Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

ரௌத்ரம் பழகு

மகாகவி பாரதி சொன்ன அறிவுரை - "ரௌத்ரம் பழகு". கோபத்தைக் கைவிட வேண்டுமென்று பொதுவாகப் பெரியவர்கள் ஆலோசனை சொல்வதுண்டு. 

வாசிப்புநேரம் -

மகாகவி பாரதி சொன்ன அறிவுரை - "ரௌத்ரம் பழகு".
கோபத்தைக் கைவிட வேண்டுமென்று பொதுவாகப் பெரியவர்கள் ஆலோசனை சொல்வதுண்டு.

அது பாரதிக்குத் தெரியாதா? ஆனாலும் ஏன் அப்படிச் சொன்னான்?
எண்ணும் கணந்தோறும் வியப்பு. மண்டை குழம்பிச் சிண்டைப் பிய்த்துக்கொண்டு யோசித்தபோது புரிந்தது பாரதி சொன்னதன் சூட்சுமம்.

மனிதனுக்கு வழங்கப்பட்ட இயல்பான உணர்ச்சிகளில் ஒன்று கோபம். அந்த உணர்வு இருந்தால்தான் இங்கே பலர் மனிதர்களாகவே மதிக்கப்படுகிறார்கள்.


"அவன் என்னெல்லாம் செய்றான் ஒனக்குக் கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கா?" என்று கனல் மூட்டும் வார்த்தைகளை அவ்வப்போது கேட்டதுண்டு.


"கோபப்படவேண்டிய நேரத்தில், இடத்தில் ஒருவன் கோபம் கொள்ளவில்லையென்றால் அவன் கழுதை" என்கிறார் ஓர் அறிஞர்.
உரிய தருணத்தில் உக்கிரமூர்த்தி அவதாரம் எடுத்தே ஆக வேண்டும் என்பதைத்தான் பழங்காலப் புராணங்கள் பல சுட்டிக்காட்டுகின்றன.

பாரதி வெறுமனே "ரௌத்ரம் கைக்கொள்" என்று கூறியிருக்கலாம். ஏன் "பழகச்" சொன்னான். இயல்பான குணத்தைப் பழகிப் பழக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால், அகுங் எரிமலைபோல் திடீரெனப் பொங்கிப் பிரவகிக்கும் கோபத்தைச் சட்டெனக் கொட்டிவிடக்கூடாது. அதற்காகத்தானோ என்னவோ "ரௌத்ரம் பழகு" என்று பாரதி சொன்னதாக எனக்குப்படுகிறது.

பாம்பு ஒன்று ஞானியிடம் சென்று தமக்கு ஏதாவது உபதேசம் செய்யுமாறு கேட்டது. (பாம்பு பேசுமா? என்று வில்லங்கமாகக் கேட்பவர்கள் விலகிச்சென்று விலங்குநல இயக்குநர் இராமநாராயணன் படங்களை விடாமல் ஒன்பதுமுறை முறைவைத்துப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது கும்பமுனி சாஸ்திரம்)

"யாருக்கும் தொல்லை தராதே. அது போதும்" என்றார் ஞானி.
திருப்தியாகத் திரும்பியது பாம்பு. வீதியோரம் அமைதியாகப் படுத்துக்கிடந்த "நாக"ராஜாவைப் போவோர் வருவோர் எல்லாம் "சீண்டிப்" பார்த்தார்கள். என்ன ஆச்சர்யம்! ஞானியின் உபதேசத்தைப் (தலை)"பட"மேற்தாங்கிப் பவ்யமாகப் படுத்துக்கிடந்தது பாம்பு.

‘எம்புட்டு அடிச்சாலும்’ தாங்கும் "நல்ல பாம்பாய்" அது மாறிவிட்டதைக் கண்டு வழிப்போக்கர்களுக்கு உற்சாகம்.

வருவோர், போவோர் தவிர தூரத்திலிருக்கும் சொந்தங்களுக்கும் கைபேசியில் அழைத்து "டேய் நண்பா... ஒரு "நல்லது" சிக்கிக்கிடக்கு. நல்ல நேரத்தில் வந்தால் நீயும் நல்லாப் பார்த்துக்கலாம்... நாலு போடு போட்டுக்கலாம்" என்று தெறிக்கவிட்டனர்.

‘இனிமேலும் இங்கே கிடந்தால் முதலுக்கே மோசமாகிவிடும்’ என்று நினைத்த பாம்பு ஞானியிடம் சரணடைந்தது.
பொன்போல் மின்னும் மேனி, கடும் அடிபட்டு இரத்தச் சேற்றில் கன்னிப்போயிருந்தது.

துடித்துப்போன ஞானி "என்ன நேர்ந்தது?" என்று விழியுயர்த்திக் கேட்டார்.

பதறிக் கதறி ‘புஸ்..புஸ்...’ என்று... நடந்ததைச் சொன்னது நாகம்.

"அட முட்டாள் பாம்பே... யாருக்கும் தொல்லை தராதே என்றுதானே சொன்னேன். குறைந்தபட்சம் நீ கொஞ்சமாவது சீறியிருக்கலாமே" என்றார். பாம்புக்கு விளங்கியது தவறு எங்கே நேர்ந்தது என்று.....
கோபம் இயற்கையான பண்பு.

அது இல்லாவிட்டால் பிரச்சினைகளிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளும் அடிப்படைத்தன்மையை மனிதன் இழந்துவிடுவான். எனவேதான் நன்னெறிகளைப் போதிக்கும் எவரும் "கோபத்தைக் கைவிடு" என்று உபதேசம் செய்வதில்லை.

இயற்கையான பண்பை எப்படிக் கைவிட முடியும்.

அதனால்தான் ‘கோபத்தைக் கட்டுப்படுத்து....அடக்கி ஆள்’ என்று சொல்கிறார்கள்.


‘வீரம் உடலின் ஆற்றல் அல்ல. அது உள்ளத்தின் பண்பு’ என்கிறார் மகாத்மா காந்தி.

உரிய நேரத்தில் கோபப்பட மனத்தைப் பழக்க வேண்டும்.
என்ன "ரௌத்ரம் பழகலாமா.....?"

அன்புடன்

K H M ஸதக்கத்துல்லாஹ்




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்