Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

பாடு ஆடு கொண்டாடு

நம்மில் பலர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிடித்த பாடலைத் தொலைக்காட்சியில் பார்த்தால் ஒலி அளவைக் கூட்டிக் குழந்தை போல் நடனமாடியிருப்போம் அல்லது அந்தப் பாடலுடன் சேர்ந்து நாமும் பாடியிருப்போம்.

வாசிப்புநேரம் -

நம்மில் பலர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிடித்த பாடலைத் தொலைக்காட்சியில் பார்த்தால் ஒலி அளவைக் கூட்டிக் குழந்தை போல் நடனமாடியிருப்போம் அல்லது அந்தப் பாடலுடன் சேர்ந்து நாமும் பாடியிருப்போம்.

நானும் அது போல் பல முறை செய்துள்ளேன்...

காரணம்... நல்ல பாடலும் இசையும் செவிக்கு என்றும் திகட்டாத விருந்தாக அமையும். சில நேரம் அவை நல்ல மருந்தாக மாறும் வாய்ப்பும் உண்டு.

ஒரு நல்ல பாடலைக் கேட்கும்போது மனத்தில் அளவில்லா ஆனந்தம் பிறக்கும்.

காலை எழுந்ததும் வானொலி கேட்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

சில பாடல்கள் அந்த நாளை நம்பிக்கையுடன் சந்திக்கத் தூண்டுகோலாக இருக்கும். நேர்மறையான எண்ணங்களை உருவாக்கவும் அவை உதவும்.

பாடல்கள் கால இயந்திரத்திற்கு இணையானவை என்பது என் நம்பிக்கை...

ஏனென்றால் சில பாடல்கள் நாம் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்த காலத்தைக் கண்முன் கொண்டுவரும்.

நமக்குப் பிடித்த பாடல் எங்கோ ஒரு மூலையில் ஒலிக்கும்போது அந்தப் பாடல் வரிகளை உதடுகள் நமக்கே தெரியாமல் முணுமுணுக்கத் தொடங்கும். அது நமக்குப் பல நினைவுகளைக் கிளறிவிடும்.

நம்மைச் சுற்றி மோசமான நிகழ்வுகள் நடக்கும்போதுகூட அவற்றிலிருந்து மீண்டுவரப் பாடல்கள் பக்கபலமாக இருக்கின்றன. அதேபோல்தான் மனம் சோகத்தில் வாடும்போதும் பாடல்கள் அறிவுரை கூறும். நல்ல நண்பனாகவும் மாறும்.

தொழில்நுட்பம் வளரவளர இசையும் புதிய பரிமாணத்தை எடுக்கிறது. அதனால்தானோ என்னவோ புரியாத மொழியில் பாடல்கள் வந்தாலும் மக்கள் அவற்றை விரும்பிப் பலமுறை கேட்கின்றனர்.

பாடல்களுக்கும் இசைக்கும் வயதுவரம்பு இல்லை என்பது நமக்குத் தெரிந்த தகவல்தான். 1980களில் வந்த பல பாடல்களுக்கு இன்றைய இளையர்கள் புது வடிவம் (remix) கொடுப்பார்கள். அதுதான் அவற்றின் பலம்.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஒருவருக்கு நல்ல தோழனாக உருவெடுத்துள்ளது இசை. இதற்குச் சான்று பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோரின் காதுகளில் குடியேறியுள்ள Headphone-கள்.

சிலர் பாடல்கள் கேட்டவாறு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். சோர்வு தெரியாமல் மனநிலை உற்சாகமாக இயங்குவதற்கும் பாடல்கள் உறுதுணையாக இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

ஆண்டுக்கு ஆயிரக் கணக்கான பாடல்கள் வெளியாகின்றன. ஆனால் மக்கள் மனத்தைக் கொள்ளையடிப்பவை சில பாடல்களே...

‘உன்னால் முடியும் தம்பி, உனக்குள் இருக்கும்
உன்னை நம்பி’ என்ற பாடல்தான் எனது கைத்தொலைபேசியில் அதிகமாகப் கேட்கப்பட்ட பாடல்.
நான் அதிக நம்பிக்கையுடன் காணப்படுவதாக நண்பர்கள் சொல்வார்கள். இந்தப் பாடல்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

உங்கள் மனதிற்குப் பிடித்த இரண்டு பாடல்களை அன்றாடம் கேட்டுத்தான் பாருங்களேன். அவை உங்கள் முகத்தில் சிறு புன்னகையையாவது உண்டாக்கும்.

‘நாளை நமதே... இந்த நாளும் நமதே...’ என்ற எண்ணத்தைக்கூட அவை மனத்தில் விதைக்கலாம்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்