Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

‘இல்லை’யின் மகிமை

இந்தச் சொற்களை  மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே அதிகம் நிலவும். இந்த இரு வார்த்தைகளையும் மற்றவர்களிடம் சொல்லும்போது, சுயநலவாதி என்று கருதப்படுவோம் எனும் அச்சமே அதற்குக் காரணம்.

வாசிப்புநேரம் -

இல்லை. முடியாது.

இந்தச் சொற்களை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே அதிகம் நிலவும். இந்த இரு வார்த்தைகளையும் மற்றவர்களிடம் சொல்லும்போது, சுயநலவாதி என்று கருதப்படுவோம் எனும் அச்சமே அதற்குக் காரணம்.

சிறு வயதில் என் நண்பர்கள் விளையாடுவதற்குப் பொம்மைகளைக் கேட்டால் ‘இல்லை’ எனச் சொல்லக்கூடாது என்று அம்மா அடிக்கடி கூறுவார். பள்ளிப் பருவத்தில் மற்றவர்கள் உதவி கேட்டால் ‘முடியாது’ என்று சொல்லாதே என்பார் அப்பா.

இளம் வயதில் பிரச்சினை வந்தபோதெல்லாம், நண்பர்கள், ‘இல்லை’ என்று சொன்னதில்லை.

இவ்வாறு “இல்லை” என்ற சொல்லை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்பது மனத்தில் பதிந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் ‘ஆமாம் சாமி’ போடத் தொடங்கினேன்.

அண்மையில்தான் ‘இல்லை’ என்று சொல்வதன் மகிமையை உணர்ந்தேன்.

சில தருணங்களில் ‘இல்லை’ என்ற சொல் நமக்கு மனநிம்மதியைத் தருகிறது, வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது.

ஒருவர் அவருடைய கருத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது சில நேரங்களில் நம் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

மாற்றுக்கருத்தை வெளியில் சொல்லாமல், “நமக்கு ஏன் இந்த எதிர்த்துப் பேசும் வேலை?” என்று சொல்லி நம்மை நாமே முடக்கிக்கொள்வோம்.

நாம் பகிர்ந்துகொள்ளும் கருத்துச் சரியானதா என்ற ஐயமும் மனத்தில் எழலாம். எனினும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதுதானே நல்லது.

மாற்றுக்கருத்தை ஒருவர் சொல்லும்போது ஆரோக்கியமான விவாதம் இடம்பெற வாய்ப்புண்டு. அவர்கள் ஏன் அவ்வாறு சிந்திக்கின்றனர் என்று தெரியவரும்.


சில வேளைகளில் இல்லை என்பதைச் செயலிலும் காட்ட வேண்டும். வீடு, வேலை, நண்பர்கள், என வாழ்க்கையை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் எப்போதும் சிறந்து விளங்குவதைக் கொள்கையாக வைத்துச் செயல்படுகிறோம். ஆனால் மூன்றிலும் எந்நேரத்திலும் சிறந்து விளங்கவேண்டும் என்று முழுமூச்சாக இறங்கும்போது நமக்கென நேரத்தை வகுத்துக்கொள்ள மறந்துவிடுகிறோம்.

நமக்கென நேரம் ஒதுக்கும்போது மற்றவற்றுக்கு நேரம் கொடுக்கத் தவறுகிறோம் என்ற எண்ணத்தைத் தூக்கிப்போட வேண்டும். நம்மை நாமே கனிவுடன் பாராவிட்டால் வேறு யார் அவ்வாறு செய்யப்போகிறார்?. ‘என்னால் அனைத்தையும் எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது’, என்பதை உணரவேண்டும். அது தவறில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவுவது நல்ல பண்பு. ஆனால் அந்த உதவி பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடாது. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட நண்பர் பணம் கேட்டால், ஒரு முறை கொடுக்கலாம். கொடுத்த கடனை அடைக்காமல் மீண்டும் பணம் கேட்டுவரும் நண்பருக்குத் தொடர்ந்து உதவுவதால் நன்மை இல்லை.

வாழ்க்கையில் சந்திக்கும் சிலர் பிரச்சினை என்று உதவி கேட்டு வந்தால் ஆலோசிக்கலாம். ஆலோசனையைக் கேட்டும் அதே பிரச்சினையில் சிக்கிக்கொண்டால் நாம் கொடுத்த ஆலோசனைக்கு மதிப்பு இல்லை என்று அர்த்தம். அப்போது அவர்களுக்கு மீண்டும் நேரத்தை வீண் செய்து அறிவுரை வழங்குவதில் பயன் இல்லை என்பதை உணரவேண்டும்.


‘இல்லை, முடியாது’ எனும் சொற்களை அவ்வப்போது பயன்படுத்தும்போது அவற்றுகென ஒரு தனி மதிப்பு இருக்கும். அடுத்த முறை, சரியான நேரம் வரும்போது நீங்கள் நினைப்பது சரி என்று எண்ணும்போது இல்லையென்று சொல்லிப்பாருங்களேன். மனத்தில் புதுவகை துணிச்சல் பிறக்கும்.
இப்போது புரிகிறதா நான் ஏன் இதைப் பற்றிப் பேசினேன் என்று.
அன்புடன்,
காயத்திரி
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்