பேசுவோமா

Images
  • love

கொஞ்ச(...) நேரம் வேண்டும்...

வேலை. வாழ்க்கை.
இரண்டு விதமான பொறுப்புகளையும் சமாளிக்க 24 மணி நேரம் போதவில்லை என்கிறீர்களா?
அதிலும் வேலைக்குச் செல்லும்போது கதவுக்குப் பின்னால் நின்று... அம்மா அல்லது அப்பா யாராவது உடன் இருக்கமாட்டார்களா என ஏங்கும் பிள்ளைகள்...
கிட்டத்தட்ட எல்லா வீட்டிலும் அன்றாடம் நடக்கும் ஒன்று.

கடினம்தான்.... மனஉளைச்சல்தான்... ஆனால் யதார்த்தத்தை மாற்ற முடியுமா? வேலையிலிருந்து தினமும் ஓய்வெடுக்கத்தான் முடியுமா?

முடியாதுதானே!

பிறகு பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க என்னதான் வழி?

நான் பின்பற்றும் 5 குறிப்புகள்...


1) பிள்ளையுடன் தினமும் ஒரு வகையில் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி எடுங்கள். (connect time) அது நேரடியாக இருக்கலாம். பிள்ளையின் உணவுப் பையில் சிறிய குறிப்பை எழுதி வைக்கலாம். பிள்ளையின் அறைக் கதவு மீது ஏதேனும் எழுதி வைக்கலாம். ஏன், WhatsAppஇல் அழகிய காணொளி அல்லது குரல் பதிவை அனுப்பலாம்.

2) பிள்ளையுடன் ஏதேனும் ஒரு நடவடிக்கையில் தினமும் கட்டாயம் ஈடுபடவேண்டும். உதாரணத்துக்கு, உறங்குவதற்கு முன் பிள்ளையுடன் புத்தகம் படிப்பது. காலையில் ஒன்றுசேர்ந்து உடற்பயிற்சி செய்வது.

3) பிள்ளையிடம் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் உங்களது அன்பை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு அவர் எந்த அளவு முக்கியம் என்பதை மனதாரத் தெரிவியுங்கள்...

4) பிள்ளையைப் பாராட்டுங்கள். உதாரணத்துக்கு, பிள்ளை நீங்கள் சொல்லாமலேயே துணிகளை எடுத்து வைத்தாலோ அல்லது புத்தகங்களை அடுக்கி வைத்தாலோ உடனடியாகப் பாராட்டுங்கள்.

5) பிள்ளையுடன் இருக்கும்போது (அது அரை மணி நேரமாகக்கூட இருக்கலாம்) தொழில்நுட்பம், கைபேசி போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள். உதாரணமாக, தொலைபேசி அழைப்பை எடுக்கவேண்டாம்.

இந்தக் குறிப்புகள் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை வளர்க்கும்... வலுவாக்கும் என்பது நான் கண்டறிந்த உண்மை.

பரபரப்பான இன்றைய வாழ்க்கைச்சூழலில் எவ்வளவு நேரம் என்பதைவிட தரமான நேரத்தைப் பிள்ளைகளுடன் செலவிடுகிறோமா என்பதுதான் முக்கியம்!

சிறு வயதில் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் பிணைப்பு காலப்போக்கில் நமது பிள்ளைகளுடன் நல்ல, வலுவான உறவுக்குப் பாலமாக அமையும்... அடித்தளத்தை ஏற்படுத்தும்.

சுலபமான வழிமுறைகள்தான்... தொடர்ந்து கடைப்பிடிக்க தீர்க்கமான மனப்போக்கு வேண்டும்...

செய்துபாருங்கள்...
உங்கள் பிள்ளைகளுடன் நண்பர்களாகுங்கள்!


அன்புடன்
இலக்கியா செல்வராஜி
 

Top