறைந்தது 1.76 பில்லியன் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்கிறது மற்றோர் ஆய்வு. பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி வரும் 20 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று பயமுறுத்துகிறது இன்னொரு மதிப்பீடு. பிளாஸ்டிக் மக்கிப்போக, பல நூறு ஆண்டுகள் ஆகலாம் என்பது கவலைக்குரிய செய்தி.

அதனால் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தேவையைக் குறைப்பது அல்லது அவற்றை மறுபயனீடு செய்வது அவசர அவசியமாகிறது. அப்படிச் செய்யும்போது பிளாஸ்டிக் உற்பத்தி அதிகரிக்கத் தேவையில்லை. அதனை அப்புறப்படுத்தும் சிக்கலும் குறையும். கடல்களை, கடற்கரைகளை, பூங்காக்களை, நமது சுற்றுப்புறத்தை, நமது ஒட்டுமொத்த பூமியைப் பாதுகாக்க அது ஓரளவேனும் உதவும். சுருங்கச் சொன்னால் பிளாஸ்டிக்கிற்கு எதிராக நாம் போர் தொடுக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதற்கு நாம் சின்னச்சின்ன வேலைகளைச் செய்தாலே போதும். அலுவலகங்களில் மட்டுமல்லாது வீடமைப்புப் பேட்டைகளிலும் மறுபயனீட்டுக்கென தனித்தனி குப்பைத் தொட்டிகள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிரமம் பாராமல் வீட்டில் சேரும் குப்பையைப் பிரித்தெடுத்து அவற்றுக்குரிய தொட்டிகளில் போடலாம். பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கவும் நாம் முயற்சி எடுக்கலாம்.
கடையில் பொருள்களை வாங்கிவரத் துணிப்பைகளை எடுத்துச் செல்லலாம். குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்திய பிறகு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களால்தான் பூமி அதிகம் மாசுபடுகிறது என்பதைச் சுற்றுப்புற ஆர்வலர்கள் சுட்டுகின்றனர். ஆகவேதான் பேரங்காடிகளில் வாடிக்கையாளர்களுக்குப் பிளாஸ்டிக் பை கொடுப்பதைச் சில நாடுகள் தடைசெய்துள்ளன.

கடற்கரைக்கோ பூங்காவுக்கோ செல்லும்போது குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தினாலே அது பூமிக்கு நாம் செய்யும் மிகப் பெரிய பங்காக இருக்கும். நிலத்திலிருந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் நாளடைவில் பெருங்கடல்களில் மீன்களை விட பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும் என்பது கணிப்பு. இந்த நிலை தொடர்ந்தால் என்னவாகும்? சற்று யோசித்துப் பார்ப்போம். செயல்படுவோம்.


அன்புடன்

இரா. நடராசன் 

 

Top