பேசுவோமா

Images
  • pesuvoma

எதிலும் நியாயம் இருக்கும்…

( பவளகாந்தம் அழகர்சாமி )

சிங்கப்பூரின் Polyclinic எனப்படும் பலதுறை மருந்தகங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அடிப்படை மருத்துவச் சேவைகளை வழங்கும் அவற்றைத் தீவு முழுவதும் பார்த்திருப்பீர்கள்.

அங்கு சென்றுவந்த அனுபவமும் உங்களுக்கு இருக்கும்.
நான் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை மருந்து வாங்கவும் பரிசோதனைகள் செய்துகொள்ளவும் யீஷுன் பலதுறை மருந்தகத்திற்குச் செல்வது வழக்கம்.

சுமார் ஓராண்டுக்கு முன்புவரை அது தற்காலிக இடத்தில் செயல்பட்டுவந்தது.

பரந்து விரிந்த இடம் அது. பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு, அமர்வதற்கும் காத்திருப்பதற்கும் அங்கு ஏராளமான நாற்காலிகள் போடப்பட்டிருக்கும்.

எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.

எந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்தாலும் அதற்கு முன்பே சென்று காத்திருப்பேன்.

பத்து மணிக்கு இரத்தப் பரிசோதனை என்றால் எட்டரை அல்லது ஒன்பது மணிக்கே சென்றுவிடுவேன்.

சென்ற ஆண்டு நடுப்பகுதியில் அந்த மருந்தகம் யீஷுனில் புதிய கட்டடத்திற்கு மாறியது.

பழைய தற்காலிகக் கட்டடத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருந்தது.

புத்தம்புதிய அடுக்குமாடிக் கட்டடம்.

பரந்து விரிந்த தோற்றம் இங்கு இல்லை.

முதல்முறையாக, சென்ற ஆகஸ்ட் மாதம் புதிய மருந்தகத்திற்கு நான் சென்றேன்.

வழக்கம்போல் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு ஒன்றரை மணிநேரம் முன்னதாகச் சென்றேன்.

உட்கார வெகுசில இருக்கைகளே, சுமார் 20 இருக்கைகளே இருந்தன. அத்தனையிலும் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள்.

எனக்கோ எரிச்சல். கோபம்.

மருந்தகத்தில் உட்கார்ந்து காத்திருப்பதற்கு வசதியில்லாமல் என்ன கட்டடம் கட்டியிருக்கிறார்கள் என்று எண்ணி,
நின்றுகொண்டே கொஞ்சநேரம் காத்திருந்தேன்.

பொறுக்க முடியவில்லை.

அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் ஏன் இருக்கைகள் மிகக் குறைவாக இருக்கின்றன என்று கேட்டேன்.

அதற்கு அவர், தங்களுக்குக் குறித்துக் கொடுக்கப்பட்ட நேரம் என்ன என்று கேட்டார்.

பத்து மணி என்றேன்.

“பத்து மணி என்றால், ஒன்பதே முக்காலுக்கு வந்தால் போதும்.
முன்கூட்டியே வந்து இடத்தை அடைத்துக் கொண்டிருக்கக்கூடாது என்பதால்தான் குறைவான நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடு“ என்றார் அதிகாரி.

யோசித்துப் பார்த்தேன்.

அவர் சொல்வதில் நியாயம் இருப்பதைப் புரிந்துகொண்டேன்.

காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட அற்புதமானதொரு திட்டம் இது.

தரமான சேவை வழங்கவேண்டும் என்பதில் நமது பலதுறை மருந்தகங்கள் எண்ணற்ற முயற்சிகளை எடுத்துவருகின்றன.

அவற்றை உன்னிப்பாகக் கவனிக்கும்போது,
பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

எதையும் குற்றங்குறையாகப் பார்க்காமல்
நிறைவாகப் பார்க்க ஆரம்பித்தால், நிம்மதியும் மகிழ்ச்சியும் நம் கையில்!

அன்புடன்
பவளகாந்தம் அழகர்சாமி
 

Top