பேசுவோமா

Images
  • beach
    (கோப்புப் படம்: அபிடா பேகம்)

“காற்றுவாங்கப் போனேன்’’

கடல் அலையின் சத்தம்,

உப்பு கலந்த குளிர் காற்று,

வெதுவெதுப்பான மணல்...

பொதுவாகவே பலருக்கும் கடற்கரைக்குச் செல்வது என்றால் மிகவும் பிடிக்கும்.

எனக்கும்தான்...

மனத்தில் குழப்பங்கள் எழும்போது...

சிக்கல்கள் ஏற்படும்போது....

ஒருவகை சஞ்சலம் உண்டாகும்போது...

உள்ளம் கடற்கரைக்குச் செல்ல ஏங்கும்...


பறவைகளின் சத்தம், குழந்தைகளின் சிரிப்பொலி, தொலைவில் சிறிதாகத் தெரியும் பெரிய கப்பல்கள்... இவையெல்லாம் கடற்கரைக்கு என்னை இழுக்கும் அம்சங்கள்.

அலைகளைக் காணும்போது என்னுள்ளே ஓர் அமைதி ஏற்படும்.
கரையோரம் காலார நடக்கும்போது... எதுவாக இருந்தாலும் அதுவும் கடந்துபோகும் எனத் தோன்றும்.

கடல் பெரும்பாலும் நீலம், பச்சை நிறங்களில் காட்சியளிக்கும்.
அந்த நிறங்களுக்கு மனத்தை அமைதியான நிலைக்குக் கொண்டுவரும் தன்மை உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அத்துடன் சிறுவயதில் கடற்கரைக்குச் சென்ற பல இனிய நினைவுகள் கண்முன்வரும்... அது முகத்தில் ஒரு புன்முறுவலை உண்டாக்கும்...


அப்பாவுடன் பட்டம் விட்ட ஞாபகம்.
அம்மா செய்த ‘நாசி லெமாக்’கைக் கடற்கரை மணலில் உட்கார்ந்து சுவைத்த ருசி இன்னும் நாவில் இருக்கிறது.

மாமாவோடு மணல்வீடு கட்டிய நினைவு... அது கடல் அலையில் கலைந்தபோது கண் கலங்கியது. அப்போது மாமா சொன்ன வார்த்தைகள் இன்னும் காதில் ஒலிக்கின்றன.


வாழ்க்கையில் பல அம்சங்கள் தற்காலிகம். இந்தத் தருணம் நம் கையில் இருக்கிறது. அதை முடிந்தவரை சிறப்பாக வாழவேண்டும். கைவிட்டுப்போன பிறகு வருத்தப்படக்கூடாது என்று அவர் அன்று சொன்னார்.

நான் கடற்கரைக்குப் போகும் ஒவ்வொரு முறையும், குவிந்துகிடக்கும் மணல்வீடுகள் மாமாவின் சொற்களை எனக்கு நினைவூட்டும்.கடற்கரையை விட்டுத் திரும்பும்போது மணலைக் காலிலிருந்து தட்டிவிடுவதுபோல... கவலைகளையும் அங்கு விட்டுவருவது போன்ற ஓர் உணர்வு...

கடற்கரைக்குச் சென்றுவந்த நாள்களெல்லாம், வழக்கத்தைவிட நான் நன்றாகவே தூங்குவதுண்டு. அலைகளின் சத்தம் தொடர்ந்து எனக்குத் தாலாட்டு பாடுவதுபோலவே இருக்கும்.

கவலைகளைக் கைவிட்டு, உற்சாக நிலைக்கு உடனே திரும்ப எனக்குக் கைகொடுப்பது கடல்.
உங்களுக்கு எப்படி?

அன்புடன்

அபிடா பேகம்
  

Top